சீயான் விக்ரமின் ‘மகான்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

 

ஆக்ஷன் திரில்லர் படமான ‘மகான்’ படத்திலிருந்து துள்ளலான கானா பாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘மகான்’. சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகும் அறுபதாவது திரைப்படமான இதிலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. ‘எவன்டா எனக்கு கஸ்டடி..’ எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்க, பாடலுக்கு இசை அமைத்து, சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் ‘யெவ்வர்ரா மனகி கஸ்டடி..’ என்றும், மலையாளத்தில் ‘இனி ஈ லைப்ஃபில்..’ என்றும், கன்னடத்தில் ‘யவனோ நமகே கஸ்டடி..’ என்றும் வெளியாகியிருக்கிறது.

சீயான் விக்ரம் நடித்த ‘மகான்’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தில் சீயான் விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ‘மகான்’ வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு ‘மகா புருஷா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

மகான் என்பது, தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதன்போது அவரது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே..! என்ற இழப்பை உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா.. என்பதை பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக ‘மகான்’ உருவாகியிருக்கிறது. எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது ‘மகான்’ படத்தின் திரைக்கதை.

தமிழில் வெளியாகியிருக்கும் ‘எவன்டா எனக்கு கஸ்டடி..’ எனத் தொடங்கும் பாடலின் லிங்க்…