விஜய் பாணியில் அஜித்-சிலை ரெடியாகுது!

0
317

நம்ம கோலிவுட்டில் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாகக் எகிறிக்கொண்டே போகும் டாப் ஹீரோ அஜித். எந்த ஒரு நடிகருமே தங்கள் ரசிகர் மன்றத்தை கலைத்ததாக சரித்திரமில்லை, ஆனால் திடீரென்று “நான் எனது ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன். முதலில் குடும்பத்தை கவனியுங்கள்” என்று கூறிய பிறகு இவரின் ஃபேன்ஸ் கூட்டம் முன்னிலும் பல மடங்கு எகிறி விட்டதாம்.

இந்நிலையில் நம் தமிழின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டாடும்விதமாய் அவர்களின் ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் மூலம் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போதும் பிறந்த நாளின் போதும் கட் அவுட், போஸ்டர், ரத்த தானம் என்று செய்து  வருகின்றனர். அதையும் தாண்டி ஒரு சிலருக்கு  ரசிகர்கள் சிலை வடித்து வரும் போக்கும் ஆரம்பித்து விட்டது. அந்த வகையில்  விஜய் ரசிகர்கள் விஜய்க்கு சிலை எடுத்திருந்தனர். இதையடுத்து தர்போது கும்பகோணத்தைச் சார்ந்த அஜித் ரசிகர்கள் அஜித்துக்கு சிலை எடுத்து வருகின்றனர்.

அஜித்-தின் ‘விவேகம்’ படத்தின் அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் ‘சர்வைவா’, ‘தலை விடுதலை’ ஆகிய பாடல்கள் பெரிதளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவரும் நிலை யில்தான் தற்போது கும்பகோணம் அஜீத் ரசிகர்கள் அவருக்குச் சிலை உருவாக்கி வருவது இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்தான உறுதியான தகவலை அஜித் ரசிகரான அஜித் முரளி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அநேகமாக விவேகம் ரிலீஸாகும் நாளன்று இச்சிலை திறப்பு விழா நடக்கக்கூடும் என்று தெரிகிறது.

இந்நிலையில், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்றும், ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகின. இதனை படக்குழு மறுத்திருக்கிறது. “உறுதியாக ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும். படத்தின் கிராபிக்ஸ் பணிகளை முன்பே தொடங்கிவிட்டதால், திட்டமிட்டப்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. எவ்வித தொய்வுமில்லை. விரைவில் படத்தின் தணிக்கைக்கு விண்ணப்பிக்கவுள்ளோம்” என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.