இந்தப்படத்தை முழுசாக பார்த்த ஒரே ஆள் உதயநிதி தான்- சுந்தர் சி

0
262

ரெட் ஜெயன்ட் மூவிஸ், உதயநிதி ஸ்டாலின் வழங்க, கமர்ஷியல் காமெடி இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெற்றிகரமான மூன்றாவது பாகமாக உருவாகியுள்ள படம் அரண்மனை 3. தமிழில் பேய்படங்களை குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும் வண்ணம் மாற்றிய படம் தான் அரண்மனை. திரைப்படம் நகைச்சுவை படங்களுக்கு, பெயர் பெற்றவரான இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில், குடும்பங்கள் கவலை மறந்து சிரித்து கொண்டாடும் வகையில் அரண்மனை 3 உருவாகியுள்ளது. ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலா ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரை கொள்ளாத அளவில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. இவ்வருடம் நம்மை வட்டு பிரிந்த நகைச்சுவை மன்னன் விவேக் அவர்கள் இப்படத்தில் மக்களை மகிழ்விக்கும் முழுமையானதொரு நகைச்சுவை பாத்திரதில் நடித்துள்ளது குறிப்பிடதக்கது. அரண்மனை முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில், அரண்மனை 3 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அக்டோபர் 14 உலகம் முழுதும் வெளியாகும் இப்படத்தை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி வெளியிடுகிறார். படவெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் செண்பகமூர்த்தி, இயக்குநர் சுந்தர் சி, நாயகன் ஆர்யா, ராஷிக்கண்ணா, சாக்‌ஷி அகர்வால், மனோபாலா, இசையமைப்பாளர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்…

இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது…..
அரன்மனை 1, 2 வெற்றியை தொடர்ந்து இப்போது அரண்மனை 3 படத்த்துடன் வருகிறோம். எல்லோரும் உங்களுக்கென்ன சார் ஜாலியா அரண்மனை படங்களை எடுத்து விடுகிறீர்கள் என்கின்றனர், ஆனால் தொடர் பாகங்களை எடுப்பது தான் இருப்பதிலேயே கஷ்டமான விசயம். ஏனென்றால் புதுசா ஒரு படம் எடுக்கும்போது ஆடியன்ஸ் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவார்கள், அதனால் படமும் ஹிட்டாகிவிடும் ஆனால் ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தின் பாகம் எடுக்கும் போது, அதில் ஏற்கனவே இருந்த விசயங்களுடன் புதிதாகவும் எதிர்பார்ப்பார்கள், அதனால் அரண்மனை எடுப்பது மிகவும் சவாலான விசயம். ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் எனக்கு நல்ல லாபம் கொடுத்த படம் அரண்மனை. அதனால் அதன் பாகத்தை எடுக்கும் போது, நல்ல கதை நடிகர்கள் கிடைக்க வேண்டும் என நினைத்தேன. அந்த வகையில் இந்த படத்தில் நல்ல கதையுடன், சிறந்த நடிகர் பட்டாளமும் கிடைத்தது. ஆர்யா தயாரிப்பாளர்கள மிகவும் விரும்ப கூடிய நாயகன். சம்பளம் வாங்கிக்கொண்டு ஒதுங்கி விடாமல், இப்போது படத்தின் ரிலீஸ் வரை, பெரும் அக்கறையுடன் இருக்கிறார். ராஷிக்கண்ணா ஒரு நல்ல நடிகை நல்ல பாத்திரம் செய்துள்ளார். படம் முடிவதற்குள் தமிழ் கற்றுக்கொண்டு விட்டார் அவரது அர்ப்பணிப்பு அவரை பெரிய இடத்திற்கு எடுத்து செல்லும். இந்தப்படத்தில் நடிகர் விவேக் ஒரு மிகச்சிறந்த பாத்திரம் செய்துள்ளார். எங்களுக்கெல்லாம் உடம்பை பார்த்து கொள்ள நிறைய அட்வைஸ் செய்வார். அவருக்கு இந்தப்படம் கடைசிப்படமாக இருக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைப்பற்றி மறக்க முடியாத நினைவுகள் நிறைய இருக்கிறது. அவருக்கு எங்கள் குழு சார்பில் அஞ்சலிகள். ஏ சி சண்முகம் சார், என் பேனரில் முதல் படம் நீங்கள் தான் செய்ய வேண்டும் என்று 10 வருடம் முன்பே சொன்னார். நல்ல புராஜக்ட் வரும்போது சொல்கிறேன் என்றேன் அதே போல் இந்தப்படத்தை செய்துள்ளார். அவர் மகன் இங்கு வந்துள்ளார் மிகப்பெரிய இடத்தில் இருந்துகொண்டு மிக எளிமையாக இருக்கிறார். அரண்மனை 1 உதயநிதி சார் தான் ரிலீஸ் செய்தார். அந்தப்படம் வெளியான போது நிறைய பயத்தில் இருந்தேன், ஆனால் அவர் வந்து பொக்கே கொடுத்து வாழ்த்தினார். இப்போது அரண்மனை 3 படத்தை ரிலீஸ் செய்கிறார். இந்தப்படத்தை முழுசாக பார்த்த ஒரே ஆள் உதயநிதி தான் பார்த்துவிட்டு வாழ்த்தினார். முதல் படத்திற்கும் இந்தப்படத்திற்கும் முதல் வாழ்த்து தெரிவித்தவர் அவர்தான். நான் ஒரு சிம்பிள் டைரக்டர். என்னிடம் மக்களுக்கு அறிவுரை செய்யும் புரட்சிக் கருத்துக்கள் எதுவும் இல்லை. என் படம் பார்ப்பவர்கள் கவலை மறந்து சிரித்து மகிழ வேண்டும். இந்தப்படம் அரண்மனை 3 முந்தைய பாகங்களை விட பிரமாண்டமாக இருக்கும். விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து முழுக்கதையை சொல்லாதீர்கள். திருவிழா காலத்தில் திரையரங்கில் திருவிழா போல் இப்படம் இருக்கும். அரண்மனை 3 குடும்பங்களோடு பார்த்து கொண்டாடுங்கள் நன்றி.

 

நடிகர் மனோபாலா பேசியதாவது….

45 நாள் குஜாரத்தில் தங்கியிருக்கும் போது, நமக்கு டயலாக் மட்டும் தான் கொடுப்பார்கள் என்று தான் இருந்தேன். சுந்தர் சி ஒரு சின்ன ஆக்சன் சீக்வன்ஸ் தான் உங்களை கழுத்தில் தூக்கி வைத்து சுற்றுவார்கள் என்றார்கள. அப்படியே சுத்தி முதுகெலும்பை உடைத்து விட்டார்கள். இந்தப்படம் ஒவ்வொரு காட்சியும் சிரித்து மகிழும்படி இருக்கும். யோகிபாபுவுக்கும் எனக்கும் படம் முழுதும் நல்ல காட்சிகள் கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் நான் அதிகம் மிஸ் செய்வது விவேக் சாரைத்தான். அவரது இழப்பை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இந்தப்படத்தில் இசையமைப்பாளர் C சத்யாவை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் அருமையான இசையமைப்பு. சுந்தர் சி மாதிரி ஒரு இயக்குநர் கிடைக்க மாட்டார் அவர் நிறைய படங்கள் எடுக்க வேண்டும் அதில் நான் தொடர்ந்து நடிப்பேன் நன்றி.

நடிகை சாக்‌ஷி அகர்வால் பேசியதாவது….

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அரண்மனை ஒரு நல்ல தொடர் பாகம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த பாகத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு சுந்தர் சி சாருக்கு நன்றி. என்னை டப்பிங் செய்ய சொன்னார்கள். எனக்கே புதிதாக இருந்தது சின்ன பாத்திரம் என்றாலும் நன்றாக இருக்கும். படம் பார்த்து ரசியுங்கள் நன்றி.

இசையமைப்பாளர் C சத்யா பேசியதாவது…..

எனது 25 வது படத்தில் சுந்தர் சி சாருடன் வேலை பார்த்தது சந்தோஷம். ஒரு நாள் எடிட் முடித்து படம் பார்க்க கூப்பிட்டார். மியூசிக் ஸ்கோர் இல்லாமல் நான் தான் இந்தப்படத்தை முதலில் பார்த்தேன். ஒரு எபிக் படத்தை பார்த்த திருப்தி இருந்தது. அவர் மிகக்குறைந்த நேரத்தில் இசையமைக்க சொன்னார், கொரோனா வந்து எனக்கு நிறைய டைம் கிடைத்தது. விவேக் சார் இந்படத்தில் வேலை செய்த போது நிறைய பேசினார். இசை பற்றி நிறைய பேசுவார். ஒரு படத்தை இயக்கப் போகிறேன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது இழப்பு எதிர்பாராரதது. இந்தப்படத்தில் அவரை எல்லோரும் ரசிப்பீர்கள் இந்தப்படத்தில் கேமரா ஒர்க்கை நான் அதிகம் ரசித்தேன். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி

நடிகை ராஷிக்கண்ணா பேசியதாவது…

உங்கள் எல்லோருக்கும் அரண்மனை மிகப்பெரிய வெற்றித்தொடர் என்பது தெரியும் அதன் மூன்றாவது பாகத்தில் நடிப்பது மகிழ்ச்சி. சுந்தர் சி, குஷ்பு மேடத்திற்கு நன்றி. பட வெளியீட்டுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப்படம் தியேட்டரில் கொண்டாடி பார்க்க வேண்டிய படம், தியேட்டரில் வெளியாவது மகிழ்ச்சி. உதயநிதி அவர்கள் இப்படத்தை மிகப்பபெரிய அளவில் வெளியிடுகிறார். அவருக்கு என் நன்றி. ஆர்யா பற்றி சொல்ல வேண்டும் அவரை சார்பட்டாவில் பார்த்து பிரமித்தேன். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ளலாம், கடுமையாக உழைக்கிறார் வித்தியாசமான படங்கள் செய்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி

நடிகர் ஆர்யா பேசியதாவது…

கொரோனாவிற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து, உங்கள் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சி. சுந்தர் சி ஒரு நாள் கால் செய்து, அரண்மனை 3 படம் செய்யலாம் என்றார். இல்ல சார் நான் பேய்ப்படம் பார்த்ததே இல்லை எனக்கு பயம் வேண்டாம் என்றேன். கண்ண மட்டும் விரிச்சு பார் காமெடி பேய் தான் என்றார். சுந்தர் சி படங்கள் ஜாலியா இருக்கும் என்று சொன்னார்கள். நானும் ஜாலியா இருக்கலாம் என்று நினைத்தால், காலை 7 மணிக்கு ஷீட் என்று சொன்னார்கள், பார்த்தால் எல்லா ஆர்ட்டிஸ்டும் இருந்தார்கள், எல்லோரையும் ஜாலியாக வைத்து நைட் வரை வைத்து ஷீட் செய்தார். ஆனால் ஆர்ட்டிஸ்ட்டை டயர்ட்டாக்காமல் ஜாலியாக வைத்து மேஜிக் செய்து விடுகிறார். இந்தப்படத்தில் நான் அதிகம் மிஸ் செய்வது விவேக் சாரைத்தான். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டேன். இந்தப்படத்தில் அவருடன் 30 நாட்கள் இணைந்து நடித்தது மறக்க முடியாதது. அவரிடம் நான் உங்கள் ரசிகன் என்றேன். எப்போதும் நானும் அவரும் ஷீட்டிங் முடித்து விட்டு 10 கிலோ மீட்டர் வாக்கிங் போவோம். அவருடன் பழகியது, பேசியது மறக்க முடியாதது. இந்தப்படத்தில் இசை அருமையாக வந்திருக்கிறது. பின்னணி இசையிலும் கலக்கியுள்ளார் சத்யா வாழ்த்துக்கள். ராஷிக்கண்ணா போனிலேயே நாலு படம் நடிக்கும் அளவு பிஸி. அவரை பேயாக நம்புவார்களா என நினைத்தேன். ஆனால் நடிப்பில் அசத்தியுள்ளார். இந்தப்படத்தை எல்லாரும் இணைந்து நன்றாக செய்து, செண்பகமூர்த்தி சாரிடம் ஒப்படைத்து விட்டோம் அவர் தான் காப்பாற்ற வேண்டும். உதயநிதி சாருக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும், அவர் தான் பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசபட்டிணம் படத்திற்கு பிறகு மிகப்பெரிய வெளியீடாக இப்ப்டத்தை வெளியிடுகிறார். இது தியேட்டரில் கொண்டாட வேண்டிய படம். தியேட்டரில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.அரண்மனை 3 ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியீடாக, உலகம் முழுதும் வரும் அக்டோபர் 14 முதல் வெளியாகிறது.