“சின்னஞ்சிறு கிளியே” இயற்கை மருத்துவத்தின் பெருமை சொல்லும் படம்

இயக்கம் – சபரிநாதன் முத்துப்பாண்டியன்
நடிகர்கள் – செந்தில்நாதன், அர்ச்சனா


கதை – பிரசவத்தில் தன் மனைவியை காவு கொடுத்த ஒருவனின் மகள் கடத்தப்படுகிறாள். அதன் பின்னணியில் உள்ள ஆங்கில மருத்துவ கோர முகமூடியை கிழித்து இயற்கை மருத்துவத்தின் பெருமையை அவன் வெளிக்கொண்டுவர முயல்கிறான்

“சின்னஞ்சிறு கிளியே” உலகம் முழுக்க 24 திரைவிழாக்களில் கலந்துகொண்டு, விருதுகளை குவித்திருக்கும் படம். வருமுன் காப்போம் எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் நம் இயற்கை மருத்துவத்தின் பெருமையை சொல்ல முயன்றிருக்கிறார்கள். பல விசயங்களை சரியாகவும் பரபரப்பாகவும் சொல்லவும் செய்திருக்கிறார்கள்.

படத்தின் இடைவேளை வரை கதையில் எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை நாயகன் நாயகி சந்திப்பது, காதலிப்பது கல்யாணம் செய்வது அவர்கள் குழந்தை பிறப்பது என வழவழவென இழுத்து கொண்டிருக்கிறது, குழந்தை கடத்தப்படும் நொடியில் தான் படத்தின் உண்மையான கதை ஆரம்பிக்கிறது. அதன் பிறகு கதை பரபரவென செல்கிறது. இதை திரைக்கதையில் சரி செய்திருந்தால் இன்னுமே சுவாரஸ்யமான சினிமாவை செய்திருக்கலாம். செண்பா கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில்நாதன் தயாரித்து, நடித்துள்ளார். படத்தில் எல்லோரையும் விட அவரது நடிப்பு தான் நன்றாக இருக்கிறது. நாயகி நடிப்பில் கொஞ்சம் அமெச்சூர் தனத்தை குறைத்திருக்கலாம். பாட்டியாக வருபவர் கவனம் ஈர்க்கிறார்.

ஆங்கில மருத்துவத்தின் வணிக நோக்கத்தையும் கோர முகத்தையும் நுண்ணிய விவரங்களோடு விவரிப்பது அசத்தல். நம் இயற்கை மருத்துவத்தின் பெருமையும் ஓகே ஆனால் ஆங்கில மருத்துவம் முழுக்க வணிகமானது இயற்கை மருத்துவம் மட்டுமே சிறந்தது என்பது தற்போதைய காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய கருத்து அல்ல மிகவும் தவறானது. புள்ளிவிவிர அடிப்படையில் பிரசவ மரணங்கள் ஆங்கில மருத்துவம் வந்த பிறகு தான் குறைந்துள்ளது. ஆங்கில மருத்துவத்தில் இருக்கும் வசதிகள் இயற்கை மருத்துவத்தில் இல்லை. இரத்த போக்கை எப்படி இயற்கை மருத்துவத்தில் கட்டுப்படுத்துவார்கள். மனிதனின் ஆயுட்காலம் அலோபதியால் தான் அதிகரித்தது அனைத்து தரவுகளும் இப்படி இருக்கும் போது இயற்கை மருத்துவத்தின் பெருமையை சொல்ல அலோபதியை குறை சொல்வது நன்றாக தெரியவில்லை. இது மக்களிடத்தில் தவறான கருத்தை பரப்புவது அமைந்துவிடும் சாத்தியமும் உள்ளது.

படத்தின் இசை சரியாக ஒட்டவில்லை ஆனால் ஒளிப்பதிவு படத்தை காப்பாற்றியுள்ளது. படத்தின் உருவாக்கத்தில் நெருடல் இருந்துகொண்டே இருக்கிறது ஆனாலும் அதை கடந்து தான் சொல்ல வந்த கதையை சரியாக சொல்லியிருக்கிறார்கள் அதற்காக பாராட்டலாம். “சின்னஞ்சிறு கிளியே” ஒரு ஆவரேஜ் மெடிக்கல் டிராமா.

 

 

 

படம் குறும்படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை வென்றுள்ள சபரிநாதன் முத்துப்பாண்டியன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். கரகாட்டக்காரன் புகழ், மறைந்த நடிகர் சண்முகசுந்தரம் அவர்களின் மகன் பாலாஜி சுந்தரம் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு பாண்டியன், இசை மஸ்தான் காதர், பாடல் வரிகள் பத்மநாபன் மற்றும் கீதா படத்தொகுப்பு குமரேஷ்