கமலின் விருமாண்டி (மீண்டும்) ஓடிடியில் ரிலீஸாகுது!

பிக் பாஸ் எபிசோட் ஹீரோ &‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில், 17 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘விருமாண்டி’. இந்தப் படம் வருவதற்கு முன்னரே பல சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது. குறிப்பாக திரைப் படத்துக்கு கமல் முதலில் வைத்திருந்த பெயர் ‘சண்டியர்’. அந்தப் பெயரை மையமாக கொண்டுதான் படத்தின் பிரதான பாடலும் உருவாக்கப்பட்டது. ஆனால், இதற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், ‘விருமாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ஜப்பானிய திரை மேதை அகிரா குரசோவாவின் ‘ரோஷமன்’ திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷனில் விருமாண்டியின் திரைக்கதையை வடிவமைத்திருப்பார் கமல். ஒரே சம்பவத்தை வெவ்வேறு நபர்கள் சொல்லும் போது, அது எப்படி மாற்றம் பெறுகிறது என்கிற வித்தியாச பாணியில் உருவாக்கப்பட்ட படம் விருமாண்டி. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த விருமாண்டி, தற்போது மீண்டும் ஓடிடி தளத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

அமேசான் பிரைம் தளத்தில் வரும் 14 ஆம் தேதி, விருமாண்டி ரிலீஸ் செய்யப் படுகிறது. இது குறித்தான டிரெய்லர் தற்போது வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பின்னரும் விருமாண்டியின் மேஜிக், வெள்ளித்திரையில் பளிச்சிடுகிறது.