விஜய்மில்டனின் ’கோலி சோடா’! – கொஞ்சம் பிளாஷ் பேக் ரிப்போர்ட்!

பெரிய நட்சத்திரங்கள், நம்பர் ஒன் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாருமில்லாத கோலி சோடா படத்தின் பட்ஜெட் ரூ 2.5 கோடிதான். விஜய் மில்டன் இயக்கிய இந்தப் படம் ரூ 15 கோடி வரை சம்பாதித்துக் கொடுத்தது. புதிய கதை, சொன்ன விதம் என இயக்கு நரின் திறமையால் ஜெயித்த படம் இது. அந்த கோலி சோடா ரிலீஸாகி 6 வருஷம் ஆகுது. அதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா ஷேர் செய்திருக்கும் சேதியிதோ

பிரியமுடன் , ஆட்டோகிராப், காதல் மற்றும் வழக்கு எண் 18/9 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தில் இயக்குனராக மாறினார். கோலி சோடா அவரது இரண்டாவது முயற்சி ஆகும். கோயம்பேடு சந்தைக்கு ஒரு அதிகாலை பயணத்தின் போது கதைக்கான உத்வேகம் அவருக்கு வந்தது. “ஒரு நாள் காலையில் நான் கோயம்பேடு சந்தை வழியாகச் சென்று கொண்டிருந்தேன், யத்தேச்சையா கடைகளுக்கு மேலே இருந்த பரணைப் பார்த்தேன். அதில் வரிசையாக நூத்துகணக்கான இளைஞர்கள் தூங்கிட்டு இருந்தாங்க. அந்த ஃப்ரேம் எனக்கு ஆயிரம் கதைகள் சொல்லுச்சு. ஆனாலும் அவங்க யாரு, என்னன்னு விசாரிச்சப்போ கிடைச்ச லைன் தான் “கோலி சோடா”.

அவர்களின் உலகம் இந்த ‘சந்தையை’ மட்டுமே சுற்றி வருகிறது என்பதை அறிந்தேன், அவர்களுக்கு ஒரு அடையாளம் என்பதை அறிந்தேன். அவர்கள் வயதாகும்போது கூட, அவர்கள் கஞ்சாவை விற்பது, சந்தைக்குள் குட்டி தேநீர் கடைகளை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே உடனடியாக அவர்களுக்காக ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தேன்.. இந்தக் கதையை வைச்சுட்டு நான் எவ்வளவு தயாரிப்பாளர் களை போய் பார்த்தேன். ஏன் அவங்க பண்ணல. பிச்சை எடுத்த மாதிரி காசு சேர்த்து, வாரம் முழுவதும் வேலைச் செய்து சனி, ஞாயிறு ஷுட்டிங் வந்து அந்தக் காசை வைச்சு ஷுட் பண்ணுவேன். இப்படி ஒன்றரை வருஷம் கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பண்ணியிருந்தேன். என கூறினார்.

மேலும் கேட்ட போது, “கோயம்பேடு மார்க்கெட்டில் ஒன்றாக தங்கி வேலைபார்க்கும் நான்கு சிறுவர்களைப் பற்றிய கதைதான் இந்தப்படம். காலம் முழுதும் நம்ம வாழ்க்கை இப்படியே போயிடுமோ, நமக்கான அடையாளம் என்ன என்று அந்த நான்குபேரும் யோசிக்கும்போது கதை ஆரம்பிக்குது. இதனால நம்ம அடையாளத்துக்கு ஏதாவது பிரச்சனை வந்துடுமோ?னு ஏற்கனவே அடையாளத்தோட இருக்கிற கடை முதலாளிங்க யோசிக்கும் போது பிரச்சனை ஆரம்பிக்குது. இப்படி ரெண்டு வெவ்வேற எண்ணங்களோட மோதல் தான் “கோலி சோடா’”.பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் சோடா பார்ப்பதற்கு தண்ணீர்போலத்தான் தெரியும். ஆனால் அதை லேசாக குலுக்கினால் நுரையுடன் பொங்கி எழும். அதைப்போலத்தான் இந்த படத்தின் கதாநாயகர்களை லேசாக தட்டும்போது ஏற்படும் பிரிதிபலிப்புதான் படத்தின் கதையாகும் “என்றார் விஜய்மில்டன்.

பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நடித்த கிஷோர், பக்கோடா பாண்டி, ஸ்ரீராம், முருகேஷ் என்ற நான்கு பொடிப்பையன்களை ஞாபகம் இருக்கிறதா? தற்போது கொஞ்சம் வளர்ந்துவிட்ட அந்த நாலுபேர்தான் இந்தப்படத்தின் ஹீரோக்கள்.

“அந்த நாலு போரையும் ஊர்ல இருந்து வரவழைச்சி டெஸ்ட் ஷூட் எடுத்தோம். சனி, ஞாயிறுகள்ல கோயம்பேடு மார்க்கெட்ல காலையில் இருந்து ஈவினிங் வரை சுத்தவிட்டு அதையும் ஷூட் பண்ணினோம். மார்க்கெட்ல சுத்தின அழுக்கு, நாற்றம் அத்தனையும் அவங்களுக்கு அத்துப்படி ஆகிருச்சு. மூட்டை தூக்கி உடம்பு இருகிருமே! அதுக்காக ஷூட்டிங்கைத் தள்ளி வெச்சு நாலு பேரையும் ஜிம்முக்கு அனுப்பினோம். அரும்பு மீசைக்காக ஏகப்பட்ட ட்ரீட்மென்ட். நான் நினைச்ச மாதிரி அவங்க உருமாறி வந்த பின்னாடி தான் ஷூட்டிங்க்கு கிளம்பினோம்” என பையன்களை மாற்றிய கதை சொன்னார் விஜய்மில்டன்.

சென்னையின் கோயம்பேடு சந்தை, கேரளாவின் ஆலப்புழா மற்றும் கர்நாடகாவின் முருதேஸ்வரர் கோவிலில் படப்பிடிப்பு நடந்தது.படம் முழுவதுமாக கேனான் ஈஓஎஸ் 5 டி மற்றும் டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலம் படமாக்கப்பட்டது.