அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ், சித்தார்த் போன்ற நடிகர்கள் முயன்ற நிலையில், நடிகர் பிரசாந்த்துக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது. பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன், அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி உள்ளார். ‘நடிகர் பிரசாந்த் டிரினிடி காலேஜ் ஆஃப் லண்டனில் பியானோவின் நான்காவது கிரேடு தேர்வை வென்றுள்ளார். வீட்டிலும் அவர் பியானோவைத் தினமும் வாசிப்பார். எனவே பியானோ கலைஞர் வேடத்துக்கு பிரசாந்த் பொருத்தமாக இருப்பார்’ என தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறினார்.
அந்தாதுன் தமிழ் ரீமேக்கை பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக் இயக்கவுள்ளார். தபு வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வசனம் – பட்டுக்கோட்டை பிரபாகர்.
ஜனவரி முதல் அந்தாதுன் தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியா வில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியது. இதன்மூலம் சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 3-ம் இடத்தைப் பிடித்தது. டங்கல் (1,200 கோடி), சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ரூ. 700 கோடி) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது அந்தாதுன். அது மட்டுமல்லாமல் இந்தப் படம் சிறந்த நடிகர் – (ஆயுஷ்மன் குரானா), சிறந்த திரைக்கதை (தழுவல்), சிறந்த ஹிந்திப் படம் என மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது.
இந்நிலையில் அந்தாதுன் படத்தின் ரீமேக் பற்றிய அறிவிப்பு இசை வடிவில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது. பியானோ இசைக்கருவியை பிரசாந்த் வாசிக்கும் விடியோவின் வழியாக படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன. ஜனவரி 1 அன்று படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.