சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அறம் செய்து பழகு’ படத்தின் தலைப்பு ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று மாற்றப்பட்டுள்ளது. ‘மாவீரன் கிட்டு’ படத்தைத் தொடர்ந்து ‘அறம் செய்து பழகு’ என பெயரிடப்பட்ட படத்தை இயக்கி வந்தார் சுசீந்திரன். இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்று இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது.
தற்போது ‘அறம் செய்து பழகு’ என்ற தலைப்பை ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என மாற்றியுள்ளது படக்குழு. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சுசீந்திரனின் தந்தை நல்லுசாமி வெளியிட்டார். இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் ’20 ரூபாய் மருத்துவர்’ என்று அழைக்கப்படும் கோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்த பால சுப்பிரமணியத்தின் குடும்பத்தினரை கெளரவித்தது படக்குழு. கடந்தாண்டு பால சுப்பிரமணியம் மறைவைத் தொடர்ந்து அவருக்கு ‘ஏழைகளின் தெய்வம் எங்கள் ஐயாவுக்கு இதய அஞ்சலி’ என்று கோவை மக்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டியது குறிப்பிடத்தக்கது.
அவருடைய மகள், மருமகன், பேரன் ஆகியோர் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ அறிமுக விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டார்கள். படத்தின் கதைக்கும் மருத்துவத்துறைக்கும் சம்பந்தமிருப்பதால் இயக்குநர் சுசீந்திரன் இவர்களைக் கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.
சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்கிறார். இப்படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகிலும் இயக்குநராக அறிமுகமாகிறார் சுசீந்திரன்.