மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹாலிவுட் படமான ‘த லயன் கிங்’ வரும் ஜூலை 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு டிஸ்னியின் த லயன் கிங் திரைப்படம் கார்ட்டூன் அனிமேஷனில் வெளியாகி உலகமெங்கும் பிரபலமானது. தான் வாழும் பரந்த நிலப்பரப்பை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் .ராஜா சிங்கம் முபாசா. அவரை வீழ்த்தி தான் ராஜாவாக திட்டம் தீட்டி வருகிறார் அவரது தம்பி சிங்கம் ஸ்கார். இந்நிலையில் முபாசாவுக்கு அழகிய ஆண்குழந்தையாக குட்டிசிங்கம் சிம்பா பிறக்கிறான். அவனை அடுத்த ராஜாவாக அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
இந்நிலையில் முபாசாவை கொன்று குட்டி சிம்பாவை துரத்திவிட்டு தான் ராஜாவாகி கொடூர ஆட்சி செய்கிறான் ஸ்கார். இதையடுத்து சிம்பா பெரியவனாக வளர்ந்து தனது தந்தையின் காட்டை ஸ்காரிடமிருந்து, எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை.
ஒரு சிறந்த தந்தை மகன் உறவுக்கான கதாபாத்திரங்களாக முபாசா-சிம்பா கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் குழந்தையை தூக்கி காண்பித்து மகேந்திர பாகுபலி என்று கத்தக்கூடிய சிறப்புமிக்க காட்சி கூட இந்த படத்தில் சிம்பா பிறந்ததும் இடம்பெறக் கூடிய காட்சியைப் பார்த்துதான் எடுக்கப்பட்டது.
1994ல் வெளியான லயன் கிங் படத்தின் தமிழ் டப்பிங்கில் சிம்பா கதாபாத்திரத்திற்கு அரவிந்த் சாமி குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது வெளியாகவுள்ள அனிமேட்டட் லயன் கிங் படத்தின் தமிழ் வெர்ஷனில் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுக்க உள்ளார். ஸ்கார் கதாபாத்திரம் சுவாரஸ்யமானதாகவும் பல பரிணாமங்களை கொண்டதாகவும் இருப்பதால் தற்போது, அதற்கு குரல் கொடுக்க உள்ளதாக அரவிந்த்சாமி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கதாநாயகனான சிம்பா கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுக்கிறார்.
அதிலும் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலர் பின்னணி குரல் கொடுத்திருப்பது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இந்தியில் ஷாருக் கான், அஷிஷ் வித்யார்த்தி, அர்யன் கான், அஸ்ரனி, ஸ்ரேயாஸ் தல்பேட், சஞ்சய் மிஷ்ரா, நேஹா கார்கவா, சன்னிதி சவுகான், அர்மான் மாலிக் ஆகிய பிரபலங்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
முன்னரே சொன்னது போல் தமிழ் பதிப்புக்கு நடிகர்கள் சித்தார்த், அரவிந்த்சாமி, ரவிஷங்கர், மனோபாலா, சிங்கம் புலி, ரோபோ ஷங்கர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
தெலுங்கு பதிப்பிற்கு நடிகர்கள் நானி, ஜகபதிபாபு, ரவிஷங்கர், ஆலி, பிரம்மானந்தம், லிப்ஷிகா ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி பிராந்திய மொழி சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் குரல் கொடுத்திருப்பதால் ‘த லயன் கிங்’ இந்திய ரசிகர்க்ளின் எதிர்ப்பார்ப்பை அதிகமாகவே தூண்டியிருக்கிறது. Share Tweet Email Share