கலங்கடிக்கும் க/பெ ரணசிங்கம் – விமர்சனம்

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குறிப்பாக வறட்சி மாவட்டம் என்று சொல்லப்படும் ராமநாதபுரம் போன்ற ஊரில் உள்ள கூலித்தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் ‘கவர்ச்சி’ கரமான விளம்பரங்களை நம்பி, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். அப்படி வெளிநாடு போய் பணிபரியும் இடங்களிலோ, அல்லது சாலை விபத்துகளிலோ சிக்கி மரணமடைய நேரிடுகிறது. சிலர் தற்கொலையாகவும், மர்மாகவும் இறக்கின்றனர். இதுபோன்ற சமயங்களில் தமிழகத்தில் வசிக்கும் அவர்களது குடும்பத்தினர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதே சமயம் வெளிநாட்டில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நம்மர்கள் எப்படி எல்லாம் படாதபாடுபடுகின்றனர் என்பதை இதுநாள் வரை செய்தி தாள்களில் இரண்டு காலம் செய்தியாகவும், தொலைக்காட்சிகளில் இருநூற்று நாற்பது வார்த்தை ஒலியாகவும் பார்த்து, கேட்டவர்கள் ஒவ்வொருவரையும் உலுக்க வைத்து ஜில்லிட வைக்கும் நிஜக்கதையுடன் திரைக்கு வந்திருக்கும் படம்தான் க/பெ.ரணசிங்கம்.

அதாவது தண்ணீர் பஞ்சத்துக்கு பேர் போன ராம்நாட்டில் விட்டேத்தியாகச் சுற்றிக் கொண்டிருந்தவர் ஹீரோ விஜய் சேதுபதி. அவரை சீண்டி, நோண்டி, நெருங்கி லவ் செஞ்சு மேரேஜூம் செய்து கொள்கிறார் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ். ரொமான்ஸூடன் ஒரு குழந்தையும் பிறந்த சூழலில் துபாய்க்கு வேலைக்கு போகிறார் விஜய்சேதுபதி. போன இடத்தில் அவர் இறந்து விட்டார் என்று வந்த தகவலைக் கேட்டு ரணகளமாடும் ஐஸ்வர்யா ராஜேஷூன் முழு பர்பாமென்ஸ்தான் படத்தின் கதை. அதாவது ஆரம்ப பேராவில் சொன்னது போல் வெளிநாடு சென்று வேலை செய்வோர் அசம்பாவிதமாக மரணம் அடைந்து விட்டால் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதில் உள்ள உள்ளடி அரசியல் மற்றும் வணிகச் சூட்சமத்தை பொட்டில் அடித்தால் போல் சொல்லி திடுக்கிட வைத்துள்ளார்கள்.

இத்தனைக்கும் ஹீரோ விஜய் சேதுபதிக்கு கெளரவ ரோல்தான் ஆனால் அவரை படம் முழுக்க பயணிக்க செய்துள்ள புதுமுக இயக்குநர் விருமாண்டிக்கு நல்ல எதிர்காலமிருக்கிறது. விஜய்சேதுபதியும் தன் ரோலைப் புரிந்து எல்லை மீறாமல் இலாவகமாக கடந்து செல்கிறார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ்- அரிய நாச்சியாகவே மாறி அதகளமாடி அசத்தி இருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் இரட்டைச் சடையில் குறும்பு பொண்ணாக வந்து சலம்பல் செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் இண்டெர்வெலுக்கு பிறகு ஒட்டு மொத்த கதைக் களத்தையும் சுமந்து கம்பீரமாகி நடிப்பு வீர கட்சுமியாக ரணகளம் செய்து பல இடங்களில் நெக்குருக வைக்கிறார். .

விஜய் சேதுபதியின் தங்கையாக வரும் ஜி.வி.பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ-யை இனி அடிக்கடி திரையில் காணலாம் . ரங்கராஜ் பாண்டே, பூ ராமு, வேல ராமமூர்த்தி, முனிஸ்காந்த், அருண்ராஜா காமராஜ் என ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை எல்லை மீறாமல் கொடுத்து இருக்கிறார்கள். ஜிப்ரானின் இசை ஓகே. ஏகாம்பரத்தின் கேமரா வேற லெவல்.

மொத்ததில் நாம் வாழும் பூமியில் நமக்கு பக்கத்து வீட்டில் நடக்கும் பல்வேறு சமாச்சாரங் களான கருவேலமர வளர்ப்பு தொடங்கி வட இந்தியர் வரவு, ஆட்சி அதிகாரத்தில் இருப்போரின் போக்கு, ரேஷன் மற்றும் ஆதார் கார்ட்டின் மதிப்பு, நாடெங்கும் நிலவும் சமமற்ற சட்ட மேலாண்மை என்று முதல் படத்திலேயே பல சப்ஜெக்டுகளிl நாலுக் கால் பாய்ச்சல் காட்டி ஸ்கோர் செய்ய முயன்றுள்ளார் இயக்குநர் விருமாண்டி. அதன் பொருட்டு மூன்று மணி நேரம் நீளும் கதைக்களம் கொஞ்சம் நெளிய வைப்பதென்னவோ நிஜம்..இப்போது கூட ரீ எடிட் செய்து அரை மணி நேரத்தைக் குறைத்தால் அடுத்த ரிலீஸில் ரணசிங்கம் பாய்ச்சல் இன்னும் வேகமாகி விடும்

மார்க் 3 / 5