பாடிப் பறந்த பாலு காலமானார்!

0
610

இந்திய இசையுலகின் தனிப் பெரும் பாடகரான எஸ்.பி.பால சுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்று காலமானார். அவருக்கு வயது 74

பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா நோய் தொற்று காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது லேசான தொற்றுடன் சென்ற அவருக்கு திடீரென, தொற்றின் பாதிப்பு தீவரமடைந்தது. இதனால் ஐசியூவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து அவரது மகன் S.P.சரண் தனது தந்தையின் உடல் நலம் மெல்ல மெல்ல முன்னேறி வருவதாகவும், எங்களுடன் சைகையில் பேசுகிறார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி அவரும் கொரோனா நெகடிவ் வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் அவரது நலம் விரும்பிகள், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.சில தினங்களுக்கு முன் எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள பதிவில் எனது தந்தை நலம் பெறுவதற்கான நிலையான முன்னேற்றத்தைத் தொடர்கிறார். எக்மோ மற்றும் வென்டிலேட்டர், பிசியோதெரபி, வாய்வழி திரவங்களுடன் உணவு கொடுக்கப்படுகிறது. அவர் விரைவில் மருத்துவமனையை விட்டு வெளியேற ஆர்வமாக உள்ளார் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் மிக ஆபத்தான நிலையில் எஸ்.பி.பியின் உடல்நிலை உள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

தகவலறிந்த நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து வந்தார். மேலும் இன்று காலை எஸ்பி பாலசுப்பிர மணியத்தின் உறுவினர்கள் மற்றும் அவருக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்ட இயக்குநர் பாரதிராஜா மருத்துமனைக்கு நேரில் வந்து எஸ்பிபி உடல்நிலை குறித்து விசாரித்து சென்றார்.

இந்நிலையில், சற்று முன் SPB உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. செங்குன்றத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் இறுதி சடங்கு நடைபெறுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் 1.04 மணியளவில் எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் தெரிவித்தார். பாடகர் எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என அவரின் மகனும் பாடகருமான எஸ்.பி.சரண் கூறியுள்ளார்.