பாரதிராஜாவின் 16 வயதினிலே பட அனுபவம்!

16 வயதினிலே படம் ரிலீஸாகி 43 வருசமாச்சாம்

இதையொட்டி பாரதிராஜா-வுக்கு வாழ்த்து சொல்லி விட்டு அப்படத்தின் அனுபவம் குறித்து விசாரித்து நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி இதோ:

“என்னுடைய கிராமத்து வாழ்க்கையிலே நான் சந்திச்ச சிலபல அனுபவங்களை ஒட்டி உருவான கதைக்கு பேர் ‘மயிலு. ஒரு கிராமத்து மனுஷியின் ஏக்கத்தைச் சொல்கிற திரைக்கதையைத் தயார் செய்து, பிலிம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு அப்போது அனுப்பினேன். பல சினிமா முக்கியஸ்தர்கள் கதைத் தேர்வுக் குழுவில் இருந்தும்கூட என்னுடைய திரைக்கதை ஏற்கப்படலை.

இவ்வளவுக்கும், ‘16 வயதினிலே’ படத்தின் வடிவத்திலிருந்து மாறுபட்ட திரைக்கதை அது. முழுக்க வறட்சியான காட்டுப் பிரதேசம். அந்த வாழ்க்கை. அந்த ஏக்கம். இடைவேளைக்குப் பிறகு மயிலு பேசுவது ஒரேயொரு வசனம்தான்.
இப்படித்தானிருந்துச்சு என்னுடைய திரைக்கதை.

நிராகரிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருஷங்கள் அப்படியேக் கிடந்துச்சு.

பிறகு தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவைப் பார்த்தபோது நான் சொன்னது கூட ‘சிகப்பு ரோஜாக்கள்’ கதைதான்.

அடுத்து அவர்கிட்டேயே சில கதைகளைச் சொல்ல வேண்டிய சூழலில், அந்த மயிலு கதையைச் சொன்னதும், ‘இதிலேதான் ஜீவன் இருக்கு’ என்று அவருக்குப் பிடிச்சுப் போயிடுச்சு.

பிறகு கமா்ஷியலுக்காகச் சில மாற்றங்களைச் செய்தேன். படம் முடிந்து ப்ரிவ்யூ பார்த்த பலா், ‘இது மலையாளப் படம் மாதிரி இருக்கு’ அப்படீன்னு சொன்னாங்க.

படம் பார்த்த கமல் கூட அப்படித்தான் சொன்னார். அந்தப் படத்தில் அவ்வளவு மனது ஒன்றி நடித்திருந்தார். கிடார் வாசிக்கும் இளைஞனாக அவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது.கதையைச் சொல்லி ‘சப்பாணி கேரக்டர் இப்படி இருக்கணும்’ என்றதும் தலைமுடியைக் கண்டபடி கலைத்துவிட்டார். போட்டிருந்த சட்டையைக் கீழே மண்ணில் போட்டுப் புரட்டி எடுத்தார். நடை யையும் சற்று மாற்றினார். அவ்வளவுதான் பாத்திரமாகி விட்டார். ஒரு காட்சியில் ‘கோவணத்துடன் நடிக்கணும்’ என்று சொன்னபோது ‘நீங்க சரி என்று சொன்னா… இந்தக் கோவணம் கூட இல்லாமல் நடிக்கிறேன்’ என்று சொல்லி அவ்வளவு அற்புதமாக நடிச்சார்.

அதனால் அந்தப் படத்தில் டைட்டிலில் நடிகர், நடிகைகளின் பெயர்களைக் கூட போடாமல், சப்பாணி, மயிலு, பரட்டை என்று பாத்திரங்களின் பெயர்களே வரும்.

கொஞ்சம் டீடெய்லா சொல்லணுமுன்னா ‘நான் நைந்த் ஸ்டாண்டர்ட் படிச்சிக்கிட்டிருந்தப்போ எங்க பக்கத்து வில்லேஜ் ஸ்கூலில் ஒரு பொண்ணை பார்த்தேன். அவதான் என் கனவுலக் பிரதேசத்தின் ‘மயில்’. அவளைத்தான் நான் உசுருக்கு உசுராகக் காதலிச்சேன். என் நெஜ வாழ்வில் நான் துரத்தித் துரத்தி காதலிச்ச அந்தப் பெண் பரிசுத்தமான என் காதலை நிராகரிச்சுட்டு, என்னை நிர்கதியாக்கிட்டு போயிட்டா. உண்மையான வாழ்வில் சப்பாணியாக நானும், மயிலாக அவளும் இருந்த சூழலில் என்னைவிட்டுப் பிரிந்து போனாள்.

அதனால்தான், சினிமாவில் சப்பாணி, மயிலின் காதலை நிறைவேற்றி வைச்சேன். முதல்லே இந்த படத்துக்கு மயில் கேரக்டருக்குக்கு ரோஜாரமணியையும், சப்பாணி ரோலுக்குகு நாகேஷையும் செலக்ட் பண்ணி வச்சிருந்தோம். ஆனா எனக்கென்னவோ நான் காதலிச்ச மயிலின் சாயல் கொஞ்சம் கூட ரோஜாரமணிக்குப் பொருந்தாததாலே, யாரைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் தவிச்சிக்கிட்டு இருந்தேதேன். அப்போ இந்த ஸ்ரீதேவி மலையாளத்தில் ஐ.வி.சசி படத்தில் நடிச்சுக்கிட்டிருந்தார், நெக்ஸ்ட் கே.பாலசந்தர் ஸாரோட ‘மூன்று முடிச்சு’ படத்திலும் கமிட் ஆகி நடிச்சுக்கொண்டிருந்த ஸ்ரீதேவி போட்டோவைப் பார்த்தவுடனேயே இவள்தான் நான் தேடிக்கொண்டிருக்கும் மயிலு என்று என் மனசுக்குள் ஸ்பார்க் தட்டிடுச்சு.

உடனே ஸ்ரீதேவி வீடு தேடி கதை சொல்லப் போனேன். இந்த ’16 வயதினிலே’ படத்தின் ஒவ்வொரு காட்சியையும் விளக்கிச் சொன்னேன். படத்தின் முழுக்கதையையும் சொல்லி முடிச்ச பிறகு, எனது கண்டிசன்கள் சிலதையும் ஶ்ரீதேவியிடமும், அவரது அம்மாவிடமும் சொல்ல ஆரம்பித்தேன். அதாவது ‘என் மயிலு அச்சு அசலான கிராமத்து நாயகி… அதனால், தலையில் விக் வைக்கக் கூடாது’ அப்ப்டீன்னு நான் சொன்னவுடனே ‘என்ன சார் சொல்றீங்க…’ அப்படியே ஷாக் அனார் ஶ்ரீதேவி. நெக்ஸ்ட் மேக்கப் வேண்டாம், காட்டன் துணியில் தைக்கப்பட்ட பாவாடையைத்தான் அணியோணும் என்று நான் சொல்லச் சொல்ல அம்மா, மகள் ரெண்டு பேர் முகத்திலும் பீதி ரேகைகள் அலைஅலையா வந்து போச்சு.

என் யோகமோ, அவர் யோகமோ -ஒரு வழியாக ’16 வயதினிலே’ படத்தில் நடிப்பதற்கு ஶ்ரீதேவி ஒப்புக்கிட்டார். கமல்ஹாசன், ரஜினிகாந்த, ஶ்ரீதேவி என்று நட்சத்திரங்கள் கமிட் ஆனாலும் கமலுக்குச் சம்பளம் 29,000 ரூபாய், ஶ்ரீதேவிக்கு 9,000 ரூபாய், ரஜினிக்கு 3,000 ரூபாய் மட்டும்தாம் சம்பளமா கொடுத்தோம். மொத்தம் 5 லட்சத்தில் தயாரித்து முடிக்கப்பட்ட திரைப்படம் ’16 வயதினிலே’. (கட்டிங் கண்ணையா)

இந்த16 வயதினிலே-தான் முழுக்க அவுட்டோரில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம். யூனிட்டிலொரு நாள் கூட நான் வெஜ் கிடையாது. பட்ஜெட் தடைகள் காரணமாக ஸ்லோ மோசன் படமாக்கக்கூடிய கேமராவை வாங்க முடியலை, அதுனாலே ஸ்ரீதேவி “செந்தூர பூவே” பாடலுக்காக மெல்ல நடக்க விட்டு ஷூட் செய்ய வேண்டியிருந்தது. படத்தில் மயில் பரட்டையை பார்த்து முகத்தில் துப்பற காட்சி பல தடவை எடுக்க பட்டுச்சுது. அப்ப ஸ்ரீதேவி தெரியாமல் ஒருமுறை நிஜமாகவே ரஜினிகாந்த் மீது துப்பிட்டார்.

இப்படி சில பல போராட்ட சூழலை ஒரு நட்சத்திரங்களைவிட பாத்திரங்கள் பேசப்பட வேண்டும் என்று நினைச்சேன். நினைத்தபடி படம் வெளிவந்துச்சு. வெற்றியடைந்ததும் பலர் தேடி வந்தார்கள்.பத்திரிகைகள் தேடி வந்தன. நான் கவனிக்கப்பட்டேன். ஆனால் இன்னும்கூட ‘16 வயதினிலே’ படத்திலிருந்து பலவிதங்களில் வேறுபட்ட, கமர்ஷியல்தனமில்லாத ‘மயிலு’ படத்தின் திரைக்கதைப் பிரதியைப் பத்திரமாக வச்சிருக்கேன்

ஒரு வழியா செப்டம்பர் 15, 1977 அன்று 16 வயதினிலே ரிலீசாச்சு, ஆனா எந்த டிஸ்ட்ரிபியூட்டரும் 16 வயதினிலே படத்தை வாங்க தயாராக இல்லாததால் ராஜ்கண்ணுவால் ஸ்ட்ரெயிட் ரிலீசாச்சு. அதை ஃபெயிலராகப் போகும் ஒரு சோதனை படம் -அப்படீன்னு சிலர் எழுதினாலும், ஸ்கிரிப்ட், இளையராஜாவின் மியூசிக் மற்றும் கமல், ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் நடிப்புக்கு விமர்சன ரீதியான நல்ல பாராட்டைப் பெற்றுச்சு.

இது வணிகரீதியாக வெற்றி பெற்றது. 175 நாள் நாடக ஓட்டத்துடன். எஸ்.ஜானகியின் சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளை இது வென்று இன்னிக்கு பலரால் ரிமைண்டர் செய்யப்பட்டு பாராட்டப்படுது-ங்கறது கொஞ்சம் தெம்பைத் தருது – என்றார் பாரதிராஜா.