1972ல் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய படம் வசந்த மாளிகை. சிவாஜி கணேசன் , வாணிஸ்ரீ ஜோடியாக நடித்திருந்த இந்த படத்தை வி.சி.குகநாதன் மேற்பார்வையில் ராமு டிஜிட்டலில் மாற்றினார். நாகராஜா அதை வாங்கி பிரம்மாண்டமான முறையில் சத்யம் திரையரங்கில் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடத்தினார். 45 வருடங்கள் கழித்து நடைபெற்ற இந்த விழாவில் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் , தம்பி சண்முகத்தின் மகன் கிரி , இயக்குனர்கள் வி.சி.குகநாதன் . எஸ்.பி.முத்துராமன், சித்ரா லட்சுமணன் பின்னணி பாடகி பி சுசீலா, நடிகை ஜெயா குகநாதன் . வினியோகஸ்தர் நாகராஜா. பி.ஆர். ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி, டிஜிட்டல் ராமு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சிவாஜியை பற்றிய தங்களது மலரும் நினைவுகளை அனைவரும் நினைவுபடுத்தி கலகலப்பாக பேசினர்.
ஒரு புதுப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிபோல இந்த நிகழ்வு நடந்தது. கூட்டத்திலிருந்த அனைவரும் 40 வயதுக்குமேல் உள்ளவர்களாக இருந்தார்கள். படத்திலிருக்கும் `மயக்கமென்ன’, ‘யாருக்காக’, ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’ ஆகிய பாடல்களை ஒளிபரப்பும்போது, இன்றைய இளைஞர்களே மிரளும் வகையில் கைதட்டி, விசிலடித்து மொத்த அரங்கத்தையும் ஆரவாரத்தில் ஆழ்த்தினர். குறிப்பாக,
“கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்
கட்டி முடிந்ததடா – அதில்
கட்டில் அமைந்ததடா – கொடும்
சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை – இன்பச்
சக்கரம் சுற்றுதடா அதில் நான்
சக்கரவர்த்தியடா!” பாடலில்,
‘சக்கரவர்த்தியடா!’ என வரும்போது, மொத்தத் திரையரங்கமும் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய சிவாஜி ரசிகர்களில் ஒருவரான முரளி ஸ்ரீனிவாசன், இந்தப் படம் பற்றிய சில விஷயங்களைக் கூறினார். படத்தின் பூஜை முடிந்தவுடன் முதல் நாளே காலை 4 மணிக்கு ‘கிண்ணத்தை ஏந்துகின்றேன்’ பாடல் எடுக்கப்பட்டதாகவும், மொத்தம் மூன்று மணிநேரத்தில் முழுப் பாடலும் எடுத்து முடிக்கப்பட்டதாகவும் சொன்னார்.
“தமிழகத்தில் 10 ஊர்களில், 12 திரையரங்குகளில் 100 நாள்கள் நிறைவு செய்தது. மதுரையில், ‘வசந்தமாளிகை’ ரிலீஸாகும்போது ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘தவப்புதல்வன்’ படங்கள் ஒடிக்கிட்டிருக்கு. கொஞ்ச நாளில் ‘நீதி’னு ஒரு படம் வந்தது. 175 நாள்கள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது, ‘பாரத விலாஸ்’ ரிலீஸ். பிறகு, ‘ராஜராஜ சோழன்’ வெளியானது. அத்தனை படங்களுக்கு மத்தியிலும் வசந்தமாளிகை 200 நாள்கள் ஓடியது. குறிப்பாக, இலங்கையில் மாபெரும் பிரளையத்தை ஏற்படுத்திய படம் இது. அங்கே வெலிங்டன் தியேட்டர்ல படத்தை ரிலீஸ் பண்ணாங்க. கூட்டம் அலைமோதவே, அருகிலுள்ள லிடோ திரையரங்கிலும் படத்தைப் போடுவோமென முடிவெடுத்தார்கள். ஒரு பிரிண்ட் மட்டுமே இருந்தது. 15-20 நிமிட இடைவெளியில் ஒரு கார் வைத்து, வெலிங்டனிலிருந்து லிடோவுக்கும், லிடோவிலிருந்து வெலிங்டனுக்கும் படத்தைப் போட்டோம். இப்படித்தான் இந்தப் படம் கொழுப்பில் 287 நாள், யாழ்பாணம் திரையரங்கில் 207 நாள் ஓடியிருக்கிறது. முதல் முதலாக யாழ்பாணத்தில் வெள்ளிவிழா கண்ட படம் இது’’ என்றார்.
நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, “`வசந்தமாளிகை’ படம்தான், 271 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆன முதல் திரைப்படம். படத்தில் ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்’ பாடலில் அவர் ஆடிய ஸ்டைலில் தமிழ் சினிமாவில் யாராவது ஆட முடியுமா?” எனக் கேட்க மொத்த அரங்கமுமே ‘முடியாது’, ‘யாருமில்லை’ என ஆர்ப்பரித்தது. தொடர்ந்து பேசிய அவர்,
“இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பல நாள்கள் பணிபுரிந்திருக்கிறேன். டெய்லர், கோட் சூட்டை எல்லோருக்கும் தச்சுத் தருவான்; ஆனா, அதைப் போட்டுக்கிட்டு சிவாஜி நடந்துவரும்போதுதான் ராயலா இருக்கும். நடிப்புப் பயிற்சி எடுக்கும் இளைஞர்கள் 10 சிவாஜி படங்களைப் பார்த்தால் போதும். சிவாஜி படங்களை இந்தியில் ரீமேக் செய்ய யோசிப்பார்கள், பாலிவுட் ஹீரோக்கள். ஏன்னா, ‘நவராத்திரி’ படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் யாராவது நடிக்க முடியுமா?! நடித்து, படம் தோல்வியடைவதைவிட நடிக்காமல் இருந்துவிடலாம்னு நினைப்பாங்க. அதேசமயம், சிவாஜி தன்னைப் பெரிய நடிகன் என நினைத்துக்கொண்டது கிடையாது. ‘கௌரவம்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி. வசனம் பூராவும் பேசி முடித்து, ‘தட்ஸ் ஆல்’ என இங்கிலிஷ்ல சொல்லி முடிப்பார். அந்தக் காட்சியைப் படமாக்கும்போது, ஸ்பாட்ல இருந்தவங்க கைதட்டிப் பாராட்டியிருக்காங்க. நாகேஷும் இருந்திருக்கார், ஒய்.ஜி.மகேந்திரனும் இருந்தார். ஒய்.ஜி-க்கு அது முதல் படம்.
`எல்லோரும் என் நடிப்பைப் பாராட்டுறாங்க, நீ அமைதியா இருக்க’னு நாகேஷைப் பார்த்துக் கேட்குறார் சிவாஜி. ‘இந்தப் படத்துல பல இடங்கள்ல நீங்க இங்கிலீஷ் பேசி பிச்சு உதறியிருக்கீங்க. ஆனா, இன்னைக்குப் பேசுனது சரியில்லை’னு நாகேஷ் சொல்லியிருக்கிறார். ‘அவனும் அதைத்தான் சொல்றான்’னு பக்கத்துல இருந்த ஒய்.ஜி.மகேந்திரனைக் கை காட்டுறார் சிவாஜி. கூடவே, ‘எனக்கு, அவங்க அம்மா நடத்துற பத்மா சேஷாத்ரி ஸ்கூல்ல சீட்டு கிடைச்சுப் படிச்சுட்டா வந்தேன் நான். பேசுன இங்கிலீஷ் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லு, சரியா இருக்கா இல்லையானு சொல்லாதே!’னு நாகேஷைக் கிண்டல் பண்ணிட்டுப் போனார், சிவாஜி அப்படியே இருந்துடல. கேமராமேன் வின்சென்ட்கிட்ட போய், அந்தக் காட்சியைத் திரும்ப எடுத்துக்கலாம்னு சொன்னார்.
இதேமாதிரி, ‘பேசும் தெய்வம்’ படப்பிடிப்பிலும் ஒரு சம்பவம் நடந்தது. இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ‘ஒன்மோர், ஒன்மோர்’னு சொல்றார். ஐந்தாறு டேக் போகுது. எதிலும் திருப்தியடையாத கோபாலகிருஷ்ணனைக் கூப்பிட்டு, ‘எனக்குத் தெரிஞ்ச மாதிரி வெவ்வேறு விதமா நடிச்சுட்டேன். நீ எப்படி நடிக்கணும்னு நடிச்சுக் காட்டு’னு சிவாஜி சொல்லிட்டார். எல்லோரும் இயக்குநரைப் பார்த்துக்கிட்டிருக்காங்க. கோபாலகிருஷ்ணன் வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு, அந்தக் காட்சியை நடிச்சுக் காட்டினார். சிவாஜி அங்கிருந்து கிளம்பிட்டார். கோபாலகிருஷ்ணன் அண்ணன் சபரிநாதன்தான் அந்தப் படத்துக்குத் தயாரிப்பாளர். நடந்ததை அவருக்குச் சொன்னாங்க. அவர் இயக்குநரைப் பார்த்து, ‘என்ன இப்படிப் பண்ணிட்ட… சிவாஜி யாரு அவருக்கு நீ நடிப்பு சொல்லிக்கொடுக்கிறதா? சிவாஜி கால்சீட் கிடைக்க மூணு மாசம் ஆகும்’னு சொல்லியிருக்கார்.
அன்னைக்கு நைட்டே கோபாலகிருஷ்ணனுக்கு சிவாஜி சார் ஆபீஸ்ல இருந்து போன். ‘காலைல 7 மணிக்கு ஷாட் ரெடி பண்ணிக்கோங்க, சார் வந்திடுவார். உங்க ஷூட்டிங் முடிச்சுட்டு, அவர் அடுத்த ஷூட்டிங் போவார்’னு சொன்னாங்க. அடுத்தநாள் ஷூட்டிங்ல இயக்குநர் மெய்சிலிர்க்கிற அளவுக்கு நடிச்சுக் கொடுத்தார் சிவாஜி. அவர் கிளம்பிப்போனதுக்குக் காரணம்… வீட்டுக்குப் போய், கண்ணாடி முன்னாடி நடிச்சுப் பார்த்து பழகியிருக்கார்!’’ என்று முடித்தார் சித்ரா லட்சுமணன்.
தொடர்ந்து பேசிய பாடகி பி.சுசீலா, “சிவாஜியும் நானும் அண்ணன் தங்கைபோல பழகி வந்தோம். ‘யாருக்காக…’ பாடலுக்கு டி.எம்.சௌந்தர்ராஜன் உயிர் கொடுத்துப் பாடியிருக்காங்க, அதுக்கு இன்னும் உயிர் கொடுத்து நடிச்சிருப்பார் சிவாஜி. எங்களை மாதிரி பாடகர்கள் இத்தனை புகழோடு இருக்க, அப்படி ஒரு நடிப்பும் காரணம். நடிகர்கள் பாடலுக்கு நன்றாக நடித்தால்தான், அந்தப் பாடலைப் பாடியது யாரெனவே மக்கள் கேட்பார்கள்” என்றார்.
பின்னர் பேசிய சிவாஜியின் மகன் ராம்குமார், “இந்த மாதிரி புது முயற்சிகளுக்கு சிவாஜி ரசிகர் மன்றம் உறுதுணையாய் இருக்கும்” என்றார்.