திரையுலக “மாயாஜால மன்னன்” விட்டலாச்சாரியா!

ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி அங்க ஒரு குகை இருக்கும். அந்த குகையில ஒரு கூண்டு, அந்த கூண்டுக்குள்ள ஓரு கிளி இருக்கும். அதுல தான் அந்த மந்திரவாதியோட உயிர் இருக்கு. கற்பனைக் கதைகளும் மந்திர தந்திரக் கதைகளும் கேட்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் அலாதியானது. இதுபோன்ற கதைகளுக்கு திரையில் உயிர் கொடுத்தவர்தான் மாயாஜால மன்னன் இயக்குநர் விட்டலாச்சாரியா. தெலுங்குத் திரையுலகில் அதிகமான படங்களை இயக்கிய விட்டலாச்சாரியா, பெரும்பாலான படங்களை அவரது ‘விட்டல் புரொடக்‌ஷன்ஸ்’ மூலமாக தயாரித்தார். ஜகன் மோகினி, மாயா மோகினி போன்ற மோகினிகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த பெருமை இவரையே சேரும். பயங்கர உயரமான சிலை சிரிப்பது, பாய் பறப்பது, வித்தியாசமான மந்திரச் சொற்கள் என விட்டலாச்சாரியா படங்கள் விநோதமான அனுபவத்தை தரும். ஜகன் மோகினியையும் ஜெயமாலினியையும் மறக்கமுடியாத ஐயாக்கள் இங்கே ஆயிரம் ஆயிரம் பேர் உண்டு.

இவரது படங்களில் வரும் துஷ்ட தேவதைகள் கேட்கும் காணிக்கைகள் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். மாய மோகினி படத்தில் வரம் கேட்கும் மந்திரவாதியிடம் துஷ்ட தேவதை என்ன கேட்கும் தெரியுமா?… உலகத்திலேயே தாயை மிகவும் மதிக்கும் ஒருவனைத் தேடி அவன் கையாலேயே அவன் தாயை கொலை செய்ய வைக்கவேண்டும். இதுபோன்ற வசனங்களை கேட்கும்போதே நமக்கு பயம் தொற்றிக்கொள்ளும்.

இன்று ஹாரிபாட்டர் படங்களில் வரும் பறக்கும் துடைப்பத்துக்கு விட்டலாச்சாரியா தன் படங்களில் பயன்படுத்திய பறக்கும் நுட்பங்கள் முன்னோடியாக இருந்திருக்கலாம். JK Rowling விட்டலாச்சாரியாவின் விந்தைகளை பார்த்திருக்க வாய்ப்பிருக்கலாம். ஜகன் மோகினி படத்தில் வரும் அடுப்பில் கால் வைத்து எரிக்கும் காட்சி இன்றளவும் மீம்ஸ்களாக வலம் வருகிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான NTR-ஐ வைத்து ஐந்து படங்களுக்கும் மேல் இயக்கியிருக்கிறார். NTR-இன் பிரியமான இயக்குநர்களில் விட்டலாச்சாரியாவுக்கு என்று தனி இடம் உண்டு. சிறுவயது முதலே நாடகங்கள் மீது தீராத ஆர்வம் கொண்டவர் விட்டலாச்சாரியா.

இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற்று சிறை சென்றிருக்கிறார். ‘மகாத்மா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் 1944 முதல் 1953 ஆம் ஆண்டு வரை பல்வேறு கன்னடப் படங்களை தன் நண்பர்களுடன் தயாரித்து இயக்கியிருக்கிறார். அதன்பிறகு 1953ஆம் ஆண்டு அது விட்டல் புரொடக்‌ஷனாக மாறியது. பல்வேறு ஆண்டுகளாக திரைத்துரை சார்ந்து இயங்கிய மாயாஜால மன்னன் இன்று (மே 28) இறந்த நாள். அவர் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது மாயாஜாலங்கள் நம் மனதை விட்டு மறையாது

இந்நாளில் இந்த மாயாஜால மன்னனின் வாழ்க்கைக் கதையை தெரிந்து கொள்வோமா?

1920-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி அருகில் உள்ள பெல்லே என்ற ஊரில் பிறந்தார்.

தந்தை பெயர் பத்மநாபா ஆச்சாரியார். இவர் ஆயுர்வேத வைத்தியர்.

தாயார் பெயர் சீதம்மா.

கர்நாடக மாநிலத்தில், கிராமங்களில் “பைலாட்டா” என்ற கலை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இது, நம் ஊர் தெருக்கூத்து போன்றது. இதில் பங்கேற்பவர்கள், ஒப்பனையிலும் ஆட்டத்திலும் `கதகளி’ நடனக் கலைஞர்கள் போலத் தோன்றுவார்கள். இந்த கலை நிகழ்ச்சியில், விட்டலாச்சாரிக்கு மிகுந்த ஆர்வம். விடிய விடிய வேடிக்கை பார்ப்பார். இது, அவரது தந்தைக்கு கொஞ்சமும் பிடிக்காது.

பெல்லே கிராமம், கடற்கரைக்கு அருகே இருந்தது. விட்டலாச்சாரி 10வயது சிறுவனாக இருக்கும்போதே, மீனவர்களுடன் கட்டு மரத்தில் ஏறி கடலுக்குள் போய் விடுவார். மாலையில்தான் வீடு திரும்புவார்.

ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்த தன் மகன் இப்படி தெருக்கூத்தில் ஆர்வம் காட்டுவதும், மீனவர்களுடன் சேர்ந்து கொண்டு அபாயகரமான கட்டுமரப்பயணம் மேற்கொள்வதும், தந்தைக்கு கோபத்தை அளித்தன. விட்டலாச்சாரிக்கு அடிக்கடி அடி-உதை விழும். ஆனாலும், அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

ஒருநாள் தந்தை கடுமையாகத் திட்டிவிடவே கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார், விட்டலாச்சாரியா. கட்டிய வேட்டி – சட்டையுடன் புறப்பட்டவர், உடுப்பியிலிருந்து மைசூருக்கு 150 மைல் தூரம் நடந்தே போய்விட்டார்! அப்போது அவருக்கு வயது 18 இருக்கும்.

விட்டலாச்சாரியாவுக்கு சிறு வயது முதலே உடற்பயிற்சிகளில் ஆர்வமுண்டு. உடம்பை கட்டுமஸ்தானாக வைத்திருப்பார். மைசூருக்குப் போய், அங்கு தனக்குத் தெரிந்த நண்பர்களைச் சந்தித்தார். மைசூரில் அவர் நண்பர்கள் 8 பேர் சேர்ந்து டூரிங் டாக்கீஸ் நடத்தி வந்தார்கள். தங்கள் கூட்டணியில் இவரையும் சேர்த்துக் கொண்டார்கள். எதற்காக இவரைச் சேர்த்துக் கொண்டார்கள் தெரியுமா? அப்போதெல்லாம் அந்த டூரிங் டாக்கீஸ் நடமாடும் திரையரங்காக பல பகுதிகளுக்கு இடம் பெயரும் – சர்க்கஸ் மாதிரி. ஒவ்வொரு நாளும் வசூலாகும் பணத்தை, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். நள்ளிரவில் கொண்டு போகும் பணத்துக்கு, பாதுகாப்பாக ஓர் ஆள் இருக்கட்டும் என்றுதான் விட்டலாச்சாரியாவை சேர்த்துக் கொண்டார்கள்.அதுமட்டுமல்ல; படத்தை திரையிடும்போது ஏற்படும் பிரச்சினைகள், கூட்டத்தில் நடக்கும் தகராறுகள் ஆகியவற்றை சமாளிக்கும் பொறுப்பையும் இவர் ஏற்றுக்கொண்டார்.

ஏற்கனவே கலை ஆர்வம் கொண்டவர் ஆதலால், திரையரங்கில் ஓடிய படங்களை ஒன்று விடாமல் பலமுறை பார்த்து, தன் ரசனையை வளர்த்துக் கொண்டார். அந்த 8 பேர் கூட்டணியில் விட்டலாச்சாரியா சேர்ந்ததும், வசூல் குவிந்தது. ஒரு டூரிங் டாக்கீஸ், மூன்றாக வளர்ந்தது. ஒரே சமயத்தில் வெவ்வேறு 3 இடங்களில் படங்கள் ஓடும். வசூலின்போது, விட்டலாச்சாரியா பணப் பாதுகாப்பு பொறுப்பில் இருப்பார். இப்படி ஊர் ஊராக இடம் பெயர்ந்து, ஆங்காங்கே 1 மாதம், 2 மாதம் என்று முகாம் இட்டு படங்களை திரையிட்டு வந்தார்கள்.

ஒருமுறை மைசூருக்கு பிரபல இந்திப்பட இயக்குனர் வி.சாந்தாராம் வந்திருந்தார். தன் “ஜனக் ஜனக் பாயல் பாஜே” படத்தின் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற இடங்களை பார்க்க அவர் வந்திருந்தார். அவரை விட்டலாச்சாரி யா பல இடங்களுக்கு அழைத்துக்கொண்டு போய் காட்டினார். இத னால் சாந்தாராமுடன் நெருக்கமானார். படப்பிடிப்பு நடந்தபோது அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பை பெற்றார்.

ஏற்கனவே சினிமா ஆர்வம் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பை கண்கூடாக பார்க்கும் வாய்ப்பு அவருக்கு பெரிய ஈடுபாட்டை தூண்டியது. திரைப்படம் உருவாகும் முறையை கண்டு, கேட்டு, உற்று நோக்கி, விசாரித்து அறிந்து கொண்டார்.

டூரிங் டாக்கீஸ் தொழில் நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்தில், `எத்தனை நாள்தான் எப்படி ஊர் ஊராக சுற்றுவது’ என்று யோசித்த நண்பர்கள் ஒரு முடிவெடுத்தனர். தியேட்டர்களை நல்ல லாபத்துக்கு விற்றனர். இந்த 9 பேரும் சேர்ந்து “நவஜோதி ஸ்டூடியோ” என்று மைசூரில் ஒரு ஸ்டூடியோவை தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் அதிலிருந்து விட்டலாச்சாரியாவும், அவரது நண்பர் சங்கர்சிங் என்பவரும் வெளியேறி, “மகாத்மா பிக்சர்ஸ்” என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார்கள்.

அப்போது சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. காந்தி மீது ஈடுபாடு கொண்டதால் அவரது பெயரை தங்கள் நிறுவனத்துக்கு வைத்தார்கள். காந்தியின் கொள்கையில் பற்றும், ஆர்வமும் கொண்ட விட்டலாச்சாரியா, சுதந்திரப் போராட்ட மறியல்களில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார். சிறையில் 6 மாதங்கள் இருந்தபின், விடுதலையானார். `வன்முறை கிளர்ச்சிகள் கூடாது’ என்று மகாத்மா காந்தி சொன்னதால் வன்முறை போராட்டங்களை தொண்டர்கள் கைவிட்டனர். விட்டலாச்சாரியாவும் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கினார்.

முதலில் எடுக்கப்பட்ட படம் `சீனிவாச கல்யாணம்’ என்கிற கன்னடப்படம். அதைத்தொடர்ந்து 7 படங்கள் தயாரித்தார். பிறகு, சங்கர்சிங்கை விட்டுப் பிரிந்தார். அதன் பிறகு, யாருடனும் கூட்டு சேர்வது தனக்குச் சரி வராது என்று முடிவெடுத்து, 1951-ல் தன் பெயரில் “விட்டல் புரொடக்ஷன்ஸ்” தொடங்கினார்.

அவருக்கு 25 வயதில் திருமணமானது. சொந்தப்பட நிறுவனம் ஆரம்பித்தபோது அவரது வயது 30.

தந்தை இறந்து விடவே, வீட்டுக்கு மூத்த பிள்ளையான இவர் மீது குடும்பப் பொறுப்பு விழுந்தது. தங்கைகள் நால்வர். ஒரு தம்பி. எல்லாரையும் கவனித்துக் கொண்டார்.

திரைப்பட வரலாறு 911

என்.டி.ராமராவை வைத்து 18 படங்கள் எடுத்தார்

தெலுங்குப்பட உலகின் சூப்பர் ஸ்டார் என்.டி. ராமராவை வைத்து, 18 படங்கள் எடுத்தவர், விட்டலாச்சாரியா.

இவர் முதன் முதலாக எடுத்த படம் “ஜெகன்மோகினி” (கன்னடம்).

முதல் படத்திலேயே இவருக்கும் டைரக்டருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. எனவே தான் தயாரிக்கும் படங்களை தானே இயக்குவது என்று முடிவெடுத்தார்.

பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள் அலங்காரமான உடைகள், தந்திரக் காட்சிகள் ஆகியவை விட்டலாச்சாரியாவின் படங்களின் சிறப்பு அம்சங்கள்.

ஆரம்ப காலத்தில் கன்னியாதானா’,மனே தும்பிதே ஹென்னோ’ போன்ற சமூகக் கதைகளை இயக்கினார். விருதுகள் கூட கிடைத்தன. ஆனால், வெற்றி கிட்டவில்லை. எனவே, சரித்திரப் பின்னணியுடன் பிரமாண்ட கதைக்களமே தன் பாணியென்று முடிவு செய்தார்.

கன்னடப் படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் கவனம் செலுத்தினார். என்.டி.ராமராவை வைத்து நாகிரெட்டி `பாதாள பைரவி’யை தெலுங்கில் எடுத்தார். அதை கன்னடத்தில் “டப்” செய்ய, தொழில் நுட்பம் சார்ந்த பொறுப்புகளை விட்டலாச்சாரியா ஏற்றுக்கொண்டார். என்.டி.ராமராவுக்கு கன்னடத்தில் குரல் கொடுத்தவர் ராஜ்குமார். அப்போது ராஜ்குமார் நடிக்க ஆரம்பிக்கவில்லை. இந்த டப்பிங் வேலைகள், சென்னை ஸ்டூடியோக்களில்தான் நடைபெற்றன. விட்டலாச்சார்யாவின் ஈடுபாடும், உழைப்பும் தெலுங்குத் திரையுலகில் பலரையும் கவர்ந்தன.

கன்னடத்தில் வெற்றி பெற்ற சில சமூகக் கதைகளை தெலுங்கில் இயக்கினார். அவை வெற்றி பெறவில்லை. பெயர் மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார்.

1959 முதல், தெலுங்கில் காலூன்றினார். முதலில் காந்தாராவ் நாயகன். கிருஷ்ணகுமாரி (சவுகார்ஜானகியின் தங்கை) நாயகி என வைத்து ஜெயவிஜயா’ என்றொரு படம் இயக்கினார். சரித்திரப் பின்னணியும் மாயாஜாலக் காட்சிகளும் கொண்ட படம் இது. இதே ஜோடியை வைத்துகனகதுர்கா பூஜாமஹிமர்’ இயக்கினார்.

பிறகு வரலட்சுமி விரதம்’,மதனகாமராஜ கதா’ என காந்தாராவை வைத்து பல படங்களை எடுத்தார்.

காந்தாராவைத் தொடர்ந்து என்.டி.ராமராவை வைத்து முதலில் பந்திபோட்டு’ என்றொரு படம் இயக்கித் தயாரித்தார். இதே கதையை ஒரே நேரத்தில் கன்னடத்தில் ராஜ்குமாரை வைத்துவீரகேசரி’ என்று உருவாக்கினார். இன்றும்கூட “வீரகேசரி” படம், கர்நாடக ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த படமாகும்.

என்.டி.ராமராவுக்கு இவரது திறமையின் மீது மதிப்பு வரவே, தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து நடித்து வந்தார்.

அக்கிப்பிடுகு’,அக்கிப்பராட்டா’, கந்திகோட்ட ரகஸ்யம்’,அக்கி வீருடு’, `அரிபாயா நலபை தொங்கலு’ போன்ற 18 படங்களில் ராமராவ் நடித்தார். இதில் ஜெயலலிதா இணைந்து நடித்தவை 4 படங்கள். சரோஜாதேவி, தேவிகா, கே.ஆர்.விஜயா போன்ற முன்னணி நடிகைகள் பலரும் நடித்தார்கள்.

ராமராவ் படம் முடிந்து, கிடைக்கும் இடைவெளி காலத்தில், காந்தாராவ் நடித்து குறுகிய காலத் தயாரிப்பில் படங்கள் வரும். “வீரத்திலகம்”, “மாயமோதிரம்”, “மந்திரிகுமாரன்” போன்றவை அப்படி வெளிவந்தவைதான்.

1964-ல், பொங்கலன்று எம்.ஜி.ஆர். நடித்த “வேட்டைக்காரன்”, சிவாஜிகணேசன் நடித்த “கர்ணன்” ஆகிய படங்கள் ரிலீஸ் ஆயின. அதே நாளில் வெளிவந்த விட்டலாச்சாரியாவின் “வீரத்திலகம்” படமும், அந்தப் படங்களைப்போல் நூறு நாட்கள் ஓடியது.

வரலாறு படைத்த படம்

முதன் முதலாக கன்னடத்தில் எடுத்த “ஜெகன்மோகினி” கதையை 1978-ல் தெலுங்கில் எடுத்தார். மாயாஜாலங்களும், விசித்திரமான வேதாளங்களும் கொண்ட இப்படத்தில் நரசிம்மராஜ×, ஜெயமாலினி ஆகியோர் நடித்தனர்.

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற இப்படத்தை தமிழில் அதே பெயரில் “டப்” செய்து வெளியிட்டார்.

“ஜெகன்மோகினி” மாபெரும் வெற்றிப் படமானது. சென்னையிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வசூலை குவித்தது. தினமும் “ஹவுஸ்புல்” காட்சிகள்!

தொடர்ந்து, விட்டலாச்சாரியாவின் “கந்தர்வக்கன்னி”, “நவமோகினி”, மோகினி சபதம்” ஆகிய டப்பிங் படங்கள் தமிழ்நாட்டில் சக்கை போடுபோட்டன.

விட்டலாச்சாரியா டைரக்ட் செய்த நேரடி தமிழ்ப்படம் ஒன்றே ஒன்றுதான்.

“பெண் குலத்தின் பொன் விளக்கு” என்ற பெயர் கொண்ட இப்படத்தில் ஜெமினிகணேசன், எம்.என்.ராஜம், ஸ்ரீரஞ்சனி, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்தனர். 10-7-1959-ல் இப்படம் வெளிவந்தது. டப்பிங் படங்களில் வெற்றி பெற்ற விட்டலாச்சாரியா, நேரடி தமிழ்ப்படத்தில் வெற்றி பெற முடியாமல் போனது பெரிய ஆச்சரியமே!