ஆஸ்கர் அவார்ட் மூன்று வாங்கிய பாராசைட் படம் – மினி லுக்!

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மூன்று டைப்பிலான சிறந்த திரைப்பட விருதைப் பெற்ற முதல் அயல் மொழித் திரைப்படம் என்ற பெருமையை பாராசைட் திரைப்படம் பெற்றுள்ளது.

ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப் பட்டிருந்த தென் கொரிய திரைப்படமான பாராசைட், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த சர்வதேசத் திரைப்படம், சிறந்த அசல் திரைக்கதை ஆகிய விருதுகளை வென்றது. தென் கொரிய படமொன்று ஆஸ்கர் விருது பெறுவது இதுவே முதல் முறை, மேலும் சிறந்த திரைப்படத்துக்கான பிரிவில் மற்ற ஹாலிவுட் படங்களுடன் போட்டியிட்டு வென்றுள்ள முதல் அயல் மொழித் திரைப்படமும் பாராசைட் தான். 1917 படத்துக்கும் பாராசைட் படத்துக்குமே கடைசி கட்டத்தில் கடும் போட்டி நிலவியதாக ஹாலிவுட் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

பாராசைட்டின் வெற்றி கான்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கப் பனை விருதைப் பெற்றதிலிருந்து தொடங்கியது. தொடர்ந்து, அமெரிக்க கதாசிரியர்கள் கில்ட் விருதுகளிலும், பாஃப்தாவிலும் திரைக்கதைக்கான விருதினை வென்றது. திரை நடிகர்கள் கில்ட் விருதுகளிலும் பாராசைட் வென்றது குறிப்பிடத் தக்கது.

இந்த பாராசைட் படம் குறித்து சிறு குறிப்பு இதோ:

லோ கிளாஸ் – அப்படின்னு நம்மூரில் சொல்லப்படும் அடிமட்ட வர்க்கத்து குடும்பமொன்று, ஹை கிளாஸ் என்று சொல்லப்படும் உயர்தர வர்க்கத்துக் குடும்பத்தை கேஷூவலா மீட் பண்ணி ஒட்டுண்ணி மாதிரி பிணைஞ்சு மிடில் கிளாஸ் எனப்படும் நடுத்தர வர்க்கமாக மாற நினைக்கும் கதைதான் `பாராசைட்’.

அதாவது சோத்துக்கும், துணிக்கும் தங்கறதுக்கும் எந்த வித வருமானமும் இல்லாமால் வறுமையின் கோரப் பிடியில் வாழும் கிம் குடும்பம், வழிப்போக்கர்கள் சிறுநீர் கழித்து விளையாடும் இடத்தின் அருகே இருக்கும் ஒரு பேஸ்மென்டில் வாழ்ந்து வருகிறது.

ஏதாவது வேலைக்குச் சென்றால்தான் ஒரு வேளை சாப்பாடாவது கிடைக்கும் என்ற நிலை . ஆனால் வேலை கிடைக்காத சூழலில் ஏமாற்றியாவது ஒரு வேலைக்குப் போக வேண்டுமென்ற மனநிலைக்கு மொத்தக் குடும்பமும் வந்துடுது.

ஈபடி கிம் குடும்பம் வாழ்வதைப் போன்றதொரு பேஸ்மென்டில், விலையுயர்ந்த கார்களை நிறுத்தி வைத்து, அதை அழகு பார்க்கிறது பார்க் எனும் குடும்பம்.

இப்படியான ஒரு உயர்மட்டக் குடும்பத்தையும், அடிமட்டக் குடும்பத்தையும் இணைக்கிறது `வேலை வாய்ப்பு’ என்னும் நூலிழை

நம்ம சத்யராஜ் பாணியில் பழைய போலி ஆவணங்களைத் தயார் செய்து, நண்பர் ஒருவரின் உதவியோடு, பார்க் குடும்பத்துக்குள் ஒரு டியூஷன் வாத்தியாராக நுழைகிறார் கிம் குடும்பத்தின் மகன்.

அவரைத் தொடர்ந்து வெவ்வேறு அரசியல் செய்து கிம் குடும்பத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் பார்க் குடும்பத்தில் ஒவ்வொரு வேலைக்காக நுழைந்துவிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் குடிகாரனோடு செல்லமாய்ச் சண்டையிடுவது, கணவன் மனைவிக்குள்ளான ஊடல், பக்கத்து வீட்டு வைஃபையை தெரியாமல் பயன்படுத்துவது, தம் அடிப்பது போன்ற மென்மையான இளைப்பாறல் எல்லாம் அந்தச் சிட்டுக் குருவிக் கூடு போன்றிருக்கும் வீட்டுக்குள்தான் நிகழ்கிறது.

ஆனால் எப்போது தான் பார்க்காத மேல்த்தட்டு மக்களின் வாழ்க்கை முறைக்குள் கிம் கி-வூ நுழைகிறானோ, அப்போது ஆட்கொள்கிறது அவனது அளவில்லா ஆசை. `ஒரு முறையானால் என்ன, பல முறையானால் என்ன… ஏமாற்றுவது என்றாகிவிட்டது’ என மொத்தக் குடும்பத்தையும் இதை உணர வைக்கிறான். வறுமையென்ற ஒரே காரணத்தினால் அவர்களும் இதில் படர்ந்துவிடுகிறார்கள்.

படிப்படியாய்ப் பல்வேறு பரிமாணங்களை அடையும் அந்த ஆசையானது, இந்த வீட்டுக்குள் நாமே வந்துவிட வேண்டுமென ஒரு விபரீத முடிவை எடுக்க வைக்கிறது. நியாயமான முறையில் சம்பாதித்து வந்துவிட வேண்டுமென்பதில்லை… போலி ஆவணங்களைத் தயார் செய்ததுபோல், குறுக்கு வழியிலாவது இதை அடைந்துவிட வேண்டுமென்பதே அந்த விபரீத முடிவு. பின் இரு குடும்ப உறுப்பினர்களுக்கும் பொதுவான ஒரு பேரிழப்பு – நம் சென்னையில் வந்த வெள்ளம் மாதிரி நிகழ, தெளிந்து தனக்கான பாதையில் செல்வதோடு முடிகிறது கதை.

படம் தொடங்கி இண்டர்வெல் நம்முடைய ‘மின்சாரக் கண்ணா’ கதைதான். ஆனால், அப்பாலே ட்ராக் மாறி வேகமெடுக்கும் திரைக்கதை ஒருவித பரபரப்புடன் டார்க் ஹியூமராக போய்டும்.

சிலக் கதைகளை சொல்வதை கேட்டால் பிடிக்கும்..ஆனா இந்த கதையை பார்த்தால்(தான்) கண்டிப்பாக பிடிக்கும்