கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் என பிரமிக்கும் நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம் இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்திருக்கும் “தம்பி” படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. விழாவில் படக் குழுவினர் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் கலந்து
கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது..
இந்தப்படத்தில் நடிச்சதே எனக்கு பெருமை. ஜோதிகா மேம், சத்யராஜ் சார் கூட எனக்கு காட்சிகள் இல்லைனாலும் அவங்க படத்துல நானும் இருந்ததே சந்தோஷம். கார்த்தி சார் நடிப்பதை நேரில் பார்த்து ரசித்தேன். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எடுக்குற சிரத்தை என்னை பிரமிக்க வச்சது. படங்களை விமர்சனம் பண்றவங்க கொஞ்சம் தரம் தாழாமல் விமர்சனம் பண்ணுங்க. படம் பார்த்து தற்கொலை பண்ணிகிட்ட ஆள் இங்க யாரும் கிடையாது ஆனா படம் எடுத்து தற்கொலை பண்ணிகிட்டவங்க இருக்காங்க அதனால அத மனசுல வச்சுகிட்டு விமர்சனம் பண்ணுங்க நன்றி.
மாஸ்டர் அஷ்வந்த் பேசியதாவது…
சூப்பர் டீலக்ஸ் நடிச்சதுக்கு ரண்வீர் சிங் என்ன பாராட்டிருந்தாரு அதுக்கு தேங்ஸ். விஜய் சேதுபதி அண்ணாவும் பாராட்டியிருந்தார் அதுக்கும்
தேங்ஸ். தம்பி படம் ரொம்ப சூப்பர் படம். கார்த்தி சாருக்கும் எனக்கும் .. படத்தில் செட்டே ஆகாது. படம் நல்லா வந்திருக்கு, பாருங்க பிடிக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் R D ராஜசேகர் பேசியதாவது…
என்னோட மறக்க முடியாத படம் காக்க காக்க. இதுவரை .. கேமராவ ஜீம் பண்ணுங்க, பேன் பண்ணுங்கனு உன்னிடம் சொன்ன டைரக்ரங்க தான் அதிகம். ஆனா கேமரா நகர்த்தவே கூடாதுனு சொன்னவர் ஜீத்து ஜோசப். முதலில் அப்படி எடுக்க நிறைய சிரமப் பட்டேன். படம் முடிச்சு பார்க்கும்போது அது அழகா வந்திருந்தது. அதுல உயிர் இருந்தது. கார்த்தி நடிகர் ஆவாருனு நான் எதிர்பார்க்கல, “காக்க காக்க” காலத்தில் இருந்து அவர தெரியும். இப்ப முக்கியமான நடிகரா வளர்ந்திருக்கார். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
அம்மு அபிராமி பேசியதாவது…
கோவிந்த் வஸந்தா சாருக்கு எனது வாழ்த்துக்கள். என்ன இந்தப் படத்துல நடிக்க வச்சதுக்கு ஜீத்து ஆருக்கு நன்றி. ஜோ மேடத்த நேரில் பார்த்ததே பெரிய சந்தோஷமா இருந்தது. கார்த்தி சார் பயங்கரமா நடிக்கிறார். இந்தப்படம் சூப்பரா இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
ஹரீஷ் பெராடி பேசியது…
கைதிக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு படத்தில நடிக்கறது ரொம்ப சந்தோஷம். சத்யராஜ் சார் நிறைய மலையாள படங்கள் ரீமேக் பண்ணி நடிச்சிருக்கார். அவர் மீது அண்ணா மாதிரி உணர்வு இருந்தது. இந்தப்படமே ஒரு நல்ல அனுபவமா இருந்தது. ஜீது படத்தை நல்லா எடுத்திருக்கார். எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
நிகிலா விமல் பேசியதாவது…
ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப சின்ன ரோல் தான் முதல்ல நடிக்க மாட்டேன்னு தான் சொன்னேன். ரொம்ப முக்கியமான ரோல், ஜோதிகா மேம், சத்யராஜ் சார், கார்த்தி சார் நடிக்கிறாங்க அதனால நடிச்சேன். கார்த்தி சார் கூட நடிச்சது சந்தோஷம். ஜோதிகா மேடம் கூட ரொம்ப பயமா இருந்தது. அவங்க சூப்பரா நடிச்சிருக்காங்க. எனக்கு ஒரு நல்ல பாட்டு தந்ததற்கு கோவிந்த் வசந்தாவிற்கு நன்றி. “தம்பி” படம் டிசம்பர்ல வருது. பாருங்க பிடிக்கும் நன்றி.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசியதாவது…
உறியடி படத்துக்கு பின்ணணி இசை பண்ணினதுக்கு அப்புறம் சூர்யா சார் ஒரு லேப்டாப் கிஃப்ட் கொடுத்தார். அது தான் எனக்கு சினிமால கிடைச்ச முதல் கிஃப்ட். அந்த லேப்டாப்ல தான் தம்பி மியூஸிக் பண்ணினேன். கார்த்தி சார் ஒரு ஜீனியஸ். மெட்ராஸ் படத்துக்கு அப்புறம் நான் அவரோட பெரிய ஃபேன். ஜோதிகா மேம் கூட இந்த படம் பண்ணினது சந்தோஷம். ஜீது சார் கூட இது எனக்கு முதல் படம். படம் நல்லா வந்திருக்கு எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
2டி தயாரிப்பாளர் ராஜசேகர் பேசியதாவது…
ஜோதிகா மேடமும் கார்த்தியும் சேர்ந்து நடிக்கிற முதல் படம். படம் நான் பார்த்துட்டேன். சூப்பரா வந்திருக்கு. சூரஜ் இந்தப்படத்தில் மட்டுமல்ல 24 படத்துலயே எங்களுக்கு மிகப்பெரிய பலமா இருந்தார். 24 படத்தோட ஷூட்டிங் மும்பைல அவர்தான் பார்த்துகிட்டார். அவரோட முதல் தயாரிப்பு. மிகப்பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள் நன்றி.
ஞானவேல் ராஜா பேசியது..
மனம் படத்தை பார்த்து அதை இங்க சூர்யா சார் வச்சு எடுக்கலாம்னு கூட்டி வந்தோம். 24 கதை சொல்லி பின் அது பிடிச்சு பண்ணினோம். அந்தப்படத்துல மிகப்பெரிய பலமா இருந்தது சூரஜ். அவர் ஜெயிக்கணும். “கைதி” ஒரு பெரிய படத்தோட ரிலீஸாகி வெற்றி அடைஞ்சிருக்கு. அதே மாதிரி டிசம்பர் 20 இன்னொரு அதிசயம் நடக்கும் “தம்பி” ஜெயிக்கும் நன்றி.
S R பிரபு பேசியதாவது….
சூரஜ் தயாரிப்பாளரா அறிமுகமாகிறார். ஒரு தயாரிப்பாளாரா அறிமுகம் ஆவது சினிமாவில் மிகப்பெரிய சவால்கள் நிறைந்தது. அவருக்கு வாழ்த்துக்கள். கார்த்தியால் தான் இன்று நான் இங்கிருக்கேன்.கைதியின் வெற்றிக்கு நன்றி. “தம்பி”அதே அளவு வெற்றி பெறும் வாழ்த்துக்கள்
தயாரிப்பாளர் சூரஜ் பேசியதாவது..
எல்லோருக்கும் நன்றி. இங்கிருக்கும் நண்பர்கள் மிகப்பெரிய வழி காட்டியா இருந்தாங்க. இந்தப்படத்தில் நடிகர் பட்டாளம் மிகச் சிறந்த பலமாக இருந்தது. ஜோதிகா, கார்த்தி தவிர சௌகார் ஜானகி மேடம் சத்யராஜ் சார் பெரிய ஒத்துழைப்பு தந்தாங்க. ஜீத்து அருமையா படமாக்கியுள்ளார். படம் எல்லோருக்கும் பிடிக்கும் உங்க எல்லாருக்கும் நன்றி.
இயக்குநர் ஜீது ஜோசப் பேசியதாவது…
பாபநாசம் என்னோட முதல் தமிழ்ப்படம் அதுக்கப்புறம் நல்ல கதைக் காக வெயிட் பண்ணினேன். சூரஜ் இந்த ஐடியா சொன்னார். ஜோதிகா கார்த்தி அக்கா தம்பியா நடிக்கிற ஐடியா இருக்குனு சொன்னவுடனே இத மிஸ் பண்ணக்கூடாதுனு ஒத்துகிட்டேன். சத்யராஜ், சௌகார் ஜானகி மேடம் இந்தப்படத்துக்கு மிகப்பெரிய பலம். கோவிந்த் வசந்தா அற்புதமாமான இசை தந்திருக்கார். இது ஒரு டீம் ஒர்க் எல்லோரும் அவங்களோட பெஸ்ட் கொடுத்திருக்காங்க. இது குடும்பங்கள் ரசிக்கிற கமர்ஷியல் படம். எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
சத்யராஜ் பேசியதாவது…
ஒரு குடும்பம் தொடர்ந்து என்ன பயமுறுத்திட்டு இருக்குனா அது சிவக்குமார் குடும்பம் தான். அவர் மாதிரி ஒரு நல்ல நடிகனா இருக்க முடியுமா பயம், அவர் மாதிரி பிள்ளைகள் வளர்க்க முடியுமா பயம். இப்படி தொடர்ந்து பயமுறுத்திட்டு இருக்காங்க. இந்தப்படத்தோட இயக்குநர் ஜீத்து ஜோசப் போட பாபநாசம் மூணு மொழில பார்த்தேன். அவர் கூட வேலை செய்ய முடியுமானு நினைச்சேன். இந்தப்படம் வாய்ப்பு கிடைச்சது. இதுல எனக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம். சாராசரி பாத்திரம் பண்றதுல எனக்கு விருப்பம் இல்ல ஆனா இந்தப்படத்துல பாகுபலி மாதிரி ஒரு வித்தியாசமான, நடிப்புக்கு வாய்ப்புள்ள படம். இயக்குநர் தனக்கு என்ன வேணுங்கறதுல தெளிவா இருப்பார். நான் அதிகமா இன்வால்வாகி கொஞ்சம் ஓவரா நடிச்சுடுவேன் ஆனா அவர் அதெல்லாம் வேணாம்னு ஒரே வார்த்தையில் சொல்லிடுவார். நான் அப்படி தான் படத்த கெடுக்கிற எல்லா வேலையும் பார்ப்பேன் அதையெல்லாம் கட்டுபடுத்தி என்ன இந்தப்படத்துல நடிக்க வச்சிருக்காங்க. இந்தப் படத்தில நடிச்சது ரொம்ப சந்தோஷம். நன்றி.
ஜோதிகா பேசியது…
அப்பா அம்மா முன்னாடி மேடையில் தமிழ் பேசறதுக்கு எனக்கு பயம். தம்பி எனக்கு படம் இல்ல ஒரு செண்டிமெண்ட். என் தம்பியோட நடிக்கிற முதல் படம். என் அம்மா ஒரு நாள் ஷூட்டிங் வந்தாங்க. அவங்கள நான் சாப்பிடுங்கனு சொன்னேன் ஆனா அவங்க நான் ஹீரோயின் அம்மாவா வரல, நான் என்னோட பையன் படத்திற்கு வந்துருக்கேன்னு சொன்னாங்க. அவங்க முகத்தில் அவ்வளவு பெருமிதம். எனக்கும் அவ்வளவு பெருமிதம் இருக்கு. கார்த்திகிட்ட முதலிலிருந்தே ஒரு விசயம் சொல்ல வேண்டியது இருக்கு. அவரோட எல்லாப்படத்திலேயும் அவர் கூட நடிக்கிற கேரக்டர்களுக்கு சமமான இடம் கொடுப்பார். ரஜினி சார் கூட சந்திரமுகி நடிச்சப்போ முதல் நாள் அவர் வந்து இது உன்னோட படம் நல்லா பண்ணு, சந்திரமுகி பேரே உன்ன வச்சுதான்னு சொன்னார். எவ்வளவு பெரிய மனுசன்னு தோணுச்சு. அதே ஃபீல் கார்த்திகிட்ட இருந்தது. தன் கூட நடிக்கிறவங்களுக்கு அவ்வளவு இடம் கொடுக்கிறார். சத்யாராஜ் சார் கூட நடிச்சது மிகப்பெரிய சந்தோஷம் வீட்டில் சொன்னப்போ என் குழந்தைகள் அம்மா நீங்க கட்டப்பா கூடவா நடிக் கிறீன்ங்கனு கேட்டாங்க. அவங்களுக்கு அது தான் ஸ்பெஷல். இயக்குநர் ஜீத்து ஜோசப் ரொம்பவும் அன்பான மனிதர். அவர் வீட்டில் இருந்து அவரோட பெண்கள் உதவி இயக்குநரா வேலை பார்த்தாங்க அவங்கள பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருந்தது. கோவிந்த் வசந்தா மியூஸிக் என்னோட ஃபேவரைட். சூப்பரான மியூஸிக் தந்திருக்கார். இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
கார்த்தி பேசியதாவது…
இரண்டு வருட உழைப்பு இந்தப்படத்துக்கு பின்னாடி இருக்கு. சத்யராஜ் சார் வராட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். ஒவ்வொன்னா சேர்த்து இந்தப்படத்த உருவாக்க இரண்டு வருஷம் ஆகியிருக்கு. இயக்குநர் ஏற்கனவே மோகன்லால், கமல் சார் படமெல்லாம் பண்ணிட்டு வந்திருக்கார். எனக்கு பயமா இருந்தது. ஆனா எதிர்பார்த்தற்கு எதிரா அவ்வளவு இயல்பா, நட்பா இருந்தார். அவருக்கு என்ன வேணுங்கறதுல ரொம்பவும் தெளிவா இருந்தார். அப்புறம் அண்ணி கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தை, உழைப்பு பிரமிப்பு தருது. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல. நடிச்சது சந்தோஷம். சத்யாராஜ் மாமா இல்லாட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரகடர். சினிமாவில் ஒழுக்கம் என்பதை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். இன்னும் அவர் தொழில் மேல காட்டுற மரியாதை பெரிசு. கட்டப்பால்லாம் இன்னிக்கி பண்ண இந்தியாவுல ஆள் இல்லை. இளவரசு, ரமேஷ் திலக் ரெண்டு பேரையும் நீங்க ரசிப்பீங்க. கோவிந்த் வசந்தா அலட்டிக்காம, கஷ்டமே படாம ரொமப ஈஸியா மியூஸிக் பண்ணிடுறாரு, அவருக்கு அது வரம். படம் பார்த்தேன் மியூஸுக் அவ்வளவு நல்லா வந்திருக்கு. ஒரு நல்ல நடிப்ப இன்னும் அழகு கூட்டி காட்டறது மியூஸிக் தான். கைதிக்கு அப்புறம் இந்தப்படம் வர்றது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். எல்லோருக்கும் நன்றி
சூர்யா பேசியது…
ரொம்ப நெருக்கமான படைப்பு. சத்யராஜ் மாமா, ஜோ, கார்த்தி, சூரஜ் எல்லாரும் இணைஞ்சிருக்க படம். ஒரு சின்ன கரு இவ்வளவு பெரிய படமா மாறியிருக்கிறது ஆச்சர்யமா இருக்கு. கார்த்தி இப்படி படங்கள் நம்பி பண்றது பெருமையா இருக்கு. கார்த்தி ஜோ இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள். கிளிசரின் போடமா என்னால அழவே முடியாது “நந்தா” படத்தில மட்டும் தான் என்னால அப்படி நடிக்க முடிஞ்சது . ஆனா கார்த்தி கிளிசரின் போடாம அத அநாயசமா பண்ணிடுறாரு. கைதி வரைக்குமே அத நான் பார்த்துட்டு இருக்கேன் ரொம்ப ஈஸியா பண்ணிடுறார். ஜீத்து ஜோசப் பாகுபலி அளவு பிரமாண்ட படத்திற்கு இணையா பாபநாசம் படத்தை இந்தியா முழுக்க கொண்டு போனவர். அவர் இந்தப்படம் செஞ்சிருக்கறது சந்தோஷம். கோவிந்த் வசந்தா நான் சந்திச்சப்போ எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கார். படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையா வந்திருக்கு. படமும் அழகா இருக்கு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். இறுதியாக ரசிகர்களுக்கு உறவுகளுக்கு நாம் கார்த்தி எவ்வளவு அவசரம் இருந்தாலும் அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்துடுங்க, 3 மணி, 4 மணிக்கு பயணம் செய்வதால் சில தவறான சம்பவங்கள் நடந்து விடுகிறது. நாம நினவுகள் இல்லாம நம்ம கட்டுப்பாடு மீறி சில விசயங்கள் நடந்துடுது. தயவு செய்து அத தவிர்த்துடுங்க. எல்லோருக்கும் நன்றி