‘காளிதாஸ்’ – ரியல் க்ரைம் திரில்லர் படம் = 13ம் தேதி ரிலீஸ்!

0
263

தற்போது பரத் நடித்து வெளிவரவிருக்கும் புதிய திரைப்படம் ‘காளிதாஸ்’. லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்துள்ள இந்த ‘காளிதாஸ்’ படத்தில் பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். புவன் சீனிவாசன் படத் தொகுப்பை கவனிக்கிறார். திரைக் கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீசன் – 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக கைபேசி உபயோகத்தினால் பல பிரச்சனைகள் உருவெடுக்கிறது. உதாரணமாக சொன்னால், கைபேசியினால் குடும்பத்திற்குள் பிரச்சனை, பணியிடத்தில் பிரச்சனை என பல வகையான பிரச்சனைகள் தினம்தோறும் தொடர்கிறது. அப்படிப்பட்ட கைபேசி பிரச்சனைகளில் ஒன்றை தேர்வு செய்து அதன் மூலம் நடக்கக்கூடிய சைபர் க்ரைம், அதனை தொடர்ந்து நடக்கக் கூடிய தொடர் கொலைகளை கொண்டு ஒரு கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீ செந்தில்.

இப்படத்தின் சிறப்பு காட்சி சில தினங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. அப்படத்தை பார்த்தவர்கள் ‘காளிதாஸ்’ திரைப்படம் ரியல் க்ரைம் திரில்லர் படமென்றும், இது தடம், ராட்சசன், ஜிவி போன்ற படங்களின் வரிசையில் இருக்கும் என தெரிவித்தனர். இன்று பலர் தங்களுடைய குடும்பங்களில் அவர்கள் தவறவிடும் பாசம், பந்தம், உறவு அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி இப்படம் பேசும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிகர் பரத் காவல் துறை அதிகாரி கதாபாத்திரம் ஏற்று படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் மிக பெரிய ப்ளஸ், இப்படத்தின் க்ளைமாக்ஸை யூகிக்க முடியாது என்று படம் பார்த்தவர்கள் குறிப்பிடுகின்றனர். பரத்துக்கு இப்படம், தமிழ் சினிமாவில் ஒரு ரீ என்ட்ரியாக இருக்கும் என்றும் கோலிவுட்டில் சொல்கின்றனர்.

தினகரன் மற்றும் எம்.எஸ்.சிவநேசன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த ‘காளிதாஸ்’ திரைப்படம், வரும் 13ம் தேதி உலகெங்கும் 300க்கும் அதிகமான திரைகளில் வெளியாகிறது.