தமிழ் சினிமாவை அழிக்கும் பஞ்ச பாண்டவர் அணி-! சுரேஷ் காமாட்சி ஆவேசம்!

‘மிக மிக அவசரம்’ படத்துக்குத் திரையரங்குகள் தர மறுப்பு தெரிவித்து இருப்பதற்குத் தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. நேற்று (அக்டோபர் 11) இந்தப் படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், வெறும் 17 திரையரங்குகள் மட்டுமே கிடைத்ததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளது படக்குழு. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ரவீந்திரன் சந்திரசேகரன், ‘மிக மிக அவசரம்’ வெளியீடு தொடர்பான தன் வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் மிக மிக அவசரம் படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி, ““எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நேற்று (அக்-11) வெளியாக இருந்த ‘மிக மிக அவசரம்’ திரைப்படம் சொன்னபடி வெளியாகவில்லை..

பெண் காவலர்களின் வலியைப் பற்றி பேசும் நல்ல படம் என விநியோகஸ்தர்களே பாராட்டிய இந்தப்படம் ஏன் வெளியாக முடியாமல் போனது..?

கடந்த 15 நாட்களுக்கு முன்பே போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் என உறுதி செய்யப்பட்ட பின்னரே ரிலீஸ் தேதியை முடிவு செய்து விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்தோம்..

ஆனால் எங்களுக்கு பிறகு வந்த. நேற்றைய தேதியில் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்ட படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தியேட்டர்களை ஒதுக்கியுள்ளார்கள்..

ஏனென்றால் தியேட்டர் அதிபர்களில் சிலரே சம்பந்தப்பட்ட அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் செய்திருக்கிறார்கள்.. அதனாலேயே அந்த படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

அதுமட்டுமல்ல வெளி மாநில படங்களுக்கும் கூட அதிக முன்னுரிமை கொடுக்கிறார்கள்.. ஆனால் தமிழ்ப் படங்களைக் கண்டு கொள்ள மறுக்கிறார்கள்.. இதேபோல மற்ற மாநிலங்களில் தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களா..? இல்லவே இல்லை..

இதுபோன்ற அராஜகத்தின் மூலம் தமிழ் சினிமாவை அழிப்பதற்கு ஐந்து பேர் கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பி உள்ளார்கள்.. இந்த ஐந்து பேரும் ஒரு சிண்டிகேட் அமைப்பாக சேர்ந்துகொண்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அழிக்க நினைக்கிறார்கள்..

நினைத்த விலைக்கு தியேட்டர்களில் உணவு தின்பண்டங்களின் விலையை ஏற்றுவது, பார்க்கிங் கட்டணத்தை உயர்த்துவது என இவர்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகிறது..

இவர்களுக்கு தின்பதற்கும் தூங்குவதற்கும் தயாரிப்பாளர்கள் காசு தான் கிடைத்ததா..?

சின்ன படங்கள் இல்லாமல் எப்படி இத்தனை காலம் இவர்கள் தியேட்டரில் சம்பாதித்திருக்க முடியும்..?

இன்றைக்கு இருக்கும் சூப்பர் ஸ்டார் முதல்கொண்டு அனைவருமே சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து பெரிய ஆளாக ஆனவர்கள் தான்..

இன்று வருடத்திற்கு வெளியாகும் படங்களில் 10% தான் பெரிய படங்கள்.. மீதி 90% சின்ன படங்கள்தான்.. அப்படி சின்ன பட்ஜெட் படங்களுக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் ஒதுக்க முடியாது என்றால். அதை முன்கூட்டியே சொல்ல வேண்டியதுதானே..? ரிலீசுக்கு முதல் நாள் சொன்னால், அதுவரை நாங்கள் செய்த விளம்பர செலவு அனைத்தும் வீண் அல்லவா..? அந்த பணத்தை யார் எங்களுக்கு திருப்பிக் கொடுப்பார்கள்..?

அப்படி சின்னப் படங்களை ஒழித்து, பெரிய படங்களைத்தான் ரிலீஸ் செய்வோம் என்றால் அதை வெளிப்படையாக அறிவித்து விடுங்கள்..

நாங்களும் பெரிய படங்களை எடுத்துத் தருகிறோம்.. எங்களிடம் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்குங்கள்.. நாங்கள் பணத்தைக் கொட்டி படம் எடுத்தால், நீங்கள் ஓசியில் எந்த செலவும் இல்லாமல் எங்கள் மூலமாக பணம் சம்பாதிப்பது என்னவிதமான பிழைப்பு..?

சி ஃபார்ம் வைத்திருப்பவர்கள் தானே தியேட்டர் நடத்த வேண்டும்..? இந்த பஞ்ச பாண்டவர் அணியோ, சி ஃபார்ம் வைத்திருக்கும் தியேட் டர்களை எல்லாம் சிண்டிகேட் முறையில் ஒருங்கிணைத்து தங்கள் கைவசம் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் கள்..? இவர்களுக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது..?

அரசாங்கம் அதிகாரம் கொடுத்து இருக்கிறதா.? அப்படி எதுவும் இல்லையே..

தமிழகத்திற்கு 5 முதல்வர்களை தந்தது இந்த சினிமாதான்.. ஆனால் இன்று யாரோ ஐந்து பேர்களின் கைகளில் சிக்கிக்கொண்டு குற்றுயி ரும் குலையுயிருமாக சீரழிந்து வருகிறது.. தமிழ் சினிமாவை மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்த பஞ்ச பாண்டவர்களை ஒழித்தால்தான் சாத்தியம் ஆகும்.

அதனால் தமிழ் சினிமா வாழ வேண்டுமென்றால் இந்த ஐந்து பேரின் அராஜகம் ஒழியவேண்டும்.. இதற்காக ஒட்டுமொத்த தமிழ் திரைப் படத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இவர்களை ஒழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று காட்டமாக முக நூலில் தெரிவித்துள்ளார்.