யாரையும் புண்படுத்தி நான் காமெடி பண்ணுவதில்லை – A1 ஹீரோ சந்தானம் ஓப்பன் டாக்!

சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘A 1’. புதுமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தானம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், தாரா அலிசா பெரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூலை 26-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சந்தானம் பேசி முடித்தவுடன், ‘பத்திரிகையாளர்கள் கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேளுங்கள்’ என்று கூறினார். அப்போது சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘A 1’ டீஸர் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சந்தானம், “டீஸர் என்பது படத்தை டீஸ் பண்ணுவதற்காக உருவாக்கப்பட்டது. படமாகப் பார்க்கும் போது அது தெரியாது. காமெடி படம் என்றாலே ஒரு மோதல் இருந்தால் தான் அதை வைத்து காமெடி பண்ண முடியும். சார்லி சாப்ளின் தொடங்கி நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு வரை அதைத் தான் செய்திருக்கிறார்கள். நாம் செய்வதற்கு எதிர்வினையாக நடந்தால் தான் காமெடி நடக்கும். அய்யர் பெண் – லோக்கல் பையன் இருவருக்குள் நடக்கும் கதை என்பதால், அதற்குள் தான் காமெடி பண்ண முடியும்.

யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட படமல்ல. படம் பார்த்தால் அது தெளிவாகப் புரியும் என்று நம்புகிறேன். காமெடிக்கு முதலில் சுதந்திரம் வேண்டும். அதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யக்கூடாது என சொல்லிக் கொண்டிருந்தால் எப்படித் தான் காமெடி பண்ணுவது. திரை யரங்கிற்கு வருபவர்களை பின் எப்படித் தான் சிரிக்க வைப்பது?. நேரடியாகத் திரையரங்கிற்குச் சென்று அக்குள்ளே கை விட்டு கிச்சுகிச்சு மூட்டித்தான் சிரிக்க வைக்க முடியும்.

‘டகால்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சிகரெட் பிடிப்பது போல் இருந்த தற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதற்கு நான் என் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரினேன். அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யாரென்றால் பப்ளிசிட்டிக்காக பண்ணுபவர்கள் தான். சந்தானம் படத்துக்கு காமெடியை எதிர்நோக்கி தான் வருவார்கள். ஆகையால் யாரையும் புண்படுத்தி நான் காமெடி பண்ணுவதில்லை.

தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் பல வகைகளில் காமெடி பண்ணுகிறார்கள். இங்கு பல கட்டுப்பாடுகளுக்குள் காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறோம். எதையும் சொல்லாதே, ஆனால், காமெடி வேண்டும் என்றால் எப்படி பண்ணுவது?. சீப் பப்ளிசிட்டிக்காக பண்ணுபவர்களை புறந்தள்ள வேண்டும்” என்று பதில் அளித்துள்ளார் சந்தானம்.