காலேஜ் குமார் பட துவக்க விழா ஹைலைட்ஸ்!

பெற்றோர்கள் இந்த தலைமுறையினரை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்? பெற்றோர்களை மாணவ, மாணவிகள் எந்த கண்ணோட்டத்தில் நடத்துகிறார்கள் என்று காமெடியுடன் படம் சொல்லி கன்னடத்தில் ரிலீஸாகி ஹிட் ஆன படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் புதுமுக இயக்குநர் ஹரி சந்தோஷ். ஆம்.. இவர் கன்னடத்தில் இயக்கிய காலேஜ் குமாரா படத்தின் தமிழ் ரீமேக்கை அறிமுக நடிகர் ராகுல் விஜய் மற்றும் நடிகை பிரியா வட்லமணி ஆகியோரைக் கொண்டு எடுக்க உள்ளார். இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் அக்னிதேவி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ள மதுபாலா நடிக்க உள்ளார். இப்படத்தின் துவக்கவிழா சென்னை யில் நடந்தது. அதிலும் இளைய திலகம் பிரபுவின் 225-வது படமாக இந்த ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாராகிறது.

இந்நிகழ்ச்சியில் பிரபு பேசிய போது, ““நான் 37 வருடங்களாக சினிமாவில் நடித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. காலேஜ் குமார் 225-வது படமாக தயாராகிறது. 22 வருடங்களுக்கு முன்பு நானும் மதுபாலாவும் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் ஜோடியாக நடித்தோம். தற்போது காலேஜ் குமார் படத்தில் மீண்டும் சேர்ந்து நடிக்கிறோம். கன்னடத்தில் ஏழு படங்களை இயக்கியுள்ள ஹரி சந்தோஷ், கர்நாடக அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார். எனக்கும் அறிமுக இயக்குநருக்கும் ரொம்ப ராசி. இதுவரை 81 புதுமுக இயக்குநரை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறோம். இதுக் கிடையில் எனது மகன் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து எப்போது நடிப்பீர்கள் என்று பலரும் கேட்கிறார் கள். நல்ல கதை அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம்.” இவ்வாறு பிரபு கூறினார்.

படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் மதுபாலா பேசும்போது ’ரோஜா, அழகன், ஜென்டில்மேன் அப்படின்னு தமிழ் சினிமா எனக்கு நிறைய பேர் வாங்கிக் கொடுத்திருக்கு. தமிழ் படத்துல வாய்ப்பு கிடைக்குறது ரொம்ப அதிர்ஷ்டம். பிரபு சார் இருக்காங்கன்னு சொன்ன உடனே 20 வரு‌ஷத்துக்குப் பிறகு பிரபு சாரோட இந்தப் படத்துல நடிக்கப் போறோம்னு சந்தோ‌ஷத்துல இருந்தேன். பாஞ்சாலங்குறிச்சி பட ஷூட்டிங் நேரத்துல பொள்ளாச்சில என்னை, தன் குடும்பத்துல ஒருத்தரா தங்கை மாதிரி பார்த்துக்கொண்டார். எல்லோரும் அவரைப்பத்தி இவ்வளவு நல்லபடியா பேசுறாங்கனா அதுக்கு அவரோட பண்புதான் காரணம். 20 வருடத்துக்குப் பிறகும் அதேமாதிரி இருக்கார்”என்று அவர் தெரிவித்தார்.