சேரனின் திருமணம் – விமர்சனம்!

நம்மில் எல்லோர் இல்ல திருமணங்களில் வண்ணமும், வாசமும் நிறைந்திருக்கும். பல்வேறு சடங்குகளுக்கும் குறைவிருக்காது. மணமக்கள் மகிழ்ச்சியாக நீடுழி வாழ வேண்டும் என்பதே அதற்கு அடிப்படை. இதையொட்டி சில திருமண நிகழ்வுகள் நான்கு நாட்கள் வரை நீடிக்கும். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். அத்தனை பேருக்கும் அறு சுவை விருந்து. அதற்கான செலவைச் சத்தமாகச் சொல்லி விட முடியாது. இந்த ஒற்றைத் திருமணத்திற்காக, வாழ் நாள் சேமிப்பைச் செலவிடத் தயங்குவதில்லை பாசமிக்க தந்தையர் பலர். அண்மையில் சினிமா பிரபலம் ஒருவரின் மகளுக்கு இரண்டாம் திருமணம். செலவு எவ்வளவு தெரியுமா? அது சரி.. அது எதற்கு இப்போது? ஆனால் இந்த போக்கால் கவரப்பட்டு அவரது ரசிகர் ஒருவர் தன் மகளுக்கு கடன் வாங்கி இதே பாணியில் மேரேஜ் நடத்த ஆசைப் பட்டு அதற்கு வழியில்லாததால் சூசைட் செய்து கொண்டார் என்றொரு செய்தி சென்னை நாளிதழ்களில் இடம் பெற வில்லை என்பதுதான் சோகம். பெரும்பாலும் இந்த திருமண கோலாகல விழா மோகம் நடுத்தரக் குடும்பங்கள் பலவற்றை கடனில் தள்ளி, அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றி சோகத்தில் மூழ்க வைக்கிறது என்பதுதான் உண்மை. அதே சமயம் கடந்த மாதம் ஒரு யூ டியூப் சேனல் நம் சென்னை இளைஞர், இளைஞி களிடையே எடுத்த ஒரு சர்வே-யில் இது போன்ற ஆடம்பர் திருமணம் வேண்டாம் என்று சொன்னோரே அதிகம்.. அந்த சிந்தனையை வலியுறுத்தி அந்த ஒரு நாள் கூத்துக்கு எக்க்ச்சக்கமான செலவு  செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தி கூடவே இயற்கை விவசாயம், குடும்ப உறுப்பினர்களின் வாழ்வியல் நிலைமை உள்ளிட மறைக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்படும் சில பல உண்மைகளை சுட்டிக்காட்டும் படம்தான் சேரனின் ‘திருமணம்’

அதாவது நாயகன் ரேடியோ ஜாக்கியான உமாபதி ராமையாவும், நாயகி காவ்யா சுரேஷும் ஃபேஸ் புக் மூலம் நண்பர் களாகி பிறகு நேரில் மீட் செய்து காதலர்களாகி உடனடியாக திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். இவர் களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமண வேலைகளிலும் இறங்கிவிடுகிறார்கள். ஆனால் ஜமீன் குடும்பம் என்று சொல்லிக் கொள்ளும் உமாபதி ராமையாவின் அக்கா சுகன்யா, தனது ஒரே தம்பி உமாதிபதி யின் திருமணத்தை ஊரே அசந்து போகும் அளவுக்கு தடபுடலாக நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் திட்டம் போட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, அரசு ஊழியரான சேரன், தனது தங்கை காவ்யா சுரேஷின் திருமணத்தை எளிமையாக நடத்தி, திருமண செலவை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால்  தொடரும் முரண்பாட்டால் அடுத்தடுத்து சர்ச்சையாகி திருமணமே நின்று போய்விடுகிறது. இதனால் இளம் ஜோடி கள் மனம் உடைந்துபோக, அவர்களால் பெரியவர்களும் வருத்தப்பட, இறுதியில் இந்த பிரச்சினை எப்படி தீர்வு கண்டு திருமணத்தை நடத்துகிறார்கள், அது என்ன தீர்வு, என்பது தான் ‘திருமணம்’ படத்தின் கதை.

முன்னரே குறிப்பிட்டது போல் ஊர் கூடி,உறவுகள் கூடி மகிழும் கல்யாணம் உறவுகளையும்,நட்பு வட்டாரத்தையும் பலப்படுத்துவதற்கு பதிலாக ஊரின் முன் பண பலத்தை நிரூபிக்கும் விதமாக இருக்கின்றன. இன்று திருமண விழாக் கள் பல லட்சங்கள் ,கோடிகளை கரைக்க்கும் போக்கு நிலவுவதால் என்ன விளைவாகும் என்பதையும் அதே செலவை செய்யாமல் சேமிப்பதன் மூலம் என்ன பயன் என்பதையும் அழகான படமாகக் காட்டியுள்ளார் சேரன்.

படத்தின் குறை அது அல்லது இது என்று எதையெதையோ சொல்ல முடியும்.. ஆனால் சிலபல ஆண்டுகள் சினிமா வில் எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் இருந்தவருக்கு மறுவாழ்வு தரும் ஒரு சினிமா-வை ஆக்கப்பூர்வமாக கொடுத்திருப்பதை பாராட்டியே ஆக வேண்டும். அதிலும் தற்போது வீட்டின் ஹாலிலும், பெட்ரூமிலும் வந்தமர்ந்து காணும் சின்னத்திரை என்னும் டி வி சீரியல்களில் சொல்லப்படாத சேதியை சொல்லி தனிக் கவனம் பெறுகிறார் சேரன். ஆனால் ஒரு அண்ணனாகவும், நேர்மையான, சாதாரண குடும்ப தலைவனாகவும் சிறப்பாக நடித்திருக்கும் சேரன் த முகத்தை ஏன் பாறாங்கல் போலவே வைத்திருக்கிறார் என்று பக்கத்துச் சீட் பெரிசு கேட்டார். உமாபதி, காவ்யா சுரேஷ் இருவருமே கொடுக்கப்பட்ட ரோலுக்கு தேவையான நடிப்பை வழங்கி விட்டு செல்கின்றனர். தம்பிக்காக வாழும் அக்காவாக சுகன்யா கொஞ்சம் மிகைதான் என்றாலும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ், மனோபாலா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களது பணியை திருப்திகரமாக செய்திருக்கின்றனர். சித்தார்த் விபினின் பின்னணி இசையும் பாடல்களும் வீணாகி போய் விட்டது. சேரன் படங்களில் ஏதாவதொரு பாடல் காலமெல்லாம் கவனம் ஈர்க்கும் நிலையில் இப்படத்தில் அதை கோட்டை விட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் குடும்பம் என்ற உறவை விரும்பும் சகலரும் பார்க்க வேண்டிய படமிது.