‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி,பொன்ராம்,மித்ரன்.R.ஜவஹர், கார்த்திக் சுப்புராஜ்,’சிறுத்தை’சிவா,பேரரசு,கதிர்,சரண்,எழில்,இராஜகுமாரன்,சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின்,R.V.உதயகுமார்,P.வாசு, இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி,R.பார்த்திபன் K. பாக்யராஜ், ரமேஷ் கண்ணா,நடிகர்கள் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார்,ஜீவா, ‘ஜெயம்’ரவி,நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜெயபிரகாஷ்,தயாரிப்பாளர்கள் ‘கலைப்புலி’S.தாணு,T.சிவா,சுரேஷ் காமாட்சி, தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் நிகழ்ச்சியின் முதலில் படத்தின் தயாரிப்பாளர் K.S.ரவிக்குமாரின் அழைப்பிற்கிணங்க படத்தின் இரண்டு இயக்குனர்களில் ஒருவரான சூர்யகதிர் அவர்களை இயக்குனர் K.பாக்யராஜ் அறிமுகம் செய்து வைத்தார். இன்னொரு இயக்குனர் கார்த்திகேயன் அவர்களை இயக்குனர் P.வாசு அறிமுகம் செய்து வைத்தார். படத்தின் கதாநாயகனான விஜய் கனிஷ்கா அவர்களை நடிகர் ‘ஜெயம்’ரவி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் படக்குழுவினர் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில்,
இயக்குனர் K.S.ரவிக்குமார்:
K.S.ரவிக்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசும் பொழுது,”இந்த திரைப்படம் உருவாவதற்கு காரணமான ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ் கார்த்திக், கமலக்கண்ணன், சீனிவாசன், விஜயகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மரியாதை செய்கிறேன். எதார்த்தமாக வீட்டில் பேசும்போது ‘விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடிக்க விரும்புகிறார், நீங்களே உங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து வையுங்கள்’ என்று விக்ரமன் அவர்கள் கூறியது இன்று உண்மையாகியுள்ளது.
முதலாவதாக ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் அவர்களுக்கு, என் மீதும் இயக்குனர் விக்ரமன் அவர்கள் மீதும் அன்பு பாராட்டி, இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஒத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கதைக்காகவும் கதாபாத்திரத்துகாகவும் ஒத்துக் கொண்டு கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் நடித்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட சித்தாரா அவர்களுக்கும் மிக்க நன்றி.துணைக் கதாப்பத்திரங்களில் நடித்த அனைவருக்கும் மிக்க நன்றி. என்னதான் என்னுடைய உதவி இயக்குனர்களையே இந்த திரைப்படத்தின் இயக்குனர்களாக பணிபுரிய வைத்தாலும் அவர்கள் திரைக்கதையை சிறப்பாக உருவாக்கினார்கள். அதேபோல் அவர்கள் எப்படி பணிபுரிகிறார்கள் என்று சரத்குமார் மற்றும் கௌதம் இருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டேன். இங்கு வந்து வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி:
அடுத்ததாக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி பேசும்போது,”பல வித தடைகளுக்கு நடுவே உருவாகி இருக்கும் இப்படத்தின் தரம் டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடித்திருப்பதை விட, கதாபாத்திரத்திரமாக சரத்குமார், கௌதம் மேனன் போன்றோர் நடுவே சிறப்பாக நடித்திருக்கிறார்.கண்டிப்பாக இத்திரைப்படம் வெற்றியடையும் என்று வாழ்த்துக்கிறேன்,” என்றார்.
இயக்குனர் மிஷ்கின்:
இயக்குனர் மிஷ்கின் அவர்கள் பேசும்பொழுது,” தலைசிறந்த ஒரு அரசனின் பெயரை தன் மகனுக்கு சூட்டியுள்ளார்.விக்ரமன் அவர்களின் படத்தலைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் கனிஷ்காவிற்கு இந்த அளவுக்கு ஆதரவு இருப்பது வரவேற்கத்தக்கது. விஜய் கனிஷ்காவிற்கும் இயக்குனர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.ரசிகர்கள் அனைவரும் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டுகிறேன்”, என்றார்.
‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார்:
‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் பேசும்பொழுது,”இயக்குனர் திரு.K.S.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் இருவரும் என் வாழ்வில் முக்கியமான நபர்கள் அவர்கள் எனக்கு மறக்க முடியாத தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். இவர்கள் இருவரும் தலைசிறந்தவர்கள், அவர்கள் என்றும் வாழ்நாளில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான்.எவ்வளவோ பிரச்சினைகள் எனக்கும் K.S.ரவிக்குமார் அவர்களுக்கும் வந்தாலும் அவர் ஒரு தங்கமான மனிதர். இது ஒரு குடும்ப விழா.விஜய் கனிஷ்கா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் C.சத்யா அவர்களும் சிறப்பான இசையை கொடுத்துள்ளார். ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”, என்றார்.