படத்தின் தலைப்பு சர்ச்சைதான்! – தீர்ப்புகள் விற்கப்படும்’ டைரக்டர் தீரன்!!

ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை 3 மணி நேரத்திற்குள் பார்வையாளர்களின் மனதிற்குள் ஆழமாக பதிவு செய்வதே சினிமாவின் சக்தி என்று கூறலாம். இதை நன்கு அறிந்த நடிகர்கள் நடிகர் சத்யராஜ் தன் திரைப் பயணத்தில், அநீதிகாக போராடும் நேர்மையான காவலர் முதல் துடிப்பான இளைஞர்வரை அத்தனை கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டார். இப்போது அவருடைய முந்தைய கதாபாத்திரங்களையும் தாண்டிய ஒரு புதிய கதாபாத்திரத்தில் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்கிற படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். இந்தத் தீர்ப்புகள் விற்கப்படும் திரைப்படத்தை ஹனிபீ கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கிறார்.

‘கருட வேகா’ படத்தின்  ஒளிப்பதிவாளர் ஆஞ்சி இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். மான்ஸ்ட்ரோ 8-k விஸ்டா விஷன் வெப்போன் 8-k ஹீலியம் கேமரா சாதனங்கள் முதல் முறையாக ஒரு திரைப்படத்துக்காக பயன்படுத்துவது  இதுவே முதல் முறை.  ‘யாமிருக்க பயமேன்’ மற்றும் ‘காட்டேரி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த எஸ்.என்.பிரசாத் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். பிரபல படத் தொகுப்பாளர் ரூபனின் உதவியாளர் சரத் இந்தப் படத்தில் படத் தொகுப்பாளராக அறிமுகமாகிறார். ‘குட்டிப் புலி’, ‘ஜெயில்’ ஆகிய படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் கல்லெரி இந்தப் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மேலும் நிஹிதா வின்சென்ட் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார். தினேஷ் சுப்பராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். அறிமுக இயக்குநரான தீரன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை துவங்கியது.

இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் சாஜீவ் பேசும்போது, “சத்யராஜ் சாரின் உழைப்பு எங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது. தன் கலையின் மீது அவருக்கு இருக்கும் அற்பணிப்பே அவரின் ஒட்டு மொத்த உழைப்பையும் கேட்கிறது. ஒரு தயாரிப்பாளராக இருப்பதைவிட, இத் திரைப்படத்தை அவருடன் பணியாற்றுவதற்கான  மிகப் பெரிய அனுபவமாகவே பார்க்கிறேன்..” என்றார்.

அறிமுக இயக்குநரான தீரன் கூறுகையில், “சமுதாயத்தின் மீது ஒரு தனி மனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ‘A Wednesday’ பட பாணியில் இத்திரைப்படம் இருக்கும்.  படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம். படத்தைக் கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.