மறைந்தாலும் மறக்க இயலாதப் படைப்பாளி மணிவண்ணன்!

ந்த கோலிவுட் சினிமா எத்துணையோ படைப்பாளிகளைக் கண்டிருக்கிறது.. கண்டு கொண்டுமிருக்கிறது.. அப்படியான படைப்பாளிகளில் சிலரே மறைந்த பின்னரும் நினைவில் கொள்ளத் தக்க சாதனையோ, செயலோ செய்து மனதில் வாழ்கிறார்கள். அப்படியான லிஸ்டில் ஒருவரான மணிவண்ணன் காலமான தினமின்று. அதையொட்டி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் நினைவஞ்சலி

எல்லோருக்கும் ஒரு அரசியல் புரிதல் இருக்கும் என்றபோதும் சிலர் அதைத் தமது தொழில் தொடர்பான விஷயங்களில் வெளிப்படுத்துவதில்லை. ஆனால், வேறு சிலரோ தமது தொழிலும் தமது அரசியல் வெளிப்படும்படி நடந்துகொள்வர். மணிவண்ணன் இரண்டாம் ரகம். அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல், ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல். அவை தொடர்பான படங்களை உருவாக்குவதில் மட்டுமே மணிவண்ணனுக்கு நம்பிக்கை இருந்தது. மார்க்சிய சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தமிழீழ அரசியல் போன்றவற்றில் பிடிப்பு கொண்டிருந்த மணிவண்ணன் 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணனின் படங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை வசூலைக் குவித்தவை.

என்றபோதும், வெற்றியின்போது தலையில் கொம்பு முளைத்ததும் இல்லை, தோல்வியின் போதும் தான் தலைகுனிந்ததுமில்லை என்றுதான் அவர் கூறியிருக்கிறார். அவர் இயக்கிய ஐம்பது படங்களில் 25-ல் நாயகனாக சத்யராஜ் நடித்திருக்கிறார்; அதில் ’ஜல்லிக்கட்டு’ முதல் ’அமைதிப்படை வரை’ 12 படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளன., 90களில் அவர் நிறைய நடித்துக்கொண்டிருந்ததால் அவரை நடிகராக அறிந்துள்ள இன்றைய இளைஞர்கள் பலர் இயக்குநராகவும் கதை-வசனகர்த்தாவாகவும் அவருடைய சாதனைகளை 2 கே இளைஞர்கள் அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள்.

தன் சொந்த வாழ்க்கையிலும் கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு உள்ளிட்ட பகுத்தறிவு, முற்போக்குக் கருத்துகளைப் பின்பற்றிவந்த மணிவண்ணன் அவற்றைத் தன் படங்கள் வாயிலாக வலியுறுத்தினார். பிரச்சாரமாக அல்லாமல் ஜனரஞ்சகக் கலை அம்சத்துடன் முற்போக்குக் கருத்துகளைக் கதைகளுக்குள்ளும் காட்சிகளுக்குள்ளும் பொருத்தினார். தான் எழுதிய, இயக்கிய படங்களில் மட்டுமல்லாமல் நடிகராக நடித்த படங்களிலும் சமூக அவலங்களைப் பகடி செய்யும் வசனங்களை முற்போக்குக் கருத்துகளையும் நகைச்சுவை வழியாக நுழைக்கும் திறமையும் சாதுரியமும் வாய்க்கப் பெற்றிருந்தார். மொத்தத்தில் இயக்குனர், நடிகர், தமிழ் ஆர்வலர், அரசியல்வாதி என பன்முகங்களோடு வலம் வந்த இந்த திரையுலக காதலர் இன்று நம்மோடு இல்லை என்றாலும் அவர் நினைவுகள் ஒரு போதும் மறையாது.