0
295
ஹரிஷ் கல்யாண் இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ஒரு புதிய அலையை உருவாக்கி இருக்கிறார். இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையான படங்களுக்கு ஒரு பெஞ்ச்மார்க்கை வைத்த “பியார் பிரேமா காதல்” படத்தினை தொடர்ந்து, அடுத்து ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ என்ற காதலை மையப்படுத்திய படமும், இளம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அவரது அடுத்த படத்தை மூத்த இயக்குனர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். சஞ்சய் இயக்குனர் விஜயிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரொமாண்டி காமெடி படம் ஒரு இளைஞனின் “ஜோதிட நம்பிக்கைகள்” பற்றி பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் அந்த இளைஞன் மீது இந்த நம்பிக்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பேசுகிறது. சமீபத்தில் “காயம்குளம் கொச்சூன்னி” போன்ற பல பெரிய பட்ஜெட் மலையாள படங்களை தயாரித்த ஸ்ரீ கோகுலம் மூவீஸ், கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த கோகுலம் கோபாலன் சகல வசதிகளையும் கொண்ட ஜி.ஸ்டூடியோவை சொந்தமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“என்னுடைய நாயகன் விருப்பம் மிகவும் குறுகியதாக இருந்தது. இன்றைய இளைஞர்கள் தங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ள கூடிய ஒரு நாயகனை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. மிக முக்கியமாக திருமணம் ஆகாத ஒரு இளம் நாயகன் நடிக்க வேண்டியிருந்தது. ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் நடிக்க மிகவும் பொருத்தமாக இருந்தார். கதையை கேட்டவுடன் அவரின் உற்சாகமும், ஈடுபாடும் எனக்கு பெரிய உந்துதலை கொடுத்தது. என் முதல் படத்திலேயே எனக்கு இப்படி ஒரு பெரிய தயாரிப்பாளர் கிடைத்தது என் பாக்கியம். சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுக்க எனக்கு ஊக்கமளித்தனர். நாயகி மற்றும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வு நடந்து வருகிறது. தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடக்கிறது. மார்ச் மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பை தொடங்க உழைத்து வருகிறோம். தலைப்பை இன்னும் இறுதி செய்யவில்லை, தலைப்பை அறிவித்த பிறகு ரசிகர்களின் ஆர்வம் இன்னும் அதிகமாகும்” என்றார் இயக்குனர் சஞ்சய் பாரதி.