கரகர கானக் குரலோன் கண்டசாலா!

மிகவும் வித்தியாசமான ஒரு குரலுக்கு சொந்தக்காரர் கண்டசாலா…ஆம்.. கேட்டவுடனே அவரது தனித்தன்மை விளங்கும் அளவிற்கு வித்தியாசமான குரல் …..அதிலும் தன் பாடலில் காதல், கருணை, இரக்கம், மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட மென்மையான உணர்வுகளையும் அநாயசமாக வெளிப்படுத்தக் கூடியவர்.

தெலுங்கர்கள் தமிழில் பாடுவது அதிசயமில்லை என்றாலும் கூட அவருடைய தமிழ் உச்சரிப்புகள் எடுபடவில்லை… அதையும் மீறி, தமிழர்கள் அதனை ஏற்றுக்கொண்டு ரசித்தார்கள். காரணம் அவரது கரகரத்த, வித்தியாசமான குரல்.

மேலும், இவர்கள் புகழ்பெற்றிருந்த 50 -60 களில், தமிழ் தெலுங்கு என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பவர்கள் மிகக்குறைவு.

இவரின் முழுப் பெயர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ்.

அப்பா ஹரிகதை கூறுவதில் வல்லவர். சிறு வயதிலேயே அவருடன் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் கண்டசாலா.

அப்பா இறந்த பிறகு, தாய் மாமனிடம் வளர்ந்தார். ஒரு இசைக் கலைஞனாக வரவேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்டிருந்தார். பத்ரயானி சீதாராம சாஸ்திரியிடம் இசை கற்றார். உறவினர்களின் எதிர்ப்பை மீறி, விஜயநகரத்தில் உள்ள இசைப் பள்ளியில் சேர்ந்து ‘சங்கீத வித்வான்’ பட்டம் பெற்றார்.

அதே சமயம் 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். விடுதலையான பிறகு, திரைப்படங்களில் பின்னணி பாட முயற்சித்தார்.

அகில இந்திய வானொலி, ஹெச்எம்வி இசைத்தட்டு நிறுவனத்தில் பாடினார். 1944-ல் ‘சீதா ராம ஜனனம்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்ததோடு, கோரஸ் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.

இசையில் வல்லவரான இவர் பாடுவதோடு, முதன்முதலாக ‘லக்ஸ்மம்மா’ என்ற படத்துக்கு இசையமைத்தார்.

இசையமைப்பாளர் எம்.பி.நிவாசனுடன் சேர்ந்து திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் தொடங்கப்படக் காரணமாக இருந்தார். அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்தார்.

தெலுங்கு திரையுலகில் உச்சத்தில் இருந்த அவர் தெலுங்கோடு நின்று விடாமல், 1950-60 -களில் தமிழ் திரையுலகிலும் பல வித்தியாசமான பாடல்களை தந்தார்.

குறிப்பாக ‘அமைதியில்லாதென் மனமே’, ‘துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே’, ‘கனவிதுதான்’, ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’, ‘ஆஹா இன்ப நிலாவினிலே’, ‘நீதானா என்னை அழைத்தது’ ஆகிய இவரது பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்தவை.

பத்ம விருது பெற்றவர்.

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்டார்.

கண்டசாலா மறைவு  நாளையொட்டிய அஞ்சலி