ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ் கே செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், படத்தின் நாயகன் நடிகர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார் கள்.இந்த படத்தில் ‘சே ’என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது.
பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில்,“இயக்குநர் ராஜு முருகனை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆனால் அவரோ என்னை ‘உள்ளே’வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அது இந்த படத்தில் நடைபெறுகிறதா? அல்லது அடுத்து வரும்படங்களில் நடைபெறவிருக்கிறதா?என்று தெரியவில்லை. இந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும் விசயம் தான் படம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கும். அதையும் கடந்து இயக்குநர் ராஜு முருகனின் முந்தைய இரண்டு படங்களில்லாத காட்சிபடிமத்தை இந்த படத்தில் பார்க்கமுடியும்.
இந்த படத்தின் கதை, ஏறக்குறைய தமிழ் திரையுலகில் அனைத்து தயாரிப்பாளர்களாலும் கேட்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட கதை. அதனை பல தடைகளையும் கடந்து தயாரித்ததற்காகவும், இந்த படம் இனிமேல் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கலுக்காகவும், அதனை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதற்காகவும் தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்களுக்கு படக் குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். திட்டமிட்டதை விட கூடுதலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. அத்துடன் எங்களையெல்லாம் ஜாமீனில் எடுக்கவேண்டிய செலவும் இருக்கிறது.
இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காகநடிகர் ஜீவாவை பாராட்டுகிறேன். அவர் ஏற்கனவே ஈ, கற்றது தமிழ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் இந்த ஜிப்ஸி படமும் அமையும். அவருடையதிரையுலக பயணத்தில் இந்த படம் முக்கியமான படமாக அமையும். அந்த படத்தில் அவர் கதைக்குள் பயணித்திருக்கிறார். அதற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டவிதம் ஆச்சரியத்தை அளித்தது. அவரை ஆறு மாதம் தலைமுடி, தாடியை வளர்க்க வைத்து, முக பாவனையை மாற்றியமைத்து, இந்தியா முழுவதும் நடக்க வைத்து, குதிரையிடம் உதை வாங்க வைத்து.. இப்படி பல விசயங்களை அவர் எதிர்கொண்டு, அற்புதமாக நடித்திருக்கிறார்.
‘ஜிப்ஸி’ யில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நீள் இந்தியாவின் குறுக்கு வெட்டு தோற்றத்தைப் பார்க்கலாம். இதன் பின்னணியில் உள்ள அரசியல், அதிகாரம் எளிய மக்களை எப்படி வதைக்கிறது? என்பதையும் பார்க்க முடியும். அத்துடன் நாம் மனிதநேயத்தை நோக்கி நகர வேண்டியதன் கட்டாயச் சூழலையும் இந்த படம் உணர்த்தும். தேர்தலுக்கு முன் இந்த படம் வெளியாக வேண்டும் நான் விரும்புகிறேன். வந்தால் ஆரோக்கியமான முறையில் மாற்றம் ஏற்படலாம் என்று நம்புகிறேன்.
இயக்குநர் ராஜுமுருகன் இந்த சமூகத்தில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் எழுத்து போராளி. உண்மையான கலைஞனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற் காக போராடிக் கொண்டிருப்பவர். இந்த திரைத்துறையில் சமூக அரசியலையும், மக்கள் விடுதலையையும் பேசும் அவரை வாழ்த்துகிறேன்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவருடைய இசையமைப்பில் வெளியான பாடல்களில் ஒரு நாடோடி மனப்பான்மை பரவியிருக்கும். இந்த படமும் ஒரு நாடோடியின் கதை என்பதால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரை இசையமைக்க கேட்டுக்கொண்டோம்.இந்த படத்தில் இடம் பெறும் பாடல்களின் சந்தத்திற்காக இசையமைக்காமல், இசையாலும், காதலாலும் நிரம்பி வழியக் கூடிய ஒரு நாடோடியின் வாழ்க்கைக்கு பொருத்தமான இசையை அவர் கொடுத்திருக்கிறார்.” என்றார்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசுகையில்,“நான் வந்தவாசி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், இயக்குநர் ராஜு முருகனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். ஒரு முறை சென்னையின் முன்னாள் மேயரும், சைதைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்ரமணியம் அவர்கள் ஒரு விழாவிற்காக ராஜுமுருகனை சிறப்பு விருந்தினராக அழைக்க பணித்த போது, அவருடன் பயணித்தேன். அப்போது ஜிப்ஸி படத்தின் கதையைச் சொன்னார். பட்ஜெட்டையும் சொன்னார். ஆனால் சொன்ன பட்ஜெட்டை விட அதிகம் செலவாகியிருந்தாலும், ஜோக்கர் போன்ற படத்தை இயக்கிய இயக்குநர் படம் என்பதால்அதன் தரத்திற்காக முழு ஒத்துழைப்பு அளித்தேன். இந்த படம் ஒலிம்பியா மூவிசுக்கு சிறந்த படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.
இயக்குநர் ராஜுமுருகன் பேசுகையில்,“ இந்த படத்திற்கு அடையாளமாக இருக்கும் இந்த பாடலை முதன் முதலாக ஊடகவியலாளர்கள் முன் திரையிடவேண்டும் என்று விரும்பினேன். தயாரிப் பாளர் அம்பேத்குமார் அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் இந்த படத்தை இந்த தரத்தில் தற் போது எடுத்திருக்க இயலாது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் அரசியல் படமல்ல. ஒரு அமைப்பு சார்ந்து எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு நியாயமான படம்.என்னைப் பொருத்தவரை வாழ்க்கையும் அரசியலும் வேறு வேறு அல்ல.
இந்த படத்திற்கு ‘தோழர் சந்தோஷ் நாராயணன் இசையில்’ என்று விளம்பரப்படுத்தினேன். உடனே சிலர் என்னைத் தொடர்பு கொண்டு ஏன் சந்தோஷ் நாராயணனை தோழர் ஆக்கிவிட்டீர்கள்? என கேட்டார்கள். தோழர் என்பது உலகின் உன்னதமான வார்த்தை. தோழர் என்பது ஒரு கட்சி சார்ந்த வார்த்தையல்ல. தோழர் என்பது அன்பின் வார்த்தை. அதன் பொருளை தற்போது மாற்றி விட்டார்கள். யாரெல்லாம் நீதிக்காக போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம். அநீதிக்கு எதிராக தன்னை ஏதேனும் ஒரு தளத்தில் நிறுத்தி போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம்.அந்த வகையில் இந்த படத்தில் ஜிப்ஸியும் ஒரு தோழன் தான். ஒரு தோழனின் குரலாகத் தான் ஜிப்ஸி இருக்கிறது.
இந்த படம் லவ் வித் மியூசிக்கலி படம்.இந்த படத்தில் ஒன்பது பாடல்கள் இருக்கிறது. அதில் சிறிது அரசியல் கலந்திருக்கிறது. அதிலும் எளிய மக்களின் நியாயமான அரசியல் பேசப்பட்டிருக்கிறது. இந்த படம் வெளியாகி தயாரிப்பாளர் செய்த முதலீடு அவருக்கு திரும்ப கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான அனைத்து கமர்சியல் அம்சங்களும் இதில் இருக்கிறது. இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்த பாடலில் தோன்றிய தோழர் நல்லக்கண்ணு ஐயா உள்ளிட்ட உண்மையான கள போராளிகளுக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் ஜீவா பேசுகையில்.“ ஒரு நாட்டுப்புற பாடகர், இந்தியா முழுவதும் சுற்றித்திரிகிறார். அவருக்கு கிடைத்த அனுபவங்களுக்கு பிறகு அவர் புரட்சிகரமான பாடகராக மாறுகிறார். அவர் ஏன் அப்படி மாறுகிறார் என்றால் அதன் பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது.” என்று இந்த படத்தின் கதையை ஒன்லைனாக இயக்குநர் ராஜு முருகன் என்னிடம் சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கேரக்டரைசேஷன் ஆச்சரியப்படுத்தியது.கதையில் ஒரு உண்மை இருந்தது.
மனிதநேயத்தை மதிக்கவேண்டும், இயற்கையும் கொண்டாட வேண்டும் என்பதை உரக்கச் சொல்லும் கதை. இந்தியா முழுவதும் பயணிக்கும் போது தான் இந்தியா எவ்வளவு அழகானது என்பதையும் இந்த படம் உணர்த்தும். எல்லா மனிதர்களின் உணர்வுகளும்ஒன்று தான் என்பதை அற்புதமாக சொல்லியிருக்கிறார்.
படம் முழுவதும் என்னுடன் ஒரு குதிரை நடித்திருக்கிறது. இந்த படத்திற்காக வித்தியாசமான தோற்றம் ஒன்றையும் இயக்குநர் உருவாக்கியிருந்தார். இது போன்ற ஒரு கதையை சூப்பர் குட் பிலிம்ஸில் நிச்சயமாக எடுத்திருக்க மாட்டோம். இதனை துணிந்து எடுத்த தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு நன்றி
கற்றது தமிழ்,ஈ போன்ற படங்களில் ஏன் நடிப்பதில்லை? என்று என்னை கேட்ட போது, இந்த கதையை கேட்டதால் இந்த கதையின் மீது நம்பிக்கை வந்தது. நாகூர்,வாரணாசி, ஜோத்பூர், காஷ்மீர் என இந்திய முழுவதிற்கும் பயணித்து படமாக்கினோம்.
இந்த படம் வெளியான பிறகு ஜீவா ஒரு லக்கியான நடிகர் என்று அனைவரும் பாராட்டுவார்கள். இதற்காக இயக்குநருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த படம் வெற்றிப்படமாக மட்டும் இல்லாமல் என்னுடைய கலையுலக பயணத்தில் முக்கியமான படமாகவும் இருக்கும்.”என்றார்.
இந்நிகழ்ச்சியில்‘வெரி வெரி பேட்…’ எனத் தொடங்கும் அந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த சிங்கிள் ட்ராக்கை படக்குழுவினர் வெளியிட்டனர்.