பாரதிராஜாவின் நடிப்பு & இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீண்டும் ஒரு மரியாதை’- பிப்ரவரி 21 ரிலீஸ்!

43 வருடங்களாகத் தமிழ் சினிமாவில் பயணித்துக் கொண்டே இருப்பவர் பாரதிராஜா,

1977-ம் வருசம் வெளியான பதினாறு வயதினிலே திரைப்படம் மூலமாகத் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

அடுத்தடுத்து அவர் கதை, திரைக்கதை, இயக்கம் மட்டுமின்றி திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார்.

அந்த வகையில் பாரதிராஜாவின் இயக்கத்தில் சிவாஜி கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘முதல் மரியாதை’ திரைப்படம், தமிழ் சினிமாவின் வெற்றிப்படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.இந்த நிலையில், ‘பாரதிராஜாவின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது

இந்த படம் குறித்து “”50, 60 வயதுகளில் நாம் புதிய விஷயங்களை உணர ஆரம்பிப்போம். ‘மீண்டும் ஒரு மரியாதை’ அப்படியான ஒரு படம். ஒரு வயதானவருக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே இருக்கும் உணர்வைப் பற்றியது. ஆனால், இது காதல் கதையா என்றால் அது நீங்கள் காதல் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

அன்புக்காக ஏங்கும் இரண்டு கதாபாத்திரங்களின் கதை இது. எனது கதாபாத்திரம் வெண்பா என்ற பெண்ணை அயல்நாட்டில் சந்திக்கிறது. அவள் இந்த வயதான நபர் மீது ஈர்க்கப்படுகிறாள். அந்த வயதானவரோ, ‘நான் சூரிய அஸ்தமனத்தின் அருகில் இருக்கிறேன், நீ சூரிய உதயத்துக்குப் பக்கத்தில் இருக்கிறாய். ஏன் இங்கு வர விரும்புகிறாய்’ என்று கேட்கிறார். இதுதான் கதை. இவர்கள் இருவரும் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் அது காதலா, காமமா அல்லது அன்பா என்பது தெரியாது.

மதன் கார்க்கிதான் நாயகிக்கு வெண்பா என்று பெயர் வைக்க யோசனை கொடுத்தார். ஏனென்றால் அந்தக் கதாபாத்திரம் ஒரு கவிதை போல. நான் முதலில் இந்தக் கதைக்கு வேறொரு முடிவை எழுதியிருந்தேன். ஆனால் அதை மாற்ற வேண்டியிருந்தது. மக்கள் முற்போக்காக மாறிவிட்டதாகச் சொல்லிக்கொண்டாலும் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று வழக்கம் போல் ட்விட்ஸ் வைத்து சொன்னார்

வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு, பயணம் சார்ந்த கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் நட்சத்திரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ரொமான்டிக் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி முன்னதாக வரும் பிப் 12ல் ட்ரெய்லர் – 2 வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது.