ஜீவா ஜோடியானார் ரியா சுமன்!

றெக்க புகழ் ரத்தினா சிவா இயக்கத்தில்  ஜீவா நடிக்கும் பெயரிடப்படாத ஆக்‌ஷன்  திரில்லர் திரைப் படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கதாநாயகி தேர்வு நடைபெறு கிறது, விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் உறுதி செய்திருந்தனர். தற்போது நாயகியாக தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான மற்றும் அழகான ரியா சுமன் ஜீவாவுக்கு நாயகியாக நடிக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தெலுங்கில் மஜ்னு மற்றும் பேப்பர் பாய் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்த நாயகி ரியா சுமன் பேசும்போது, “தமிழில் என் முதல் படம் என்பதையும் தாண்டி, எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நினைத்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். தெலுங்கு திரைப் படங்களில் நான் இதுவரை செய்த கதாபாத்திரங்கள் சற்றே தீவிரமான கதாபாத்திரங்கள். ஆனால் இந்த படத்தில் எனக்கு மிகவும் துடிப்பான கதாபாத்திரம்” என்றார்.
தமிழ் வசனங்களை எளிதாக பேசிவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கை தனக்கு இருந்ததாகவும், ஆனால் படப்பிடிப்பில் நடந்ததே வேறு என்றும் அவரே ஒப்புக் கொள்கிறார். “ஆம், 100% உண்மை. இது போன்ற தவறான முன் முடிவுடன் இருந்தது பெரிய தவறு. இந்த அழகிய மொழியில் சரளமாக பேச நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். நான் ஆரம்பத்திலேயே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் தமிழ் மொழியை கற்றுக் கொள்வதற்கு போதுமான நேரம் இல்லை. தமிழ் வசனங்களை எனக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி பெயர்த்து தந்து எனக்கு உறு துணையாக இருக்கும் என் உதவியாளர்களுக்கு நன்றி. ஜீவாவும் அவ்வப்போது வசன உச்சரிப்பில் எனக்கு உதவியாக இருந்தார். என்னை பொறுத்துக் கொண்ட ஜீவா மற்றும் ரத்தின சிவா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.
மேலும், தனது கதாபாத்திரம் பற்றி அவர் கூறும்போது, “என்னுடைய கதாபாத்திரம் வெறுமனே நகைச்சுவையாக மட்டும் இருக்காது. படம் முழுக்க வரும் கதாபாத்திரம், நாயகன் நிறைய விஷயங்களை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் கதாபாத்திரம்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரை பற்றி கூறும்போது, “தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு திருப்புமுனையை வழங்குவதற்காக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. அவரை போன்ற திறமையான தயாரிப்பாளரின் படத்தில் பணி புரிவது எனக்கு பெருமை அளிக்கிறது” என்றார்.