‘சென்னை டூ சேலம் 8 வழிச் சாலை’ திட்டத்தை மையமாகக் கொண்ட ‘பசுமை வழிச் சாலை’

தமிழகத்தில் நடைபெற்று சர்ச்சையாகி போன ‘சென்னை டூ சேலம் 8 வழிச் சாலை’ திட்டத்தை மையமாக வைத்து சத்வா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நிருபமா தயாரித்து வரும் திரைப்படம் ‘பசுமை வழிச் சாலை’. இந்தப் படத்தில் கிஷோர், பூஜாகுமார், சமுத்திரக்கனி, பசுபதி உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகையர் நடித்துள்ளனர்.

வளர்ச்சி என்ற போர்வையில் மக்களின் இயல்பு வாழ்க்கையை கெடுப்பதும், அவர்கள் சில நூற்றாண்டுகளாக வாழ்ந்த பகுதியில் இருந்து எங்கு செல்கிறோம் என்பதே தெரியாமல் துரத்தப்படுவதும், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதும், உண்மையான வளர்ச்சிக்கான வழிகளா இவை என்று எண்ணத் தோன்றும் வகையில் நடைபெற்ற நிகழ்வுகளை ஒரு பருந்து பார்வையில் இந்த ‘பசுமை வழிச் சாலை’ திரைப்படம் மூலம் பதிவு செய்கிறார் இயக்குநர் சந்தோஷ் கோபால்.

“இந்த ‘பசுமை வழிச் சாலை’ திரைப்படம் பல உண்மைச் சம்பவங்களையும், உண்மையான அந்தப் பகுதி மக்களின் பதிவுகளையும், அந்தப் பகுதிகளின் பதிவுகளோடு, ‘பதேர் பாஞ்சாலி’ போன்ற வெளிப்பாடாக அமையும். மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக இத்திரைப்படம் இருக்கும். வளர்ச்சி என்கிற பெயரில் உருவாகிய மாற்றங்களினால் ஏற்பட்ட மக்களின் பயத்தையும், மக்களின் உணர்வுப் பதிவுகளையும் இத்திரைப்படம் பதிவு செய்கிறது…” என்கிறார் இயக்குநர் சந்தோஷ் கோபால்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்திற்கான இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர், ஜெய்சல்மார், உதய்ப்பூர், மற்றும் டெல்லி, ஆக்ரா ஆகிய இடங்களில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற தொன்மையான ‘சந்த் பவுரி’ கிணற்றிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தான் இயக்கிய ‘DARK NIGHT RISES’ என்ற படத்திற்காக இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற தர்காவிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு நேபாளம், லடாக், திபெத், பூடான் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்டுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழா விரைவில் நடைபெறவுள்ளது.