‘அய்யா’வை படம் முழுக்க பயணம் செய்ய வைச்சுட்டோமில்லே!- சீதக்காதி எடிட்டர் பெருமிதம்!

பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம் மற்றும் அருண் வைத்தியநாதன் இணைந்து தயாரித்துள்ள படம் `சீதக்காதி’. கலைக்கு குறிப்பாக நடிப்புக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர், மவுலி, ராஜ்குமார், பகவதி வெருமாள், கருணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு – சரஸ்காந்த்.டி.கே, இசை – கோவிந்த் மேனன், படத்தொகுப்பு – ஆர்.கோவிந்தராஜ், கலை – வினோத் ராஜ்குமார், பாடல்கள் – கார்த்திக் நேத்தா, மதன் கார்க்கி, தியாகராஜன் குமாரராஜா, யுகபாரதி, தயாரிப்பு நிறுவனம் – பேஷன் ஸ்டூடியோஸ், தயாரிப்பு – சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்தியநாதன், இயக்கம் – பாலாஜி தரணிதரண்.

விஜய் சேதுபதியின் 25வது படமான ‘சீதக்காதி’ படத்தின் ஒவ்வொரு நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் சொந்த உணர்ச்சிகளில் மூழ்கி இருக்கின்றன. அந்த வகையில் எடிட்டர் ஆர் கோவிந்தராஜ் இந்த சீதக்காதி குறித்து தனது பங்கிற்கு சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.

“சீதக்காதியின் கதையை இயக்குனர் என்னிடம் கூறியபோது ஒரு ‘உணர்ச்சி மிகுந்த நகைச்சுவை நாடகத்தை’ அனுபவிக்கும் அனுபவத்தை நான் உணர முடிந்தது. இத்தகைய வகை திரைப்படத்தை எடிட்டிங் செய்வது எளிதான விஷயம், அதிகம் கட் மற்றும் ட்ரான்சிஸன்ஸ் இருக்காது என்ற அனுமானங்களை கொண்டிருந்தேன். ஆனால், நான் எடிட்டிங் செய்ய ஆரம்பித்தவுடன் நான் நினைத்தது தவறு என்பதை படம் நிரூபித்தது. ஒரு சில காட்சிகள் முற்றிலும் ‘எடிட்டிங்’கை சார்ந்து இருந்தன. எமோஷனை வெளிப்படுத்தும் ஸ்லோ மோஷன் காட்சிகள் மற்றும் நகைச்சுவையை வெளிப்படுத்தும் வேகமான கட்ஸ் செய்ய நிறைய சிரமம் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தில் ‘அய்யா’வை படம் முழுக்க பயணம் செய்ய வைப்பது எனக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த குழுவுக்கும் மிகுந்த சவாலாக இருந்தது” என்கிறார் எடிட்டர் ஆர்.கோவிந்தராஜ்.

படத்தின் நீளத்தை பற்றி பேசுகையில், “ஒவ்வொரு படத்திற்கும் ஒரு வேகம் உண்டு, சீதக்காதி படத்தில் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்த நிறைய தருணங்கள் உண்டு. அதை இப்போதே என்னால் சொல்ல முடியாது, உணர்ச்சிகள் மற்றும் நகைச்சுவை கலந்த சில விஷயங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். பார்வையாளர்கள் ‘அய்யா’வின் உலகத்துக்குள் சென்ற உடன் அவருடன் பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள்” என்றார்.