சீயான் விக்ரம் நடிக்கும் ‘மகாவீர் கர்ணா’ படத்துக்கு பூஜை போட்டாச்சு!

இந்தாண்டு வெளியான ‘சாமி 2’ படத்துக்குப் பிறகு விக்ரம் நடித்துவரும் படம் ‘கடாரம் கொண்டான்’. ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இந்தப் படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தில், அக்‌ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘மகாவீர் கர்ணா’ என்ற படத்தில் நடிக்கிறார் விக்ரம். தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பட்ஜெட், 300 கோடி ரூபாய். மிகப் பிரமாண்டமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. இத் திரைப்படத்தின் பூஜை கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடந்தேறியது.

நியூயார்க்கை சேர்ந்த யுனிடெட் பிலிம் கிங்டம் என்ற தயாரிப்பு நிறுவனம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த ‘மகாவீர் கர்ணன்’ திரைப்படத்தைத் தயாரிக்கிறது. மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து கர்ணனின் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி இத்திரைப்படம் தயாராகிறது. இந்தப் படத்தில் கர்ணனாக தமிழ் நடிகர் விக்ரம் நடிக்கிறார். துரியோதனனாக சுரேஷ் கோபி நடிக்கவுள்ளார். என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இந்தப் படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார். படத்தின் வசனத்தை பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார்.

இந்த ‘மகாவீர் கர்ணா’ திரைப்படம் ‘பாகுபலி’ படம் போல் 300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகிறது. படத்தில் தொழில் நுட்பக் கலைஞர்களாக ஹாலிவுட்டின் மிகப் பெரிய கலைஞர்கள் பங்கு பெறவுள்ளனர். ‘Game of Thrones’ படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் இந்தப் படத்தில் பங்கு பெறவுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முழுமையடைந்த நிலையில் சபரிமலை ஐயப்பனுக்கு விரதமிருந்த இயக்குநர் ஆர்.எஸ்.விமல், படத்தின் ஸ்கிரிப்ட் புத்தகத்துடன் சபரிமலைக்கு வந்து ஐயப்பனிடம் ஸ்கிரிப்ட் புத்தகத்தை சமர்ப்பித்து ஆசிகளைப் பெற்றார்.

மேலும் படத்தின் பூஜை கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் படத்தில் துரியோதனனாக நடிக்கவுள்ள நடிகர் சுரேஷ் கோபி, மலையாள இயக்குநர் பி.உன்னிகிருஷ்ணன், மலையாள நடிகர் இந்திரன்ஸ், கதாசிரியர் ஜெயமோகன், இயக்குநர் ஆர்.எஸ்.விமல் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின்போது கர்ணனின் அரண்மனை முகப்பில் வைக்கப்பட வேண்டிய ஆலய மணி பிரதிஷ்டை செய்யப்பட்டு பத்மநாப சுவாமி முன்னிலையில் படக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த ஆலய மணி ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் போடப்படவுள்ள கர்ணனின் அரண்மனை வாசலில் அமைக்கப்படவிருக்கும் 30 அடி உயர பீடத்தில் வைக்கப்படவுள்ளது.

சிறப்பம்சமாக 32 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இந்த மகாவீர் கர்ணா வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் இந்தப் படம் நிச்சயமாக உலக அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் துவங்கும் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவிருக்கிறார். வரும் 2020-ம் ஆண்டில் படம் திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.