காப்பி ரைட் விவகாரம் :இளையராஜா மீது ஐகோர்ட்டில் வழக்கு!

பாடல்களுக்கான ராயல்டி தொகை தங்களுக்கு முறையாக வரவேண்டும் என இளையராஜா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட 6 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு இளையராஜா மீது சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

அதில்,ஐநூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா இசையில் சுமார் 5 ஆயிரம் பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த பாடல்களின் பாடல் உரிமையும் அந்த பாடல்கள் மூலம் வரும் ராயல்டி தொகை அனைத்து வழிகளும் தனக்கே வரவேண்டும் என்று உரிமை கொண்டாடி வருகிறார்.

இளையராஜாவை வைத்து ஆரம்ப காலங்களில் பஞ்சு அருணாச்சலம், கேஆர்ஜி, பாலச்சந்தர், பாரதிராஜா இப்படி பல தயாரிப்பாளர்கள் படம் எடுத்துள்ளனர். அவரை வைத்து படம் எடுத்து பாடல்கள் வெற்றிபெற்ற போதிலும் அந்த வருவாய் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்காமலே மாற்றப்பட்டுவருகிறது.

இளையராஜாவின் இசைக்கு முதலீடு செய்த பல தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டமான சூழலில் தற்போது வாழ்ந்து வருகிறார்கள்.

இளையராஜாவின் பரிந்துரையின்படி பல தயாரிப்பாளர்கள் தங்களது ஆடியோ உரிமையை எக்கோ கம்பெனிக்கு வழங்கியுள்ளனர்.

அதில் வரும் ராயல்டி 50% பங்கு இதுவரை எந்த தயாரிப்பாளர்களுக்கு முறையாக வந்ததில்லை. இனி வரும் காலங்களில் இந்த படங்களின் மீது ராயல்டி 25 லட்சம் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த வருமானம் படமெடுத்த தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுவரை சுமார் 200 கோடிக்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய பணம் ஏமாற்றப் பட்டுள்ளது. இவ்வாறு அந்த வழக்கு தொடர்பான மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையொட்டி மீடியாக்களைச் சந்தித்த பி.டி. செல்வகுமார் & கோ, “500 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா இசையில் சுமார் 5000 பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படங்களின் பாடல்கள் உரிமையும், அந்த பாடல்கள் மூலம் வரும் அனைத்து வருவாயும் தனக்கே வர வேண்டும் என்று இளையராஜா உரிமை கோரி வருகிறார். இளையராஜா வை வைத்து ஆரம்பகாலங்களில் பஞ்சுஅருணாச்சலம், கே.ஆர்.ஜி, பாலச்சந்தர், எஸ்.ஏ.சந்திர சேகரன், பாரதிராஜா, ஆனந்தி பிலிம்ஸ், தேவர் பிலிம்ஸ் இப்படி பல தயாரிப்பாளர்கள் படமெடுத்துள்ளனர். அவரை வைத்து படமெடுத்து பாடல்கள் வெற்றிபெற்ற போதிலும், அந்த வருவாய் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்காமல் ஏமாற்றப்பட்டு வருவது துரதிஷ்டம். இளையராஜாவின் இசைக்கு முதலீடு செய்த பல தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள்.

இளையராஜாவின் பரிந்துரையின்படி பல தயாரிப்பாளர்கள் தங்களது ஆடியோ உரிமையை எக்கோ கம்பெனிக்கு வழங்கியுள்ளனர். அதில் வரும் ராயல்டி 50% பங்கு இதுவரை எந்த தயாரிப்பாளர் களுக்கும் முறையாக வந்ததில்லை. இனி வரும் காலங்களில், பாடல்களின் மூலம் வரும் வருவாய் 25 லட்சம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருமானம் படமெடுத்த தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களை சாருமே தவிர சம்பளம் வாங்கி இசையமைத்த இளையராஜாவுக்கு எக்காரணத்தை கொண்டும் சாராது என்று தயாரிப்பாளர்கள் கேட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 200 கோடிக்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய பங்கு பணம் ஏமாற்றப்பட்டிருக்கிறது .

படங்களின் பாடல்களின் மூலம் வரும் ராயல்டி தொகையை மீட்டெடுக்க தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் தலைமையில் அன்புச்செல்வன், ஜெபஜோன்ஸ், மீராகதிரவன், மணிகண்டன், சந்திரசேகர் ஆகியோர் கொண்ட குழு இளையராஜா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளனர். கச்சேரி, காலர் டியூன், பாடல் ஒலிபரப்புகள் மூலம் வரும் வருவாயில் தங்களுக்கு உரிய பங்கு வரவேண்டும் என்று அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர்” என்றனர்.

இதுபற்றி மீரா கதிரவன் கருத்து கூறிய போது ..”சாகப்தம் படைத்த தயாரிப்பாளர்களின் குடும்பங்கள் இன்று ஏழ்மையிலும், வறுமையிலும் மோசமான நிலையில் உள்ளனர். எந்த தொழிலிலும் முதலீடு செய்ப்பவர்களுக்கே அதன் உரிமை. எனவே நமக்கு வரவேண்டிய உரிமையை மீட்டெடுக்க ஒன்றிணையும் தருணம் இது” என்றார்.

இதுபற்றி பி.டி.செல்வகுமார், “தயாரிப்பாளர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை இது. வீடு, நிலம், அனைத்தும் துறந்து நிர்கதியாக நிற்கிறார்கள்.பல குடும்பங்களில் சென்று பார்த்துள்ளேன். அவர்களின் வாரிசுகள் கல்விகற்க கூட முடியாத நிலையில் உள்ளனர். எனவே நமது தயாரிப்பாளர்களுக்கு குரல் கொடுத்து நமது உரிமையை மீட்டெடுக்க ஒன்றிணைவோம்.. அனைவருக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது. ஆதங்கத்தை வெளிப்படையாக தெரிவிக்கும் தருணம் இது” என பி.டி.செல்வகுமார் கூறினார். ஐந்து வழக்கறிஞர்கள் பணி புரியும் இந்த குழுவில் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்கள் உரிமையை நிலைநாட்ட பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.