‘மேகி என்கிற மரகதவள்ளி ’திரைப்பட டிரைலர் & இசை வெளியீட்டுவிழா

சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர் கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் ‘மேகி என்கிற மரகதவள்ளி ’ என்ற திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, தயாரிப்பாளர் கதிரேசன், முன்னாள் பெஃப்சி தலைவர் வி சி குகநாதன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் விஜயமுரளி, இயக்குநர் ராஜேஷ் , பின்னணி பாடகர் வேல்முருகன், படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் கார்த்திகேயன் ஜெகதீஷ், படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னணி பாடகர் வேல்முருகன் மேடையில் கிராமீய பாடல்களை பாடி விழாவிற்கு வந்திருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.

விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில்,“குறைந்த செலவில் மிகவும் நேர்த்தியாக இந்த மேகி தயாராகியிருக்கிறது.இதற்காக பாடுபட்ட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டுகிறேன். தற்போதைய காலகட்டத்தில் சிறிய பட்ஜெட்டில் படமெடுக்க நினைக்கும் புதிய தயாரிப்பாளர்களுக்கு இந்த படத்தின் இயக்குநரைப்போல் இயக்குநர்கள் கிடைத்தால் அது பெரிய வரபிரசாதம். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் மேகி போன்ற படத்தின் விழாக்களில் வருகைத் தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவிப்பதையும் சிக்கனம் கருதி தவிர்க்கலாம். அதற்காகும் செலவை படத்தின் விளம்பரங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை இங்கே ஒரு ஆலோசனையாக முன்வைக்கிறேன்.”என்றார்.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் வி சிகுகநாதன் பேசுகையில்,‘‘தயாரிப்பாளர் தாணு அவர்கள் சரியான இடத்தில் சரியான விசயத்தை முன்னிறுத்துவார். நான் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் போது, பிரபல தயாரிப்பாளர் ஏ வி எம் செட்டியார், என்னிடம், ‘ஒரு ரூபாய் செலவழித்தாலும், அது திரையில் தெரியும் என்றால் செலவழிக்க தயங்காதே. திரையில் தெரியாது என்றால் செலவழிக்காதே’என்பார். இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த விழாவிற்காக பின்னணியில் பேனர் வைக்கவில்லை. அது இந்த நிகழ்விற்காக மூன்று மணி நேரம் மட்டுமே பயன்படும் என்று எண்ணியிருப்பார். அதனால் அதனையும் தவிர்த்திருக்கிறார். இதையும் நான் வரவேற்கிறேன்.”என்றார்.

தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம் பேசுகையில்,“மேகி போன்ற சிறிய பட்ஜெட் வெளியாவதற்கு கலைப்புலி எஸ் தாணு போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் வழிகாட்டவேண்டும். சிறிய பட்ஜெட் படங்களுக்கு போதிய திரையரங்குகள் ஒதுக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த படத்தின் லிரிக்கல் வீடியோவில் பாடல் வரிகள் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தது. அதனை தமிழில் இடம்பெறவைத்திருக்கலாம். இனிமேல் லிரிக்கல் வீடியோவில் இடம்பெறும் பாடல் வரிகள் தமிழில் இடம்பெற வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கிராமங்களை திரையுலகம் தொடர்பான சங்கங்கள் தத்து எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசுகையில்,‘‘ டிஜிட்டல் தொழில்நுட்பம் திரையுலகில் அறிமுகமான பிறகு காட்டாற்று வெள்ளம் போல் புதிய புதிய தயாரிப்பாளர்களும், புதிய புதிய சிந்தனைகளுடன் படைப்பாளிகளும் வருகை தந்துகொண்டேயிருக்கிறார்கள். புதிய புதிய திறமையான கலைஞர்களும் வருகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தினம் தினம் ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். தயாரிப்பாளர் சங்கத்தில் தணிக்கைச்செய்யப்பட்டு நானூறு திரைப்படங்கள் வெளியாகாமல் இருக்கின்றன. இதில் முடங்கியிருக்கும் பணத்தை வைத்து இரண்டு பாகுபலி படத்தை எடுக்கலாம். அதனால் புதிய தயாரிப்பாளர்கள் ஐவர் ஒன்றாக இணைந்து, ஒரே கதையை தேர்ந்தெடுத்து, சற்று மீடியம் பட்ஜெட் படமாக எடுத்தால் அது நல்ல பலனைத் தரும். அதாவது இதன் மூலம் தயாரிப்பாளர்கள் பொருளாதார அளவில் போதிய லாபம் அடைவார்கள். அதனால் புதிய தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். உதிரி உதிரியாகள இல்லாமல். நல்லதொரு புரிதலுடன் ஐவர் இணைந்து.ஒரு படத்தை தரமாக தயாரிக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் தேவையான உதவிகள் தொடரும்.” என்றார்.

படத்தின் நாயகி ரியா பேசுகையில்,‘‘இந்த படத்தில் நான் ‘மேகி’ என்ற கேரக்டரில் நடித்து இருக்கிறேன். இந்த படத்தின் கதையை சொல்லி முடித்தவுடன் இயக்குநர் என்னிடம் நீங்கள் தமிழ் பெண்ணா?என கேட்டார். அவரிடம் நான், சார் நான் நன்கு தமிழில் பேசுவேன் என்று சொன்னேன். அனைவரும் தான் தமிழில் பேசுகிறார்கள். நீங்கள் தமிழ் பெண்ணா? என மீண்டும் கேட்டார். ஏன்? என்று கேட்டபோது, தமிழ் பெண்ணிற்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். என்றார்.  அவரின்  தேடலுக்கு  நான்  நன்றி  சொல்லிவிட்டு,  நான்  தமிழ் பெண் என்று கூறினேன். அதன்பிறகு தான் இதில் நடிக்க தேர்வு செய்தார். இயக்குநரின் இந்த தேடல் அனைவரிடத்திலும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இங்கு ஏராளமான திறமைகளுடன் நிறைய தமிழ் பெண்கள் வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள்.” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான கார்த்திகேயன் ஜெகதீஷ் பேசுகையில்,“ இது என்னுடைய முதல் படம். தயாரிப்பாளர்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. அதனால் என் தந்தை யிடம் சொல்லியபோது அவரே தயாரிக்க முன்வந்தார். இரண்டு மணி நேரம் ரசிகர்களை ஜாலியாக சிரிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஹாரர் காமெடி படத்தை இயக்கியிருக்கிறேன். இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவிக்கிறேன். ‘மேகி ’படத்தை விரைவில் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.”என்றார்.

விழாவின் இறுதியில் ‘மேகி ’படத்தின் டிரைலர் மற்றும் இசையை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட, நடிகர் சங்க தலைவர் நாசர் பெற்றுக் கொண்டார்.