சித்தர்களின் அரிய சக்தியை சொல்ல வரும் ‘ பயங்கரமான ஆளு’

பரிஷ்த்தா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பயங்கரமான ஆளு.’

அறிமுக இயக்குநர் அரசர் ராஜா, இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு, ஹீரோவாகவும் நடித்திருகிறார். ஹீரோயின்களாக நிஷா, சாரா இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

Bayangaramaana Aalu-Movie-Stills-2

இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நாயகன் அரசர் ராஜா, முதலில் வேறு ஹீரோவை வைத்து இப்படத்தை இயக்க இருந்த நிலையில், ஹீரோ கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரே ஹீரோவாகவும் நடித்துவிட்டார்.

செல்வமணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் பாடல்களை தமிழ்க்குமரன் எழுத, சுதிர் அலிகான் இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் பின்னணி இசை பிரத்யேகமாக இருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்க வகையில் இருக்க வேண்டும் என்பதால், இசை அரசர் தஷி இப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார். கிக்காஸ் காளி சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். சரண் பாஸ்கர் நடனத்தை வடிவமைத்துள்ளார்.

படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் குறித்து இயக்குநரும், ஹீரோவுமான அரசர் ராஜாவிடம் கேட்ட போது, “நம் இந்திய திருநாடு சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. இவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்துள்ளனர். அந்த அரிய கலையை சாமானிய மனிதர் கைகொள்ளும்போது, அவன் சந்திக்க கூடிய மாபெரும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.

Bayangaramaana Aalu-Movie-Stills-3

இந்திய மண்ணில், இப்படிப்பட்ட அரிய சக்திகள் குறித்தோ, சித்தர்களின் அரிய ரகசியங்கள் குறித்தோ இதுவரை யாரும் சொன்னதில்லை. பல்வேறு நூல்கள், ஓலை சுவடிகள் மற்றும் புராணங்கள் உள்ளிட்ட பலவற்றில் இருந்து கண்டு பிடித்த விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையோடு, பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கி வருகிறோம்.” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, வேலூர், ஆரணி, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றதோடு, வேலூரில் உள்ள பூச்சாண்டிகுப்பம் என்ற காட்டுப் பகுதியில் உள்ள பழைய பிரெஞ்சு கோட்டை ஒன்றிலும் படமாக்கப்பட்டுள்ளது. மிக பழமையான இந்த கோட்டையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் படம் ‘பயங்கரமான ஆளு’தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையிலான படமாக இருந்தாலும், காதல் காமெடி என்று கமர்ஷியலாகவும் இப்படம் உருவாகியிருக்கிறது.

‘பயங்கரமான ஆளு’ திரைப்படம் வரும் டிசம்பர் 14-ம் தேதி வெளியாகிறது.