குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் உண்மைக் கதை ‘ மான்ஸ்டர்’

0
358

‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படத்தை உருவாக்கிய ‘பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்’- அடுத்தத் தயாரிப்பாக தற்போது உருவாகி வருகிறது ‘மான்ஸ்டர்’ திரைப்படம். இந்தப் படத்தில் எஸ். ஜே. சூர்யாவும், பிரியா பவானி ஷங்கரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – கோகுல் பெனாய், படத் தொகுப்பு – V.J. சாபு ஜோசப், இணை எழுத்தாளர் – சங்கர் தாஸ், கலை இயக்கம் – ஷங்கர் சிவா. குடும்பக் கதையில் உருவாகி வரும் இந்தப் படத்தை ‘ஒரு நாள் கூத்து’ மூலம் பிரபலமான இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.

இந்த ‘மான்ஸ்டர்’ படம் பற்றிப் பேசிய இயக்குநர் நெல்சன் வெங்கடேன், “இந்தப் படம் எனது முந்தைய படமான ‘ஒரு நாள் கூத்து’ படத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது   நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும்.

அதை பார்வையாளர்களும் உணர்வார்கள். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் படமென்பதால் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும். ஆரம்பத்தில் நான் ‘பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்’-க்கு வேறு ஒரு கதையைத்தான் கூறினேன். அதனை அவர்கள் ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட அடுத்து உதயமானதுதான் இந்தக் கதை.

என் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை இது என்பதோடு இந்தக் கதையில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதால் இந்தப் படத்தின் கதைக் கரு என்னை அடிக்கடி தொந்தரவு செய்து வந்தது. உடனேயே இந்தக் கதையைக் சொல்லி துவக்கிவிட்டோம். இதுதான் ‘மான்ஸ்டர்’ உருவான கதை. படத்தின் கதை பற்றி இதற்கு மேல் என்னால் கூற முடியாது.

நாயகனைப் பற்றி யோசிக்க அவசியமே எழாமல் அது எஸ்.ஜே.சூர்யாதான் என்று முடிவாகியது. அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக் கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசிவரை அவர்தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார்.

நாயகி ப்ரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துக் கொண்டு தன்னால் இயன்ற அளவில் முயற்சி செய்திருக்கிறார். நடிகர் கருணாகரன் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் அனைவராலும் ரசிக்கப்படும்.தற்போது இசை வெளியீடு மற்றும் படத்தின் வெளியீட்டுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன..” என்றார்.