ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 :- பிரஸ் மீட் ; கம்ப்ளீட் ரிப்போர்ட்!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் தான் 2.0. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசிய போது, “ரஜினிகாந்தை இந்தப் படத்தில் வசீகரனாக , சிட்டியாக, 2.0-வாகப் பார்க்கப் போகிறீர்கள். படத்தில் ரசிகர்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் உள்ளது. இந்தப் படத்திற்கு 2.0 என்று டைட்டில் வைத்ததற்குக் காரணம், அதை சொல்லும் போது எந்த மொழி யாக இருந்தாலும் சொல்வதற்கு சுலமாக இருக்கும் என்பதால்தான். இந்திய சினிமாவுக்காக யாரும் இவ்வளவு செலவு பண்ண முடியாது. ஆனால் படத்தின் மீது நம்பிக்கை வைத்து தயாரிப் பாளர் சுபாஸ்கரன் செலவு செய்தார். என்னை எப்போதும் ஊக்கப்படுத்துவது ரசிகர்கள் தான். சின்னச்  சின்ன யோசனைகள் வந்துள்ளன. 3.0 உருவாக வாய்ப்புள்ளது. பார்க்கலாம்.

நமக்கு பிடித்த இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்று படம் செய்யாமல் முதலில் நல்ல கதையை தேர்ந்தெடுத்து விட்டுப் படம் இயக்குங்கள். அதன் பிறகு கதைக்கு ஏற்றாற்போல் நடிகர்கள், தயாரிப்பாளர்களின் தேர்வு இருக்க வேண்டும். 2.O திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார் கடுமையாக உழைத்து நடித்தனர் .உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கிளைமேக்சில் நடித்தார் ரஜினி”என பேசினார்.

இசையமைப்பாளர் A .R ரஹ்மான், “இத்தனை ஆண்டு பயணத்தில் எந்த ஹீரோவுக்கு பணியாற்ற ரொம்ப பிடித்திருந்தது’ என்று கேட்டால் இதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பதில் சொல்லி விட்டேன். சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றவே ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரு பெர்சானிலிட்டிய லைக் பண்ணனும்னா அவர் வாழ்க்கையில் எங்கிருந்து எங்கு உயர்ந்திருக்கிறார், எத்தகைய கடின நிலைகளைக் கடந்திருக்கிறார், எப்படி இந்த உயரத்தை அடைந்தார், எதையெல்லாம் அவர் சொல்லித் தருகிறார், எங்கிருந்து எந்த உயரத்துக்குப் போகிறார் என்றெல்லாம் தெரிய வேண்டும்.

அதை நான் ரஜினி சாரிடம் பார்த்திருக்கிறேன். குறிப்பாக அவரது ஆன்மிக சிந்தனைகள் பிடிக்கும். அப்புறம் இந்த வயதிலும் அவர் தொழிலில் காட்டும் ஈடுபாடு. நான் ஆஸ்கர் வென்றவுடன் ஓய்வுக்கு ஆசைப்பட்டேன். 40 வயதில் ரிட்டையர் ஆக வேண்டும் என நினைத்தேன். ஆனால், 2.0 படப்பிடிப்புக்குச் சென்றிருந்தபோது செட்டில் அவரது உழைப்பைப் பார்த்தேன். அப்போதே எனது முடிவை மாற்றிவிட்டேன். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என நினைத்தேன்” என்றார்

இப்படத்தின் வில்லன் அக்‌ஷய் குமார் பேசிய போது, ஷங்கர் இயக்குநர் மட்டுமல்ல அவர் ஒரு விஞ்ஞானி. இந்தப் படத்துக்கு நான் மேக் அப் போட்டதுபோல் எந்தப் படத்துக்கும் நான் மேக் அப் போட்டதில்லை. என் ஆயுளுக்கான மேக்கப்பை இந்த ஒரே படத்துக்கு போட்டுவிட்டேன். மேக் அப் போட 3 மணி நேரம் ஆகும். மேக் அப் கலைக்க 1.5 மணி நேரம் ஆகும். ஆனால் எல்லா வலிக்கும் இந்தப் படம் பொருத்தமானது. அத்தனை வலிக்கும் பதில் இருக்கிறது” என்று சொல்லி விட்டு எழுதி கொண்டு வந்ததை வாசித்தார். அதில் “ஷங்கர் இயக்குநர் மட்டுமல்ல அவர் ஒரு விஞ்ஞானி. இந்தப் படத்துக்கு நான் மேக் அப் போட்டதுபோல் எந்தப் படத்துக்கும் நான் மேக் அப் போட்டதில்லை. என் ஆயுளுக்கான மேக்கப்பை இந்த ஒரே படத்துக்கு போட்டுவிட்டேன். மேக் அப் போட 3 மணி நேரம் ஆகும். மேக் அப் கலைக்க 1.5 மணி நேரம் ஆகும். ஆனால் எல்லா வலிக்கும் இந்தப் படம் பொருத்தமானது. அத்தனை வலிக்கும் பதில் இருக்கிறது. ஆனாலும் ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் உடன் 2.0 படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி, உங்கள் அன்பிற்கு நன்றி என நடிகர் அக்‌ஷய் குமார் தமிழில் பேசினார்.

எமி ஜாக்சன், “இந்திய சினிமாவில் இரண்டு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி .வாய்ப்பளித்த ஷங்கர் அவர்களுக்கு நன்றி”என்று குறிப்பிட்டார்.

சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி பேசிய போது” இவ்வளவு பெரிய படத்தில் பணிபுரிந்து மிகவும் சந்தோசமாக உள்ளது.இயக்குனர் ஷங்கர் ,ரஜினி சார்,அக்சய் சார் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோ ருக்கு நன்றிகளும்,வாழ்த்துக்களும்..இது ஒரு தமிழ்ப்படம் இல்லை இது இந்தியப் படம். சிறந்த தொழில்நுட்பம், பிரம்மாண்டம் இவற்றுக்கு எல்லாம் நாம் எப்போதுமே மேற்கு உலகையே பார்த்திருந்தோம். ஆனால் ஷங்கர் உலகத்தையே, இந்திய சினிமாவைப் பார்க்க வைத்திருக்கிறார். லைகாவின் ஆதரவு அதற்கு உதவியது. இதில் நான் ஒரு பாலம் மட்டுமே. எங்கள் உழைப்பில் உருவான இந்த 4டி சவுண்ட் தொழில்நுட்பத்தை நாங்கள் SRL (Shankar, Resul, Lyca) 4டி சவுண்ட் எனப் பெயரிட்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

முத்தாய்ப்பாக பேசிய ரஜினி, ““என்னை தாய் தந்தையாக இருந்து வளர்த்த, நான் செய்யும் தவறுகளைச் சொல்லி திருத்திய, இப்போதும் எனது வழிகாட்டியாக இருக்கும் எனது அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்தப் படம் ரூ.600 கோடி முதலீட்டில் உருவாகியிருக்கிறது. ரஜினியையோ,   அக்‌ஷய் குமாரையோ நம்பி 2.0 படத்தை பார்க்க வரவேண்டாம். ஷங்கரை நம்பி வாருங்கள். ஷங்கர் மிகவும் நம்பிக்கையான மனிதர். இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன், ஸ்பீல் பெர்க் இயக்குநர் ஷங்கர். அவர் ஒரு சிறந்த படைப்பாளி, மிகச் சிறந்த இயக்குநர். அவரது சிந்தனையும், உருவாக்கமும் பிரம்மாண்டமானது. ஆச்சரியப்பட வைப்பது. இயக்குனர் ஷங்கர் 2.0 திரைப் படத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளார்.

அவருடன் இரு படங்களை முடித்த பிறகு மூன்றாவது முறையாக இணைவது பற்றி 2.0 கதை பற்றி பேசினோம். அப்போது அவரிடம் நான் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை மட்டும்தான் கேட்டேன். சிவாஜி படம் எடுக்கும் போது படத்தின் தயாரிப்பு நினைத்ததை விட அதிகமானது. ஆனால் படம் நல்லாவே வசூல் செய்தது. அந்த படத்தின் வசூல் எவ்வுளவோ அதை முதலீடாக வைத்து எந்திரன் படத்தை உருவாக்கினோம். கலாநிதி மாறன் சிறந்த வியாபாரி, தந்திரமான வியாபாரி. வியாபாரத்துக்கு தந்திரம் முக்கியம். சிவாஜி படத்தின் மொத்த வசூல் விபரங்களைத் தெரிந்து கொண்டு எந்திரன் படத்தின் தயாரிப்புச் செலவை முடிவு செய்தார். எந்திரனும் வசூல் குவித்து சாதனை படைத்தது. இந்த நிலையில், எந்திரன் வசூலை 2.0 படத்திற்காக தான் செலவு செய்வதாக சுபாஷ்கரன் கூறினார். தனக்கு லாபம் வேண்டாம், எந்திரன் வசூல் கிடைத்தால் போதும் என்றார். 300, 350 கோடிக்கு படத்தை எடுக்க முடிவு செய்து ஆரம்பித்தோம். தற்போது 500 கோடியை தாண்டியுள்ளது படத்தின் பட்ஜெட். இந்த படமும் நல்ல வசூலைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் நடிக்க முடியவில்லை. எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாகச் சொன்னேன். ஆனால் ஷங்கர் விடவில்லை. படம் முக்கியம் அல்ல, நீங்கள்தான் முக்கியம் என்று சுபாஷ் சொன்னார். உடல்நிலை சரியான பிறகு கூட படத்தை எடுக்கலாம். ஆனால் நான் திரும்ப வர வேண்டும் என்று சுபாஷ் சொன்னார். இவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது கடினம். இவரைப்போன்ற ஒரு நல்ல நண்பர் கிடைப்பது எளிதல்ல. கோஹினூர் வைரம் மாதிரி எனக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்து விட்டார்.

படத்தில் அக்‌ஷய் குமாரின் தோற்றத்தை பார்த்து ஆடிப்போயிட்டேன். மேக்கப்புக்காக அவர் 4 மணிநேரம் வேலை பொறுமையாக இருந்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கார் சவால். இந்தப் படததுக்கு புரமோஷன் சரியில்லை என சிலர் கூறியிருந் தாங்க.  இந்தப் படத்துக்கு புரமோஷனே தேவையில்லை. ரிலீசுக்குப் பிறகு தியேட்டரில் வந்து படம் பார்க்கும் ஒவ்வொருவரும் புரமோட்டர்களாக மாறி படத்துக்கு விளம்பரம் செய்வார்கள். ரொம்பவே தாமதமாக வந்திருப்பதாக கூறுகிறார்கள். லேட்டா வந்தாலும் சரியான நேரத்திற்கு வரவேண்டும். வந்து சரியா அடிக்க வேண்டும், நான் படத்தைச் சொன்னேன். மக்கள் நம்பியாச்சு.. எல்லாம் ரெடியா இருக்கு.. ரிலீஸ் மட்டும்தான் பாக்கி. ஆயிரக்கணக்கானோர் படத்திற்காக பணி புரிந்திருக்கிறார்கள். மீடியா நண்பர்கள் அனைவரும் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள். அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் எனது நண்பர் கமல் நடிக்கும் இந்தியன்-2 திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும்” என்றார்