காற்றின் மொழி – விமர்சனம்!

நம் சமுதாய அமைப்பில் கணவனும் மனைவியும் பெரும்பாலும் சம மதிப்புள்ளவர்களாகக் கருதப்படவில்லை. முதலில் மனைவியை விட கணவன் வயதில் மூத்தவன். அதுவே அதிகாரத் துக்கான முதல் தகுதியைத் தந்து விடுகிறதாம். அநேகமாக கணவன் அதிகமாகப் படித்தவன். மனைவியை விட உயர்ந்த பொறுப்பில் அல்லது வருவாய் ஈட்டுபவன். இவை யெல்லாம் கணவன் என்கிற இயற்கையான அதிகாரத்திற்குக் கூடுதல் வலு சேர்ப்பவை. இதற்கெல்லாம் மேலாக வீடு என்பதே கணவன் வீடாகவே கருதப்படுகிறது. பெண் இடம்பெயர்ந்து ‘வந்தவள்’. அவள் பெயரே இறுதி வரை ‘வந்தவள்’தான். அதனால் இந்த அமைப்பில் பெண் எப்படி நேரடியாக சம மதிப்புள் ளவளாக மாற முடியும்? என்றெல்லாம் ஆதி காலம் தொட்டு சில பலர் சொல்லி வந்த விஷயத்தை மிக நுட்பாக அதே சமயம் எளிதில் சகலரும் புரியும்படியான ஒரு பக்கா கமர்ஷியல் சினிமாவாக ‘காற்றின் மொழி’ என்ற தலைப்பில் கொடுத்து அப்ளாஸ் வாங்கியுள்ளார் இயக்குநர் ராதா மோகன். ஆனால் அவருக்கான கைத்தட்டல்களுக்கான ஒலிகள் அவ்வளவும் நாயகி ஜோதிகாவுக்கு போய் சேருகிறது என்பதுதான் இப்படத்தின் ஹைலைட்!

இந்தியில் ஹிட் அடித்த ‘தூமாரி சூலு’ என்ற படத்தின் ரீமேக் தான் இந்த ‘காற்றின் மொழி’. அதை நம்மாட்களுக்கு தகுந்தாற்போல் கொஞ்சம் தூக்கலாய் உப்பும் உரைப்பும் போட்டு கூடவே தக்கணூண்டு துவர்ப்பு, கசப்புடன் இனிப்பெனும் டபுள் மினிங் சுவைகளையும் சிட்டிகை கலந்து போட்டி பிரமாதமான ஃபுல் மீல்ஸ் பரிமாறி இருக்கிறார்கள். அதாவது மிடில் கிளாஸ் பேமிலியைச் சேர்தவர் ஜோதிகா. எக்ஸ்போர்ட் கார்மெண்ட் ஒன்றில் பணிபுரியும் கணவர் விதார்த், 11 வயது மகன் என்று மூவர் கொண்டது இந்த குடும்பம் இதில் போதுமான அக்கறை கொண்ட அடுப்பங்கரை இல்லத்தரசியான ஜோதிகா பிறந்த வீட்டின் உடன் பிறந்த இரட்டைச் சகோதரிகளால் மட்டுமின்றி, அப்பாவால் கூட அடுத்தடுத்து அவமானப்படுத்தபட்டவர்/ படுபவர். காரணம் இந்த ஜோதிகா பிளஸ் 2-வில் மூன்று முறை முயன்றும் ஃபெயிலாகி விட்டாராம். அதைச் சுட்டிக்காட்டியே சிஸ்டர்களே நக்கலடிப்பதும், கூடவே எந்த வேலை செய்தாலும் அதை அவர் அப்பாவே அதிருப்தியாக எதிர் கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இப்பேர் பட்ட திருமதி ஜோதிகாவுக்கு ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் எஃப்.எம் ரேடியோவில் அனெளன்சர் வேலை கிடைக்கிறது. ஆனால் அது- அர்த்த ராத்திரியில் இஸ்க்கு.. இஸ்க்கு என்று ஹஸ்க்கி வாய்ஸில் பேசி நேயர்களை கவரும் பணி. அதையும் பக்காவாக கற்றறிந்து பல கசமுசா பேச்சுக்களுக்கு நிஜ அர்த்தமே தெரியாமல் பேசி சமாளிக்கும் அந்த பணியை கூட விருப்பப்பட்டு செய்து வருகிறார், ஆனால் இந்த ஹஸ்க்கி ரொமான்ஸ் பேச்சால் பெமிலியரான தன் மனைவி யால் அப்செட்டாகும் அவரது கணவர், சகோதரிகள், அப்பா என்று குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பெரும் இந்த ரேடியோ வேலை வேணாம் விட்டுடு என்கிறார்கள். அதற்கு உடன்பட மறுப்பதாலும், மகன் வீடியோ கேம் அடிமையாகிப் போய் பிரச்னையாகி வீட்டை விட்டு ஓடி விடுவதாலும் , ஹஸ்பண்ட் விதார்த் ஆபிசில் நடக்கும் ஈகோவினாலும் குடும்பத்தில் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதை எப்படி எதிர் கொள்கிறார்.. முடிவு என்ன என்பதுதான் இக்கதையின் போக்கு.

நம் நாட்டில் இருக்கும் சராசரி குடும்பப் பெண்ணின் பிரச்னைகளையும், அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள பெண் மற்றும் அவர்களில் நடை, உடை, வாழ்க்கை முறைகளை கண்டு ஏங்கும் உணர்வு களையும், அதிர்ஷ்டவசமாக கிடைத்த புதிய ஜாப் என்னும் அலாவுதீன் விளக்கால் ஏற்படும் மாற்றங் களையும், இடையிடையே வானத்தில் மிதக்கும் கற்பனைப் போக்கையும் ஜோதிகாவை தவிர தமிழில் இவ்வளவு அழகாக வெளிப்படுத்த முடியாது என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யலாம். அவ்வளவு பொருத்தமாக தன் ரோலை உணர்ந்து நடித்திருக்கிறார் ஜோ. இத்தனைக் கும் இப்படத்தின் ஒரிஜினல் தூமாரி சூலு-வை பார்க்கவில்லை என்று கூட ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். அதனால்தானோ என்னவோ மிகச் சில இடங்களில் ஜோதிகாவின் நடிப்பு நாடகத்தனமாக இருந்தது.

ஜோ. வின் கணவராக வரும் விதார்த் ஓ.கேதான் ஆனால் ஜோதிகாவை பார்க்கும் போதும், அவரை நெருங்கும் போதும் சூர்யாவை நினைத்து கொள்வதாலோ என்னவோ ஹஸ்பண்ட் ஜாப்பை ஜஸ்ட் லைக் தட் ஒட்டாமல் செய்திருக்கிறார். அதே சமயம் ரேடியோ ஹெட்டாக வரும் லக்‌ஷ்மி மஞ்சு தொடங்கி இயக்குநரின் நிலைய வித்வான்களான குமரவேல், எம் எஸ் பாஸ்கர், மனோபாலா மற்றும் மயி சாமி போன்ரோரின் பங்களிப்பு பர்ஃபக்ட். சிம்பு ஸ்கீரினில் வந்தவுடன் ஒரு குரூப் ஆரவாரமாக கைத்தட்டுகிறது . அம்புட்டுத்தான்..  மகேஷ் முத்துசாமியின் கேமிரா கை கொடுத்த அளவுக்கு இசையமைத்த (ஏ ஆர் ரஹ்மான் ரிலேட்டிவான) காஷ்யஃப் ஒர்க் ஒர்த்தாக இல்லை.

ஆனாலும் கையில் எடுத்துக் கொண்ட ஃபேமிலி லேடியின் ஆசை அல்லது கனவு என்னும் கதைக் களத்தை எடுத்துக் கொண்டவர்  கன்னாபின்னா வென்று கடைப் பரத்தாமல்  பொன்.பார்த்திபனின் வசனங்கள் என்னும் மெல்லிய லகான் துணை யுடன்  ஜோதிகா என்னும் நடிப்பு ராட்சசியைக் கொண்டு ஆரம்ப பேராவில் சொன்னது போல் அற்புதமான சினிமாவை கொடுத்துள்ளார் ராதாமோகன்.

மொத்தத்தில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய  சினிமாப் பட்டியலில் இடம் பிடித்து விட்டது இந்த காற்றின் மொழி.

மார்க் 3.5 / 5

 

நன்றி :ஆந்தை ரிப்போர்ட்டர்