ஊரே ஹிட் என்று சொல்லும் போது, அந்தப் படத்தின் வசூலைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும். அதற்க்காக தொடர்ந்து இது போல் பலருக்கும் நடக்கும் தீர்வு இல்லாத பிரச்சினையை வெளியே பேசி என்னவாகப் போகிறது என்று விஜய் சேதுபதி வேதனையுடன் குறிப்பிட்டார்.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்த கோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘96’ படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. இதில் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், சின்மயி, பாடலாசிரியர் உமாதேவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரஜினியுடன் ‘பேட்ட’ படப்பிடிப்பில் இருப்பதால் த்ரிஷா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
அண்மை காலமாக பட வெளியீட்டில் தொடர்ச்சியாக பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது தமிழ் சினிமா. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ‘96’ படத்தின் நன்றி அறிவிப்பு பத்திரிகையாளர் சந்திப்பில் இப்பிரச்சினைகள் குறித்து விஜய் சேதுபதி பேசிய போது, “இங்கு வியாபாரம் என்பது ஒருவரைச் சார்ந்து இல்லை. இன்று வரை தயாரிப்பாளர்கள் சரியான வசூல் நிலவரம் இல்லை என்கிறார்கள். அது எப்படி சரி பண்ணுவது என்றே தெரியவில்லை. புதிதாக வருபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். யாரைப் போய் பார்க்க வேண்டும் என்று சொல்லுங்கள்.
ஒரு படத்தின் கதையைக் கேட்டு தயாரித்து வெளியே கொண்டு வருவது எவ்வளவு உயிர் போகிற விஷயமோ, அதை விடப் பல மடங்கு வேதனை படம் வெளியாவது. அப்புறம் படத்தின் வசூலைத் தெரிந்து கொள்வது. ஊரே ஹிட் என்று சொல்லும் போது, படத்தின் வசூலைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும். நீங்கள் பேசுவது ஒன்றாக இருக்கும், எங்களுக்கு வருவது ஒன்றாக இருக்கும். இங்கு சிஸ்டத்திலேயே பிரச்சினை இருக்கிறது. ஒருத்தரை ஒருத்தர் கையைக் கோத்துக்கொண்டு நிற்கிறார்கள்.
என்ன விஷயம் நடக்கிறது என்பதை வெளிப்படையாகப் பேசவே முடியாது. தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஏதாவது ஒரு தயாரிப்பாளரைத் தனியாக அழைத்துக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் என்ன உண்மை என்பது தெரியும். கேரவன் செலவு உள்ளிட்ட சில செலவுகள் செலவே அல்ல. அதைத்தாண்டி நிறைய இருக்கிறது.
சிறு படத் தயாரிப்பாளர்கள், பெரிய படத் தயாரிப்பாளர்கள் என்று இல்லை. நல்ல படம் வந்து சேரணும் என்று வேலை செய்கிறோம். அது சரியாக வெளியாகி, போட்ட பணம் வந்து சேர்ந்தால் போதும். ஆனால், அதற்குள் நிறைய பிரச்சினைகள் உள்ளன. தீர்வு இல்லாத பிரச்சினையை வெளியே பேசி என்னவாகப் போகிறது. அனைத்து பிரச்சினைகளையும் பேசி, எப்படி முடிவு கிடைக்கும். யார் கொடுப்பார்கள்?. எங்களைச் சார்ந்து இருக்கும் உங்களால் எப்படி தீர்வு கொடுக்க இயலும். அனைவருமே இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று போராடுகிறார்கள். ஆனால், முடியவில்லை.
பட வெளியீட்டில் பிரச்சினை இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். அதற்கு என்ன தீர்வு என்று என்னை கேட்கக் கூடாது”.இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.