சண்டக்கோழி 2 திருவிழா காலக் கட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படம்!

0
247

விஷால் நடிப்பில் லிங்குசாமி டைரக்சனில் 2005-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘சண்டக்கோழி’,, விஷாலின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இந்தப்படம் அமைந்தது. 13 வருடங்களுக்கு பிறகு லிங்குசாமி-விஷால் கூட்டணியில் இதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது ‘சண்டக்கோழி 2’. இந்தப் படத்தில், விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய நடித்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண், ஷண்முகராஜன் ஆகியோர் இதிலும் தொடர்கிறார்கள். மற்றும் கஞ்சா கருப்பு, ராம்தாஸ், ஹரீஷ் பெராடி, ‘கபாலி’ விஸ்வந்த், ‘அப்பாணி’ சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் வரும் அக்-18ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். இந்த நிகழ்வில் விஷால், ராஜ்கிரண், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், லிங்குசாமி, கஞ்சா கருப்பு, முனீஸ்காந்த் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, “சண்டக்கோழி முதல் பாகத்தின் மரியாதையை இதில் காப்பாற்றி இருக்கிறோம். இந்தப் படத்தில் எல்லாமே சரியாக அமைந்து வந்திருக்கிறது. கதாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் அடுத்ததாக சண்டக்கோழி மூன்றாம் பாகத்திற்கான வேலைகளை துவங்க சொல்லிவிட்டேன். இதுபோல பதினைந்து வருட இடைவெளி எல்லாம் இந்தப்படத்திற்கு எடுத்துக்கொள்ள மாட்டேன். விஷாலை வைத்து அடுத்த படத்தை இயக்கினால் அது சண்டக்கோழி-3 ஆகத்தான் இருக்கும்” என்றார். விஷாலும் கதை எப்போது தயாராகிறதோ உடனே சொல்லுங்கள் படத்தை ஆரம்பித்து விடலாம் என்றார்.

பின்னர் பேசிய விஷால், வரலட்சுமி சரத்குமாரும், கீர்த்தி சுரேஷும், இந்த படத்துக்கு கிடைத்த இரண்டு பெரிய சொத்துக்கள் என்று குறிப்பிட்டார். கீர்த்தி சுரேஷை பற்றி, அவரது இயற்பெயரான காயத்ரி என்ற பெயரை கூறி அழைக்கும் அளவுக்கு அவரை தனக்கு நன்கு தெரியும் என்றும், அவர் ஒரு சிறந்த நடிகை என்றும் இந்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கும் தருணத்திற்காக தான் காத்திருப்பதாகவும் விஷால் தெரிவித்தார்.

தொடர்ந்து வரலட்சுமியை பற்றி கூறும்போது, முதலில் வரலட்சுமியின் கதாபாத்திரத்தை பற்றி அவரிடம் சொன்னபோது, தன் தந்தை சரத்குமாரையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை அவர் கூறியதாக விஷால் கூறினார். மேலும், அப்படி அந்த வில்லன் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தால், சண்டை காட்சிகள் நிஜமாகவே இருக்கும் என்றும் என் முகத்தில் விழும் குத்துகளின் சத்தம் பல கிலோமீட்டர்கள் உண்மையாகவே கேட்கும் என்று விஷால் சொன்னார்.

மேலும் பேசிய அவர், “இவ்வளவு மிகப்பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். சண்டக்கோழி 2 வில் அவருடைய கதாபாத்திரம் அவ்வளவு அழகானது. கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான். சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம்.

இரும்புத்திரைக்கு சிறப்பான இசையை தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, சண்டக்கோழி 2 வுக்கும் சிறப்பான இசையை தந்துள்ளார். சண்டக்கோழி 2 திருவிழா காலக் கட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படமாக இருக்கும். வெளியீட்டு தேதியை சொல்லி விட்டு ஒரு படமெடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம். படக் குழுவுக்கு அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இனிமேல் அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். யுவன் ஷங்கர் என்னுடைய சகோதரன் மாதிரி. அவருடைய இசையில் பாடலும் மிகப்பெரிய ஹிட். முதல் பாகத்தை தயாரித்த என் சகோதரன் விக்ரமுக்கு நன்றி.” என்றார்.

இதையடுத்து பத்திரிகையாளர்கள் METOO விவகாரம் பற்றி கேட்டபோது, “நான் எப்போதும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரானவன். METOOவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து கூற வேண்டும் என்று இல்லை. ட்விட்டர் என்பது ஒரு தொழிநுட்ப வளர்ச்சி. அது மற்றும்மொரு சமூகவலைதளம். அங்கு தான் கருத்து கூற வேண்டும் என்று இல்லை. பத்திரிகையாளர் களை சந்தித்து என்னுடைய கருத்துக்களை கூறலாம் என்று இருந்தேன். பாலியல் தொல்லை கள் நடப்பதற்கு முன்பே அமலா பால் புகார் செய்தது போல் எங்களிடம் புகார் செய்ய வேண்டும். மளேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியின் ஒத்திகை நடக்கும் போது அமலா பாலிடம் தவறாக பேசிய ஒருவரை பிடித்து வைத்து பின்னர் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். நானும் கார்த்தியும் உடனே அவரை கைது செய்ய இங்கிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். அதே போல் இதை போன்ற விஷயங்கள் நடப்பதற்கு முன்னரே எங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பிரச்சனை நடந்துவிட்டது என்று புகாரளிக்க இது ஒன்னும் காவல் நிலையம் அல்ல. பாலியல் புகார்களை விசாரிக்க மற்றும் அதை தடுக்க தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றார் விஷால்.