ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் ‘விஸ்வாஸம்’

அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாஸம் வர்த்தக வட்டாரங்களில் மிகவும்  சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. 2019ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றான, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்கு களில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் திரைப்படத்தை வெளியிடும் செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸின் பிரசாந்த் அவர்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“திரு.அஜித்குமார் அவர்களின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் கதை தேர்வு, வெளிநாட்டு சந்தையில் அவருக்கென ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது. செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் சார்பில் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் ‘விஸ்வாஸம்’ படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். உண்மையில், இந்த நாடுகளில் வெளியாகும் முதல் அஜித்குமார் படம் இது தான். ஆனால், குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் ரஷ்யாவில் 8க்கும் அதிகமான நகரங்களில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படமாக இது இருக்கப் போகிறது என்கிறார் செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் பிரசாந்த். இவர் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை ரஷ்யாவில் வெளியிட்டிருக்கிறார்.
இந்த நாடுகளில் நம் திரைப்படங்களின் வரவேற்பு குறித்து அவர் குறிப்பிடுகையில், “பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவுக்கும் இடையிலான இடைவெளி நல்ல கதையுள்ள படங்களால் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், இங்குள்ள ரசிகர்கள் தொழில்நுட்ப ரீதியான திரைப்படங்கள் மட்டுமல்லாமல், உணர்வுள்ள நல்ல குடும்பப்பாங்கான பொழுதுபோக்கு படங்களையும் கூட மிகவும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறார்கள். நிச்சயமாக, குடும்ப உணர்வுகள் உலகளாவிய பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். மேலும், தமிழ் பேசும் நாடுகளை தாண்டி, அஜித்குமாரின் பல திரைப்படங்களை ஆன்லைனில் பார்த்து, அவருக்கென ஒரு வலுவான ரசிகர் தளம் இந்த நாடுகளில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.
பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் இந்த விஸ்வாஸம் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரமேஷ் திலக், யோகிபாபு, ரோபோ ஷங்கர், அனிகா, கோவை சரளா மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் வெளிநாட்டு உரிமைகளை நடிகர், தயாரிப்பாளர் அருண்பாண்டியன் ஏ & பி குரூப் சார்பில் கைப்பற்றியிருக்கிறார்