சண்டக் கோழி 2 – விமர்சனம்!

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 2005-ம் ஆண்டின் இறுதியில் வெளியான சண்டக்கோழி படம் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத சினிமா என்றால் அது மிகையல்ல. அப்படத்தின் இரண்டாம் பாகத்தை அதே விஷாலை வைத்து ஊர் திருவிழா, பழிக்கு பழி,, அடி, வெட்டு, குத்து ,அது, இது என்று பக்கா கமர்ஷியல் சினிமாவுக்கு எதெல்லாம் அவசியமோ அத்தனையையும் அளவாக கலந்து வழங்கி இருக்கிறார் அதே இயக்குநர் லிங்குசாமி. ஆனால் அந்த’சண்டக்கோழி’யில் சொந்த பிரச்சினைக்காக வில்லனை எதிர்த்த விஷால், இந்த சண்டக் கோழி இரண்டாம் பாகத்தில் ஊர் பிரச்சினைக்காக வில்லி & கோவை துவம்சம் பண்ணுகிறார் என்பதுதான் கொஞ்சம் வித்தியாசம்.

படத்தின் கதை என்னவென்றால் ஏழு கிராம மக்கள் ஒன்றாக இணைந்து நடத்தும் கோயில் திருவிழாவில் நடைபெறும் கறி விருந்தில், ஒருவர் தன் இலையில் தக்கனூண்டு கறி வைச்சாட் டாய்ங்க என்று அப்செட்டாகி ஆவேசப்பட, அதை தொடர்ந்து நடக்க்கும் களேபரத்தில் ஒருவரது உயிர் பலியாகிறது. அது யார் என்றால் பேச்சி என்ற பெயரில் இருக்கும் வரலட்சுமியின் ஹஸ்பண்ட் விஸ்வநாத்-தான். அந்த கறி விருந்தில் கணவனைப் பறி கொடுத்த வரலட்சுமி தன் கணவனோட சாவுக்குக் காரணமானவங்க வம்சத்தில் ஒரு உசுரு கூட இருக்கக்கூடாது என்று சபதம் எடுத்து அதன் படி எதிராளி வம்சத்தைச் சேர்ந்த ஒருவரையும் விடாமல் வெட்டிச் சாய்க்கிறார்கள்.

ஆனா இந்த கொலை வெறியில் ஹரி என்ற இளைஞன் மட்டுமே மிஞ்சுகிறான். அதுவும் எப்படி என்றால்.. -அவனை கொலை செய்ய முயலும் போது அங்கு எண்ட்ரியாகும் ஊர் பெரிசு ராஜ்கிரண் இந்த ஹரியை காப்பாற்றி தன் பாதுகாப்பில் வைத்து கொள்கிறார். ஆனால் எப்படியாவது அந்த ஒத்தை கடைசி வாரிசு இளைஞனை கொலை செய்தே தீருவோம் என்று வரலட்சுமி கோஷ்டி ஓப்பன் சபதமிட்டதால், ஊரில் நடக்கும் பொதுத் திருவிழாவுக்கே அரசு தடை விதித்து விடுகிறது.

இப்படியாக ஏழு ஆண்டுகளாக நடத்த முடியாத திருவிழாவை நடத்தும் முயற்சியில் பெரிசு ராஜ் கிரண் ஈடுபடுகிறார். இதற்கு முட்டுக் கட்டையாக இருந்த வரலட்சுமி தரப்பும் சம்மதம் சொன்ன நிலையில், திருவிழா தொடங்குகிறது. அதே சமயம் வெளிநாட்டில் இருந்து சொந்த கிராமத்துக்கு வரும் விஷால், நடந்த பிரச்சினையை கேட்டு விட்டு, தனது அப்பாவின் சபதத்தை நிறைவேற்றும் பொருட்டு , அந்த ஹரி என்னும் இளைஞருக்கு பாதுகாப்பாக இருக்கிறார், கூடவே கீர்த்தி சுரேஷை காதல், அப்பபோ எதிரிகளுடன் ஃபைட் என்று தன் ஸ்டைலில் போய்க் கொண்டிருக்கிறார். இந் நிலையில் அந்த ஹரியைக் கண்டு பிடித்து கொலை செய்ய வரலட்சுமி டீம் முயற்சி செய்ய அதை ராஜ்கிரணும், விஷாலும் எதிர் கொள்ளும் போது ராஜ்கிரண் தாக்கப்பட்டு உயிருக்கு போராட, ராஜ் கிரண் இடத்தில் இருந்து திருவிழாவை வெற்றிகரமாக முடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகும் விஷால், தனது அப்பாவின் நிலையை ஊர் மக்களிடம் மறைத்து, திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதோடு, வரலட்சுமி கோஷ்ட்டியினரிடம் இருந்து அந்த இளைஞரை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த ‘சண்டக்கோழி 2’ படத்தின் கதை.

முந்தைய் ‘சண்டக்கோழி’படத்தில் இருந்த அந்த துறுதுறுவென்ற சீன்களும், ஸ்பீடும் இந்த ‘சண்டக் கோழி 2’ல் அவ்வளவாக இல்லை, குறிப்பாக அதில் இருந்த குடும்ப எபிசோட் இதில் மிஸ்ஸிங். கல கலப்பான பெண்களின் சிரிப்பும், அவர்களது பேச்சையும் குறைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஒரே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையாகவே இருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தாலும், படத்தின் பெரும்பாதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் திருவிழா எபிசோட், நம் மனதிலும் திருவிழாவில் பங்கேற்ற உற்சாகத்தைக் கொடுக்கிறது.

மிகப் பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக்கிய அந்த சணடக் கோழியில் பார்த்த மாதிரியே தோற்றத்தில் இத்தனை வருடங்கள் கழிந்த நிலையிலும் விஷாலும் ராஜ்கிரணும் காட்சியளிப்பது அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். சண்டக்கோழி விஷால் அடிக்கும் ஒவ்வொரு அடியும் திரையில் தெறிக்கிறது. அவ்வளவு உக்கிரம். கூடவே தந்தை ராஜ்கிரணுக்கு கட்டுப்பட்ட மகன் என்கிற எல்லைக்கோட்டை மீறாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்துள்ளார் விஷால். அதே ராஜ்கிரண் அப்படியே அட்டகாசமாக தன் பங்கை செய்திருக்கிரார்

ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், மீரா ஜாஸ்மீனுக்கு பதிலாக வருபவர்- கிராமத்து பின்னணியில் நடித்தி ருப்பதால், நடிப்பில் வித்தியாசத்தைக் காட்ட முயற்சித்து சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கை கொடுத்து எரிச்சலடைய செய்கிறார். இருந்தாலும் பல இடங்களில் அழகைக் காட்டி ரசிக்கும்படி நடந்து கொள்கிறார். வில்லித்தனமான வரலட்சுமியின் கேரக்டரும், அதற்கு அவர் மெனக்கெட் டிருக்கும் போக்கும் நன்றாகவே இருக்கிறது. நாயகியாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் அடம் பிடிக்காமல் வெரைட்டியான ரோல்களை ஏற்று மேக்சிமம் டெடிகேட்டிவாக உழைக்கும் வரலட்சுமிக்கு ஸ்பெஷல் பொக்கே கொடுக்கலாம்

ஆனாலும் படம் முழுவதும் ‘ஏய், ஆய், ஊய்’ என்று குரல் கொடுத்து அதிரடியான ஆக்‌ஷன் மூடி லேயே பயணப்பட்டாலும், அவ்வப்போது கஞ்சா கருப்பு – முனிஷ்காந்த் கூட்டணியின் காமெடிக் காட்சிகள் சற்று ஆறுதலை கொடுக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான் என்றாலும், பின்னணி இசை சூப்பர் ரகமாக இருக்கிறது. சக்திவேலின் ஒளிப்பதிவு அபாரம். ஊர் திருவிழாவில் கலந்துக்கொள்ளும் அனுபவத்தை படம் பார்ப்பவர்களுக்கும் கொடுப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளில் வீசும் அனலையும் நாம் உணரும்படி செய்கிறது.

மொத்தத்தில் அதிரடியான சண்டையை மட்டுமே முன்னிலைப்படுத்தாமல், அப்பா – மகன் செண்டிமெண்ட்டை எல்லாம் கலந்துக் கட்டி ஜெயித்தே ஆக வேண்டுமென்ற முனைப்போடு உருவாக்கி உள்ள இந்த சண்டக் கோழி 2 ருசியாகத்தான் இருக்கிறது.

மார்க் 3 / 5

நன்றி ஆந்தை ரிப்போர்ட்டர்