வந்தனம்..! வந்தனம்..!!
நாங்களும் இந்த சினிமாவுக்கு வந்தனம் கூறி வர்றோமுங்க…!!!
காடு மல மேடு கடந்து காடோடியா வாழ்ந்த வாழ்க்கைய படமா உங்க முன்ன கொண்டு வரோம்…
‘தொரட்டி’ங்க எங்க படத்தோட பேரு.
பட்டுன்னு புரியலன்னா சொல்றோமுங்க விளக்கம்..
கிடை போடும் கீதாரியின் கிடையைக் காவல் காக்கும் ஆயுதந்தாங்க ‘தொரட்டி’..!
வெட்டவெளி வாழ்க்கை… வெள்ளந்தியான கூட்டம்.. ஆட்டோட ஆடா அலையும் அந்த அப்பாவி கூட்டம்.. கூட்டத்துல இளமாறி ஒண்ணு துள்ளிக்கிட்டு திசை மாறுது கண்ணு.. வெந்த சோறு, சுட்ட கறி, பட்ட சாரயத்துக்காக வாழும் வஞ்சகக் கூட்டம்.. வழி தப்பி வந்து அடைக்கலமாகும் இளமாறி. கூறு போடும் கூட்டத்துக்கு சோறு போடும் சூது வாது அறியாத இளமாறி… விதி சொல்லும் கணக்கு விடை சொல்வது யாரு…. காத்திருக்கும் காலம்… கனியும்போது முடியும் இந்தக் கணக்கு…!
அறியாத `இளமாறி மாயனாக ஷமன் மித்ரு.. நாயகியாக செம்பொண்ணுவாக சத்யகலா வாழ்ந்திருக்க… கறிக்கும், சாராயத்துக்கும் அலையும் காவாலி கூட்டமாக செந்தட்டி ஈப்புலி.. சோத்துமுட்டி கதாபாத்திரங்களாக புதுமுகங்கள் நடிக்க…
வாய்க்கா, வரப்பு, ஆடு, பட்டி என பட்டித்தொட்டி எங்கும் படமாக்க கலை அமைச்சு குடுத்த செல்லம் ஜெயசீலன்.. காட்டுப் பயலுக சன்டைய சமரசம் இல்லாமல் இரத்தமும், சதையுமா அமைச்சு குடுத்த ‘புயல்’ சேகர்.. காக்கா, குருவி, காடை, கவுதாரி மட்டுமில்லாமல் சில்லுவண்டு சத்தத்தகூட களத்துல இறங்கி பதிவு பண்ணுன ஒலி வடிவமைப்பாளர் பரணிதரன்.. காடு மேடெல்லாம் அலைஞ்சு மொத்த கதையும் ஒத்த கேமராக்குள்ள படம் புடிச்ச குமார் ஸ்ரீதர்.. பதறு வேற. பயிறு வேறன்னு பதம் பார்த்து பிரிச்சு படம் தொகுத்த ராஜா முகமது.. மண் வாசனை மாறாம பாட்டெழுதிய சினேகன்.. பாட்டுக்கு மெட்டு போட்ட வேத் சங்கர்.. இசை பிண்ணனியை முன்னணியா பண்ணுன ஜித்தின் ரோஷன்.. மொத்தக் கூட்டத்துக்கும் காவலா காபந்தா நின்னு தயாரிச்ச ஷமன் மித்ரு.. பக்குவமா பதம் பார்த்து படைப்பாக்கி இயக்கிய பி.மாரிமுத்து… அத்தனைக்கும் மேல திருக்குமரன் எண்ட்டர்டெயின்மெண்ட் எங்களோட இந்த ‘தொரட்டி’ படத்தை வெளியிடுறாங்க…!
இப்படி மொத்தப் பேரும் ஒண்ணு கூடி வேர்வை சிந்தி விளைய வச்ச வெள்ளாமைய குந்துமணி சிந்தாம வீடு வந்து சேர்க்கும் விவசாயி கணக்கா… பாடுபட்டு உழைச்சத சாமிக்கு படைக்கிற மாதிரி நினைச்சு உங்க முன்ன படைக்கிறோமுங்க..!
பாத்துட்டு சொல்லுங்க உங்க பாராட்ட…!!!