தாய்த்தமிழ் பேசும், நம்வீட்டு பெண் திரையில் ஜொலிப்பது தமிழ் திரையுலகில் அதிசயமாகவே நிகழ்ந்து வருகிறது. வெளிமாநில நடிகைகள் கோலோச்சும் தமிழ் திரையுலகில், தடைகளை தகர்த்து, அனைவரும் பாராட்டும் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார் துஷாரா விஜயன். ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கதத்தை போக்கும் வகையில், தாய்த்தமிழ் மொழியில் பேசியும், நடிப்பிலும் அனைவரையும் கவர்ந்து, பெரு நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் துஷாரா விஜயன். அசாத்தியமான இவரது திரைப்பயணம் பலரையும் வியக்க வைக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னியாபுரம் ஊரைச் சேர்ந்த இவர் “போதை ஏறி புத்தி மாறி” படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “அன்புள்ள கில்லி” திரைப் படத்திலும் மற்றும் “கண்ணம்மா” குறும்படத்திலும் நடித்தார். 6 வருடங்களாக திரையுலகில் சரியான வாய்ப்பு தேடி, வெகு பொறுமையுடன் காத்திருந்து, கிடைத்த வாய்ப்பில் தன் திறமையை நிரூபித்து இன்றைக்கு நட்சத்திர நடிகையாக மாறியுள்ளார்.
தற்போது தமிழின் மிக முக்கியமான இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் “சர்பேட்டா பரம்பரை” படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இது குறித்து நடிகை துஷாரா பாண்டியன் கூறியது…
“இயக்குநர் பா ரஞ்சித், சமூக வலைதளத்தில் எனது புகைப்படத்தை பார்த்து விட்டு, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எனக்கு சரளமாக தமிழ் பேச வருமா என வினவினார். எனது திறமையும் மொழியும் எனக்கான வாய்ப்பை பெற்று தந்தது. ஆடிசனில் என்னிடம் சில விசயங்கள் செய்து காட்டும்படி கூறினார். என்னால் முடிந்த அளவு வேகமாக கத்தும்படி கேட்டார்கள். நான் செய்து முடித்த அடுத்த நொடி, இயக்குநர் ரஞ்சித் “ஓகே நீ இப்படத்தில் நடிக்கிறாய்” என்று கூறினார். அதன்பிறகு படத்தின் உணர்பூர்வமான காட்சி ஒன்றை நடித்து காட்டும்படி கேட்டார். அது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. “சர்பேட்டா பரம்பரை” படத்தில் இடைவேளைக்கு பிறகே எனது காட்சிகள் வரும். மாரியம்மாள் எனும் எனது கதாப்பாத்திரம், வாய்த்துடுக்கு மிகுந்த, தைரியமிக்க அழுத்தமான பெண் கதாப்பாத்திரம் ஆகும். நான் சரளமாக தமிழ் பேசினாலும் டப்பிங்கில் வட சென்னை மொழி வழக்கை, கையாள்வது கடினமாக இருந்தது. படத்தின் படப்பிடிப்பின் போது ஒருமுறை இயக்குநர் வசந்தபாலன் அவர்கள் படப்பிடிப்பை பார்வையிட்டார், பின் என்னை அலுவலகத்தில் வந்து பார்க்கும்படி கூறினார். அதன் பின் அவரது படத்தில் நடிக்கும் என் கனவு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இயக்குநர் வசந்தபாலன் ள் இயக்கும் படத்தில் அர்ஜீன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். நான் சுப்புலக்ஷ்மி எனும் மரியாம்மாளுக்கு நேரெதிர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
உண்மையில் தமிழ் பேசும் திறமையுள்ள நடிகர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைப்பது மனதிற்கு மிகபெரும் மகிழ்ச்சியை தருகிறது. உங்களுக்கு சினிமா மீது தீவிரமான காதலும், நல்ல திறமையும் இருந்தால் உங்களுக்கான வாய்ப்பு உங்களை கண்டிப்பாக வந்தடையும், நீங்கள் கண்டிப்பாக கவனிக்கப்படாமல் போக மாட்டீர்கள். எந்த ஒரு படத்திலும் சவால் தரும் பாத்திரங்களை செய்யவே நான் விரும்புகிறேன். வெறும் கதாநாயகியாக மட்டும் நடிக்காமல், ஒரு நல்ல நடிகையாக பார்வதி திருவோது, நயன்தாரா போல மிளிரவே ஆசைப்படுகிறேன்”.