பிரபுதேவா திமிரு பிடிச்ச போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’

ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்று விஜய் கேரக்டர் மூலம்  ‘போக்கிரி’ படத்தின் மூலம் எடுத்து காட்டியவர் இயக்குநர் பிரபுதேவா. இப்போது அதே திமிரு பிடிச்ச போலீஸ் அதிகாரியாக ‘பொன் மாணிக்கவேல்’ படத்தில் தானே நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இப்படத்தை ஏ. சி. முகில் செல்லப்பன் இயக்க நேமிசந்த் ஜபக், வி. ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கிறார்கள்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் “பொன்.மாணிக்கவேல் என்ற காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கிறார். கடமை தவறாத ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம், அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது.யதார்த்தமான ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையும், சமகாலத்தில் நிகழ்ந்த முக்கியமான குற்றச்சம்பவம் ஒன்றைப் பற்றியும் கூறியிருக்கிறேன். முழுக்க சென்னையில் நடைபெறும் கதை இது. இக்கதையைக் கேட்டவுடன் மிகவும் பிடித்திருப்பதாக பிரபுதேவா தெரிவித்தார். தினமும் ஜிம்முக்கு சென்று காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்துக்கு தயார்படுத்திக் கொண்டார்.” என்றார் இயக்குநர்.

இப்படத்தில் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதத்தில் பாடலும் நடனமும் இருக்கிறது. இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன் மற்றும் ‘பாகுபலி’ படத்தில் நடித்த காலகேயா பிரபாகர் வில்லத்தனம் கலந்த குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார். ‘பொன் மாணிக்கவேல்’ படத்திற்கு டி. இமான் இசையமைக்க, கே. ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது என்கிறது படக்குழு.