தமிழர்களை எச்சரிக்கும் விதமாக உருவாகியுள்ள ‘காட்டுப்பய சார் இந்த காளி’

நிஜமாக நடந்த’மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்க யுரேகா, இயக்கியிருக்கும் நான்காவது படம் ‘காட்டுப்பய சார் இந்த காளி’. ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ் மற்றும் யுரேகா சினிமா பள்ளி நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் ஜெய்வந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ‘மத்திய சென்னை’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஜெய்வந்துக்கு ஜோடியாக ஐரா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், இயக்குநர்கள் மாரிமுத்து, சி.வி.குமார், அபிஷேக், யோகி தேவராஜ், கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வட இந்தியர்கள் வருகையில் வாழ்வாதாரத்தை இழந்து வரும் தமிழர்களை எச்சரிக்கும் விதமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இது குறித்த அறிவிப்புக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் யுரேகா, “என ஒவ்வொரு படத்திலும் சமூக பிரச்சினைகளைப் பற்றி தான் பேசி வருகிறேன். அந்த வகையில், இந்த படத்தில் தமிழகத்தின் தற்போதை முக்கிய பிரச்சினையைப் பற்றி பேசியிருக்கிறேன். திராவிடர்கள் இருந்த தென்னிந்தியாவில் தற்போது ஆரியர்களின் கலப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில். வட மாநிலங்களில் இருந்து வேலைக்காக இங்கு ஒவ்வொரு நாளும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் அவர்கள் தான் இருக்கிறார்கள். முனியாண்டி விலாஸில் கூட மணிப்பூர் காரன் இருக்கான். சரவண பவன் ஓட்டலில் சாம்பார் வாங்க முடியவில்லை. காரணம் நாம் பேசுவது அவனுக்கு புரியவில்லை, அவன் பேசுவது நமக்கு புரியவில்லை. இப்படி வட மாநிலத்தவர் அதிகரிப்பால், தமிழகத்தில் தமிழ் பேச முடியாத சூழல் எதிர்காலத்தில் ஏற்படும், அதனை தவிர்க்க வேண்டும், அதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும், என்பதை இந்த படம் பேசும்.

மற்ற மாநிலத்தவர் இங்கு வர கூடாது என்று நான் சொல்லவில்லை. தாராளமாக வரட்டும், வந்து பிழைக்கட்டும். ஆனால், அவர்களுக்கு என்று ஒரு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அவர்கள் இங்கு வந்து குறிப்பிட்ட காலத்திற்கு பணியாற்ற அவர்களுக்கு உள்ளூர் விசா வழங்கப்பட வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை. அப்படி இல்லை என்றால், எதிர்காலத்தில் தமிழர்களின் நிலை ரொம்பவே மோசமாகிவிடும். இது ஏதோ சாதாரணமாக நடப்பது அல்ல, திட்டமிட்டே ஆரியர்களை திராவிடர்களுடன் கலக்க செய்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, இந்த நிகழ்வு எப்படி ஏற்படுகிறது, என்பதை தான் ‘காட்டுப்பய சார் இந்த காளி’ பேசுகிறது.” என்றார்.

ஹீரோ ஜெய்வந்த் பேசுகையில், “இந்த படத்தில் ஹீரோவாக நடித்ததோடு படத்தையும் நான் தயாரித்திருக்கிறேன். லாப நோக்கத்திற்காக இந்த படத்தை நான் தயாரிக்கவில்லை. தமிழ் உணர்வாளனாக ஒரு படம் எடுக்க வேண்டும் என்று அண்ணன் இயக்குநர் யுரேகாவிடம் தெரிவித்த போது, அவர் இந்த கதையை சொன்னார். உடனே இதை நானே தயாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் சி.வி.குமார், மூணாறு ரமேஷ், அபிஷேக், ஹீரோயின் ஐரா, முத்தையா கண்ணதாசன் ஆகியோரும் பேசினார்கள். முன்னதாக அ’சிவப்பு எனக்கு பிடிக்கும்’ என்ற படத்தில் மூலம் சிவப்பு விளக்கு பகுதி சென்னைக்கு வேண்டும் என்ற கருத்தை கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குநர் யுரேகா, மீண்டும் சர்ச்சையான விஷயத்தை, அதுவும் தமிழகத்தின் தற்போதைய சூழல் பற்றிய சர்ச்சையாக விஷயத்தை பேசியிருப்பதால் ‘காட்டுப்பய சார் இந்த காளி’ பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, இப்படம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகிறது.