பானி பூரி இனிப்பா இல்லை கசப்பா!

பானி பூரி இணைய தொடர் விமர்சனம் !!

 

தயாரிப்பு: ஃபுல் ஹவுஸ் என்டர்டெய்ன்மென்ட்
நடிகர்கள்: லிங்கா, ஷம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா, வினோத் சாகர் மற்றும் பலர்
இயக்கம்: பாலாஜி வேணுகோபால்

ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் பெயரில் புதிதாக ஆரம்பமாகியிருக்கும் டிஜிட்டல் தளத்தில் ஜூன் 20 ஆம் தேதி முதல் வெளியாகியிருக்கும் இணையத் தொடர் ‘பானி பூரி’.

தற்போது வரவர ஓடிடியில் வரும் வெப் சீரிஸ்கள் அடல்ட் படுக்கையறை காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களோடு வர ஆரம்பித்து விட்டது அதில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது பானி பூரி

 

காதலன் லிங்காவும், காதலி ஷம்பிகாவும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். ஷம்பிகா தோழி காதலில் தோற்க, ஆண்களை வெறுத்து ப்ரேக்கப் செய்கிறார் ஷம்பிகா. தன் காதலியை அடைய அவரை தேடி அவர் வீட்டுக்கே செல்கிறார் லிங்கா .

ஷம்பிகாவின் தந்தையான இளங்கோ.., ‘இருவரும் ஒரு வீட்டில் ஒரு வாரம் ஒன்றிணைந்து வாழுங்கள். உங்களுக்கிடையே ஒரு வாரத்திற்குள் கருத்து வேறுபாடு இல்லாமல்.. சகிப்புத்தன்மையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து சென்றால்.. அதன் பிறகு திருமணம் குறித்து பேசலாம்’ என நிபந்தனை விதிக்கிறார். தமிழக வரலாற்றிலேயே இப்படி ஒரு யோசனையை எந்த அப்பாவும் தர மாட்டார்.

ஷம்பிகா, லிங்காவிடம் மூன்று நிபந்தனைகளை விதிக்கிறார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு ஒரு வாரம் லிவ்-இன் வாழ்க்கையை நடத்தி. இருவரும் திருமணத்தில் ஒன்றிணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த இணைய தொடரின் கதை.

ஒரு வீடு நாயகன், நாயகி முழுக்க முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வேறு எதுவுமே நடைபெறுவதில்லை. மருந்துக்கூட திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை.
முதல் மூன்று எபிஸோடுகளில் நாயகன் லிங்காவின் நகைச்சுவை சில இடங்களில் சிரிப்பை வரவைக்கிறது, ஆனால் பல பல நேரம் எரிச்சலை தான் தருகிறது.

இருவருக்கும் கசமுசா நடக்குமா நடக்காதா ? இதை வைத்துக்கொண்டே முழு சீரிஸையும் ஓட்டுகிறார்கள்.

காதல்… காதலர்கள்… பெற்றோர்… சமூகம்… நண்பர்கள்- நலம் விரும்பிகள்- என இவர்கள் காட்டும் உலகம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. காதலர்களுக்கிடையே காதலிக்கும் போது பொறுமையும், பொறுப்பும் தேவை என்பது தான் மையம் ஆனால் அதை இவ்வளவு இழுத்து சொல்ல வேண்டுமா?

15 நாட்களில் எடுக்கப்பட்ட சீரிஸாம் சினிமா மொழி சுவாரஸ்யம் எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள். ஒளிப்பதிவு இசை பரவாயில்லை ரகம்.

பானி பூரி போல பார்த்து முடித்ததும் மிக எளிதாக மறந்து கடந்து போய்விடக்கூடிய வெப் தொடர்.