காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பாத்து ஆறுதலையும்.. அந்த நதியே காஞ்சி போயிட்டா.. என்ற டயலாக்கின் நிகழ்கால வடிவமாகி விட்டார் விஷால். ஆம்.. நடிகர் விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படம் வரும் மே 11 வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர வேலைகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் இந்தப் படத்திற்கு தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான அருள்பதி மறைமுகமாக தடை விதித்திருப்பதால் இதுவரையிலும் தியேட்டர்கள் உறுதி செய்யப்படவில்லையாம்.
விநியோகஸ்தர் அருள்பதி தமிழ்த் திரைப்பட துறையில் பலம் வாய்ந்த சென்னை, செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருப்பதால் அவருடைய உத்தரவின் பேரில்தான் ‘இரும்புத் திரை’ படத்திற்கு மறைமுகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக படத்தை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர் ஸ்ரீதரனும், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாரும் புகார் கூறியுள்ளார்.
இது பற்றி இன்று மதியம் நடைபெற்ற அவசர பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் இரும்புத்திரை படத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் முறைமுக தடை பற்றி விநியோகஸ்தர் ஸ்ரீதரனும், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாரும் பத்திரிகையாளர்களிடத்தில் விளக்கினார்கள்.
இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பி.டி.செல்வகுமார் பேசும்போது நடந்தவைகள், நடப்பவைகளை பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தார்.
அவர் பேசும்போது, “இந்த விநியோகஸ்தர் ஸ்ரீதரன் தயாரிப்பாளரும்கூட. ‘சவரக்கத்தி’ படத்தை இவர்தான் தயாரித்தார். இப்போது ‘இரும்புத்திரை’ படத்தை தமிழகம் முழுவதும் திரையிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார். ஆனால் இந்த ‘இரும்புத்திரை’ படத்தை வெளியிடாமல் தடுக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்துக்கிட்டேயிருக்கு. சென்னை செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதியும், அவர் சார்ந்துள்ள தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பும் இந்தப் படத்துக்கு மறைமுகமாக தடை போட்டிருக்காங்க.
இந்த பெடரேஷன் என்ற அமைப்பை வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் செயல்கள் அநியாயமானவை. எந்த நேரத்தில், எதற்காக எப்படி தடை போடுவார்கள் என்று யாருக்கும் தெரியலை. இப்போ ‘இரும்புத்திரை’ படத்துக்கு தடை போட்டிருக்காங்க. இந்தப் படத்துல நிறைய பணத்தை முதலீடு செஞ்சாச்சு. இப்போ எல்லா ஊர்லேயும் ‘தியேட்டர் கொடுக்கக் கூடாது’ன்னு சொல்லி வைச்சிருக்காங்க. இப்போ நாங்க என்ன செய்வது..?
நேற்று மதுரைல ஒருத்தருக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்தாச்சு. இன்னிக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்தாச்சு. அதையும் வாங்கின பின்னாடி திரும்பவும் போன் செஞ்சு ‘தியேட்டர் போடாதீங்க’ ன்னு சொல்றாங்க.இவங்களால எத்தனை மன உளைச்சல் தெரியுமா..? தயாரிப்பாளர் மூணு நாளா தூங்கலை ஸார். எனக்கும், என் மனைவிக்கும் மூணு நாளா தூக்கம் போச்சு. அப்படியொரு மனக் கஷ்டம்.
நான் இதுவரையிலும் 120 படங்களை விநியோகம் செஞ்சிருக்கேன். ஆனால் இதுவரையிலும் எந்தவொரு படத்திற்கும் பஞ்சாயத்து என்றும் கவுன்சிலில் போய் நின்றதில்லை. ஆனால் இந்தப் படத்திற்காகத்தான் பல நாட்கள் தூங்கவில்லை.எந்த ஊருக்கு போன் போட்டாலும் ‘தியேட்டர் போட வேணாம்ன்னு சொல்லிட்டாங்க ஸார்’.. ‘செக்கை பேங்க்ல போட வேணாம்ன்னு சொல்லிட்டாங்க ஸார்…’ன்னு சொல்றாங்க. எப்படி ஸார் சமாளிக்குறது..? தாங்கிக்கிறது..?
நான் என்ன ஸார் தப்பு செஞ்சேன்..? ‘புலி’ படத்துல வந்த பிரச்சினைக்காக அடுத்தடுத்து எனக்கும் சோதனைகள். அதை வெளில சொல்லக் கூடாதுன்னு பார்க்குறேன். சொன்னால் ஹீரோக்களையும் உள்ளே இழுக்க வேண்டி வரும். அந்தப் பிரச்சினைக்கப்புறம் இந்தத் தொழிலே வேண்டாம்ன்னு ஊருக்கே போயிட்டேன். அப்புறம் என் மனைவிகிட்ட ரொம்பப் பேர் போன் பண்ணி ‘ஸாரை திரும்ப வரச் சொல்லுங்க. . அவர் சர்வீஸ் தமிழ்ச் சினிமாவுக்கு அவசியம் தேவை’ன்னு நிறைய பேர் சொன்னது னாலதான் திரும்ப வந்தேன். ஆனால் இருக்க மாட்டேன். திரும்பவும் ஊருக்கே போயிடறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனால், அதுக்கு முன்னாடி இந்த மாபியா கும்பலுக்கு ஏதாவது ஒரு முடிவு கட்டியே ஆகணும்..
இவங்க மாபியா கும்பலைவிட கொடூரமானவங்களா இருக்காங்க. இருபத்தைஞ்சு வருஷமா இதைத்தான் இவங்க செஞ்சிட்டிருக்காங்க. இவங்களுக்கு யாரு கட்டப் பஞ்சாயத்து பண்றதுக்கான அதிகாரத்தைக் கொடுத்தது..? இந்த பெடரேஷனுக்கு படங்களை தடை செய்யும் அதிகாரத்தைக் கொடுத்தது யார்..? இது ஒட்டு மொத்த தமிழ்ச் சினிமா துறைக்கும் தெரிய வேண்டும்.
அருள்பதி போன்ல லைனுக்கு வரவே மாட்டார். அந்த சங்கத்துக்காரங்க யாருமே போன்ல பேச மாட்டாங்க. ஆனால் ஒரு லேடி மட்டும் போன் செய்து ‘ஸார் சொல்லிட்டார். தியேட்டர் போடாதீங்க’ன்னு சொல்லுவாங்க. அருள்பதிக்கும், விஷாலுக்கும் பிரச்சினை இருக்குன்னா அது அவர்களிடையே இருக்கும் தனிப்பட்ட பிரச்சினை. இதுக்கும் இந்தப் படத்தின் விநியோகஸ் தருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அப்புறம் எதுக்கு தடை போடுகிறார்கள்..?
அப்போ, எந்த விநியோகஸ்தரையும் இண்டஸ்ட்ரிக்குள்ள வந்து பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். விநியோகஸ்தர் தொழிலில் இறங்க வேண்டாம்ன்னு நேரடியா சொல்லுங்க. புதுசா வர்ற விநியோகஸ்தர்களை இப்படி தொழில் செய்ய விடாமல் தடுத்தால் எப்படி..?
யார் இந்த பெடரேஷனை ஆரம்பித்தது..? எதுக்காக இதை ஆரம்பிச்சாங்கன்னே தெரியலை. பல ஹீரோக்கள் இவர்களால் பாதிக்கப்பட்டிருக்காங்க. சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டு அழுதிருக்காரு. லாரன்ஸ் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ பட வெளியீட்டின்போது இவர்களால் அவமானப்பட்டுத்தப்பட்டு, கேவலப்பட்டு ‘இனிமேல் படமே பண்ண மாட்டேன்’னு சொல்லிட்டு ஒதுங்கியிருக்காரு.
கர்நாடகால இருந்து சூரப்பான்னு ஒருத்தர் வந்தாரு. ‘முடிஞ்சா இவன புடி’ன்னு ஒரு படத்தை பண்ணாரு. ஆனால் அவரை படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் கடைசிவரையிலும் கண்ணீர்விட வைச்சு 8 கோடி ரூபாய் நஷ்டத்துல படத்தை ரிலீஸ் செய்ய வைச்சாங்க. ‘லிங்கா’ படத்துக்கும் அவருக்கும் என்னங்க சம்பந்தம்..? அவர் அந்தப் படத்துல மேனேஜரா வேலை பார்த்தார். அவ்வளவுதான். அவர் போகும்போது ‘இந்தியாவிலேயே இது மாதிரியான ஒரு மாபியா கும்பலை நான் பார்த்ததே இல்லை’ன்னு சொல்லிட்டுப் போனாரு.
ஒரு பிரச்சினை இருக்குன்னா சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்ல வேண்டுமா.. இல்லையா..? இவருக்கும் அதுக்கும் சம்பந்தமில்லைன்னா.. இவருக்கு பாதிப்பு இல்லாமல்.. ‘அவரை வரச் சொல்லுங்க. கொஞ்சம் பிரச்சினை இருக்கு. பேசித் தீர்க்கணும்’ன்னு சொல்லணுமா வேண்டாமா..?
ஒரு தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் பிரச்சினை என்றால் அதனை முன்கூட்டியே சர்க்குலர் மூலமாக அனைவருக்கும் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு உடனேயே தீர்வு காணுங்கள். அதைவிட்டுவிட்டு படத்தைத் தயாரித்து முடித்து வெளியிடும் நேரத்தில் அந்தப் படத்திற்கு இதுபோல் பிரச்சினை செய்தால் படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு என்ன பாதுகாப்பு இருக்கு..? இப்போ இந்த ‘இரும்புத்திரை’ திரைப்படத்தை நானும், ஸாரும் சேர்ந்து வெளியிடுகிறோம். இந்தப் படத்து மேல இப்படியொரு சிக்கல் இருக்குன்னு நீங்க முன்னாடியே சொல்ல வேண்டுமா.. வேண்டாமா..?
இவங்களால பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க. ஏன் விநியோகஸ்தர்களும் சேர்ந்தே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த சினிமா துறையையும் அழுக வைச்சிட்டிருக்காங்க இந்த மாபியா கும்பல். திரைப்படத்தை விநியோகம் செய்யும்போது ஏரியாவுக்கு 5 சதவிகிதம் கமிஷன் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கும். அதற்காகத்தான் மறைமுகமாக ‘இரும்புத் திரை’ படத்திற்கு தடை விதித்திருக்கிறார்கள்.
ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தை வெளியிடும்போது ஒரு லட்சம் ரூபாய் பாக்கி வைத்ததற்காக ஒரு பெரிய படத்தை நிறுத்தி வைத்து டார்ச்சர் செய்திருக்கிறார்கள். இந்தத் தயாரிப்பாளர் இது வரைக்கும் ஐந்து படங்களைத் தயாரித்திருக்கிறார். ‘இதோட பட தயாரிப்பை நிறுத்திக் கலாமா…?’ என்று கேட்கிறார். இந்த மாபியா கும்பலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டியது பத்திரிகை யாளர்களாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது. இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
விஷால் நிறைய நல்லது செஞ்சிருக்காரு. நிறைய கஷ்டங்களை அனுபவிச்சு அவர் தமிழ்ச் சினிமா துறைக்கு நல்லதுதான் செஞ்சிருக்காரு. செஞ்சிட்டு வர்றாரு. அவருக்குக் கடன் பிரச்சினைகள் இருக்கலாம். கடன் பிரச்சினை இல்லாத தயாரிப்பாளர்களே இல்லை.
இன்றைக்கு அவருடைய சகோதரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். எத்தனையோ பிரச்சினைகளுக்கிடையே அவருக்கு இன்றைக்கு அப்படியொரு சோகம். அவரும் மனிதர்தானே. அவரும் எத்தனை பிரச்சினைகளைத்தான் சமாளிப்பார்..? அவர் கடனை திருப்பிக் கொடுக்காமல் ஓடப் போவதில்லை. இன்னிக்கு இல்லைன்னா.. நாளைக்கு வந்து படம் பண்ணி சம்பாதித்து கடனை அடைச்சுக்கப் போறார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கும் விஷாலுக்கே இந்தக் கதின்னா.. மற்ற சாதாரண தயாரிப்பாளர்களின் நிலைமையை நினைச்சுப் பாருங்க..!?
இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு வர வேண்டும். இதற்காக சாகும்வரையில் உண்ணாவிரதம்கூட இருக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன். நாங்க இதை சும்மா விடப் போவதில்லை. நாளைக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் புகார் செய்யப் போகிறோம். அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்திக்கப் போகிறோம். சி.பி.சி.ஐ.டி. போலீஸில் எங்களிடமிருக்கும் ஆதாரங்களைக் கொடுத்து விசாரிக்கச் சொல்லப் போகிறோம். கோர்ட்டில் கேஸ் போடத்தான் போகிறோம். எல்லாவிதமான சட்டப்பூர்வ வழிமுறைகளையும் நாங்க தேடப் போகிறோம். இந்த மாபியா கும்பலை, கட்டப் பஞ்சாயத்து கும்பலை தமிழ்ச் சினிமாவில் இல்லாமல் ஒழிக்க வேண்டும்…” என்று படபடப்பாகப் பேசி முடித்தார்.
கடைசியாக சில தியேட்டர் அதிபர்களிடத்தில் ‘இரும்புத்திரை’ படத்திற்கான தியேட்டர் ஒதுக்கீடு பற்றி பேசிய ஒலி நாடாவை ஒலிபரப்பினார்கள். அதில் தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான அருள்பதி சொல்லித்தான் தியேட்டர் ஒதுக்கீடு நிறுத்தப்பட்டிருப்பதாக அந்த தியேட்டர் உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.
வரும் வெள்ளியன்று வெளியாக இருப்பதாக அனைத்து விளம்பரங்களையும் வெளியிட்டுவிட்ட நிலையில் ‘இரும்புத்திரை’யின் நிலை என்ன ஆகும் என்பது இப்போதுவரையிலும் கேள்விக்குறிதான்..!