“நடிகையர் திலகம்” சாவித்திரி – ரியல் ஸ்டோரி தெரியுமா?

0
588

ஹைடெக்காகிப் போய் செல்போனில் உலகை வைத்துள்ள இப்போதைய தலைமுறயினரில் பலருக்கும் தெரியாத பெயர் சாவித்திரி. நம் தமிழ்த் திரையுலகில் ‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்பட்ட இவர் ‘சிவராக்கு கிலேடி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான குடியரசுத் தலைவர் விருதை 1960-ல் பெற்றவராக்கும். தயாரிப்பாளர், இயக்குநராகவும் கூட பணியாற்றியவர். ‘தென்னிந்திய மீனாகுமாரி’ என்று கூட அழைக்கப்பட்டார். அன்பு, பாசம், நேசம், காதல், கோபம், ஆவேசம், வீரம், நகைச்சுவை என எந்த வகையான உணர்ச்சியாக இருந்தாலும் இயல்பாகவும், தனித்துவம் வாய்ந்த திறனுடனும் வெளிப்படுத்தினார். பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவரும், தனது அபார நடிப்புத் திறனால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்தான் சாவித்திரி.

ஆம்.. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலதரப்பட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் சாவித்திரி. அதிலும் முழுக்க ஹீரோ நடிகர்களின் ஆக்கிரமிப்பின் காலத்தில், ரசிகப்பெருமக்களும் அந்த நடிகர்கள் பற்றிய பிரமிப்பில் இருக்கின்ற நிலையில், பெண் கதா பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களில் தனி இடம் பிடித்தவரிவர்.. அதாவது தெலுங்கு திரையுலகில் இன்றும் கதாநாயகர்களுக்கு நிகரான மரியாதையுடன் அணுகப்படும் நடிகை சாவித்திரி என்றால் அது மிகையல்லை.. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்த சாவித்திரிக்கு நடிப்பின்மீது ஆசை. அதற்காக சென்னை வந்த அவருக்கு கிடைத்ததெல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் ரோல்தான். அப்போது பிரபலமாக இருந்த ஜெமினி நிறுவனம் தங்களின் அடுத்த படத்திற்கு கலைஞர்கள் தேர்வு நடத்துவதாக கேள்விப்பட்டு சென்றவருக்கு ஏமாற்றம். அவரது பேச்சும் நடிப்பும் அங்கிருந்த நிர்வாகிக்கு திருப்தியை தராததால், ‘ஏன்மா நீயெல்லாம் நடிக்க வந்த’ என நக்கலாக கேட்கிறார். எரிச்சலுடன் அங்கிருந்து வெளியேறிய சாவித்திரிக்கு தெரியாது, நடிப்பு வரவில்லை என தன்னை வெளியேற்றிய அந்த நிர்வாகிதான் பின்னாளில் தனக்கு கணவராக வரப் போகிறவர் என்று. வாழ்வின் சுவாரஸ்யங்களும் விதியின் விளையாட்டுக்களும் அரிதாக எப்போதாவது கைகோர்க்கிற சந்தர்ப்பங்கள் இவைதான்.

எல்.வி பிரசாத் இயக்கிய ஒரு படத்திற்கு இரண்டாம் கதாநாயகி வேடம் தரப்பட, வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்ட சாவித்திரிக்கு படத்தின் முக்கிய நடிகையால் அதிர்ஷ்டம் அடித்தது. அது என்னவென்றால் முதல் இரு நாட்கள் படப்பிடிப்பிலேயே இயக்குநருக்கும் முக்கிய கதாநாயகிக்கும் முறுகல் போக்கு வந்ததால், படம் பாதியில் நின்றது. இதையடுத்து இயக்குநர் ஒரே முடிவாக இரண்டாவது கதாநாயகியை முதல்நாயகி ஆக்கினார். ‘என்னங்க இப்படி பண்ணிட்டீங்க யோசிச்சி முடிவெடுத்திருக்கலாம்’ என இயக்குநருக்கு துாபம் போட்டனர் உடனிருந்தவர்கள். எல்.வி பிரசாத் தெளிவாக இருந்தார் சாவித்திரிதான் தன் படத்தின் நாயகி என்பதில்.

ஆனால் படம் வெளியானபோது படத்திலிருந்து கழன்றுகொண்ட நடிகைக்கு மனதளவில் நன்றி சொன்னார் இயக்குநர். அத்தனை அற்புதமாக காதல், குறும்பு, கோபம், தாபம் என அத்தனை பக்கங்களிலும் அசத்தியிருந்தார் சாவித்திரி. எல்.வி பிரசாத் முதல் நடிகையிடமிருந்து எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பான நடிப்பை திரையில் தெறிக்கவிட்டிருந்தார் சாவித்திரி. மிஸ்ஸியம்மா என்ற அத்திரைப்படம் திரையிட்ட இடங்களில் திருவிழா கூட்டம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு போனார் சாவித்திரி. அடுத்த 20 வருடங்கள் அவரது கார் போர்டிகோ, தயாரிப்பாளர்களால் நிறைந்தே இருந்தது

அதிலும் அந்த மிஸ்ஸியம்மா திரைப்படம் சாவித்திரியின் திரையுல வாழ்க்கையில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆம்.. படம் முடியும் தருவாயில் சாவித்திரி படத்தின் கதாநாயகன் ஜெமினி கணேசன் மீது உண்மையிலேயே காதல் வயப்பட்டிருந்தார். இத்தனைக்கும் ஜெமினி ஏற்கனவே மணமானவர். காதலுக்குதான் கண் இல்லையே!

படம் வெளியாகி சில மாதங்களில் தம்பதிகளாகினர். மிஸ்ஸியம்மா தந்த புகழால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் சாவித்திரி. தமிழில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி ஆந்திராவில் என்.டி. ஆர் நாகேஷ்வரராவ் என ஜோடி சேர்ந்த சாவித்திரியின் புகழ் தொடர்ந்து இருபது வருடங்களில் கொடிக் கட்டி பறந்தது .

அப்போது டோலிவுட், கோலிவுட் திரையுலகை ஆட்டிப்படைத்த டாப் ஹீரோக்களே ’சாவித்திரியை ஜோடியா ஒப்பந்தம் செய்யுங்கள்’ என வெட்கத்தை விட்டுத் தயாரிப்பாளரிடம் கேட்கும் அளவு சாவித்திரியின் புகழ் உச்சத்தைத் தொட்டது. கூடவே ‘நீயெல்லாம் ஏன் நடிக்க வந்தே’ என முன்னொரு காலத்தில் அவமானப்படுத்திய ஜெமினியுடன் திருமணமாகி, அவருக்கு 2 குழந்தைகளும் பிறந்திருந்தன. பணம், புகழ், பிரபல்யம் என நன்றாகச் சென்றுகொண்டிருந்த சாவித்திரியின் வாழ்வில் விதி மதுவின் வடிவில் வந்தது.

புகழின் வெளிச்சத்தில் இருந்தபோது ஒருநாள் அவரின் நெருங்கிய தோழிகள் சிலர், ‘உனக்கு இருக்கும் திறமைக்கு ஏன் நீயே படத்தை தயாரித்து, இயக்கக் கூடாது’ என துாபம் போட்டனர். சாவித்திரி அதற்கு உடன்பட்டால் அவர்களுக்கு அதில் வருமானம் என்பதுதான் இதன் பின்னணி. எறும்பு ஊற கல்லும்தேயும் என்பார்களே…ஒருநாள் அந்த முடிவுக்கு உடன்பட்டார் சாவித்திரி. அவருக்கும் உள்ளுக்குள் அப்படி ஒரு ஆசை இருந்ததும் அவர் ஒப்புக்கொள்ள ஒரு காரணம். ஆனால் தயாரிப்பு ஜெமினியின் நண்பர். சாவித்திரி இயக்குகிறார். முதல் இரு படங்கள் வெற்றி. அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பில் சிக்கல் வர தானே படங்களை தயாரிக்கும் முடிவுக்கும் வந்தார்.

ஆனால் அப்படி தயாரித்த படங்கள் நஷ்டம், படு நஷ்டம் என தயாரிப்பு நிர்வாகிகளிடமிருந்து தகவல் வந்தது. இத்தனைக்கும் தியேட்டரில் கூட்டம் அலைமோதினாலும் சாவித்திரியின் நம்பிக்கை உகந்த நபர்கள் அதை மறைத்து நஷ்டக்கணக்கை காட்டி சாவித்திரிக்கு தூக்கம் வர விடாமக் செய்தனர். இதனிடையே படம் தயாரிப்பது நமக்கு வேண்டாத வேலை என்று அறிவுரை சொல்லியதால் சாவித்திரிக்கும் ஜெமினி கணேசனுக்குமான உறவில் பிணக்கு உருவாகியிருந்தது. சேர்ந்து வாழ்கிறார்களா பிரிந்து வாழ்கிறார்களா என ஊடகங்கள் குழப்பமடையும் அளவுக்கு நிலை இருந்தது. குழந்தைகளைப் பார்க்க மட்டுமே ஜெமினி, சாவித்திரியின் வீட்டுக்கு வந்துபோய்கொண்டிருக்கிறார் என பத்திரிகைகள் பரபரப்பாய் எழுதிக்கொண்டிருந்தன.

தயாரிப்பில் தொடர் தோல்வி, காதல் கணவரின் பிரிவு, பண நட்டம் இவற்றால் நிம்மதியிழந்த சாவித்திரி எப்போதோ அறிமுகமான மதுவை நாட ஆரம்பித்தார். உடல்நிலை சீர்கெட்டது. போதாக்குறைக்கு வருமானவரிப் பிரச்னையால் தி.நகர் அபிபுல்லா சாலையில் பார்த்துப் பார்த்து தான் கட்டிய வீடு ஜப்தி செய்யப்பட்டது என அடுத்தடுத்த அதிர்ச்சிகள் சாவித்திரி என்ற சகலகலாவல்லியை நிரந்தரமாக போதையின் பிடிக்கு இழுத்துச்சென்றது.

இதையடுத்து நம்பிய உறவுகளும் சந்தர்ப்பம் பார்த்து ஒதுங்கிவிட காலில் தங்க மெட்டி அணிந்த ஒரே நடிகை என சிலாகிக்கப் பட்ட சாவித்திரி நடுத்தர குடும்பத்தினர் கூட வாழத் தயங்குகிற ஒரு வீட்டிற்கு இடம் மாறும் அவலம் ஏற்பட்டது. இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் அவர் கண்முன் நிற்க ஒரு கட்டத்தில் சுதாரித்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனிடையே தன் உறவுக்கார பையனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்துவைத்து கொஞ்சம் நிம்மதியடைந்தார். மகளைப்பற்றிய கவலை சற்று மறந்தது. ஆனாலும் மகனின் எதிர்காலம் பற்றிய கவலை சாவித்திரியை சூழ்ந்துகொள்ள, நடிப்பில் சிவாஜியை திணறடித்தவர் என சொல்லப்பட்ட சாவித்திரி, இரண்டாம்,மூன்றாம் தர நடிகர்கள், சிறுசிறுவேடங்கள் என எந்த வாய்ப்பையும் விடாமல் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஒரு காலத்தில் கார்கள், பங்களாக்கள், கணக்கிடமுடியாத நகைகள் என மகாராணியாய் வாழ்ந்த அந்த நடிகை துணை நடிகை போன்று நடித்தது திரையுலகை கண்ணீர் விடவைத்தது. குறிப்பாக அவரது காதல் கணவர் ஜெமினியை. ஆனால் சாவித்திரிக்கு அருகில் இருந்தவர்கள் சாவித்திரிக்கு எந்த சூழலிலும் கணவரின் நினைவு வராமல் பார்த்துக்கொண்டார்கள். வெளிநண்பர்கள் மீண்டும் தம்பதிகள் சேர்ந்துவாழலாமே என அறிவுரை சொல்லும்போதெல்லாம் அந்த சிலர் அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்தனர். அதே சமயம் சாவித்திரிக்கு சர்க்கரை நோய் தாக்கத்தால் உடல்மெலிந்து அவ்வப்போது உடல்உபாதைகள் வேறு படுத்திக்கொண்டிருந்தது. அனுதாபங்கள், ஆலோசனைகள், அறிவுரைகள் எதையும் கேட்கும் நிலையில் சாவித்திரி அப்போது இல்லை. அவரது நோக்கமெல்லாம் தன் மகனின் எதிர்காலம். விதியின் விளையாட்டு வேறுமாதிரியாக இருந்தது. 80 களில் ஒருநாள் படப்பிடிப்பிற்காக மகனுடன் மைசூர் சென்ற சாவித்திரி சர்க்கரை நோய் பாதிப்புக்கு மத்தியிலும் கொஞ்சம் ‘நிம்மதி’ தேட அதுவே எமனாகிப்போனது.அப்’போதை’க்கு மயக்கமாகி கோமாவுக்கு போன சாவித்திரி அதிலிருந்து மீளாமலேயே உயிரை விட்டார். சாவித்திரி என்ற கலைமேதை தன் பயணத்தை முடித்துக்கொண்டார்.

இத்தனைக்கும் சொத்துக்களை இழந்து,ஹபிபுல்லா ரோடு பங்களாவை இழந்து, அண்ணா நகர் வீட்டில் இருந்த போதுகூட அவர் செய்த உதவிகள் பற்றி தெரிய வரும்போது ஆச்சரியம் தான் மிஞ்சுகிறது. ஒரு ரசிகர். தினமும் நூறு ரூபாய் மணியார்டர் சாவித்திரிக்கு செய்து வந்தவர்.திடீரென்று ஒரு நாள் தன் தொழிலில் நொடித்துப்போய் சாவித்திரியைக் காண வந்து தன் நிலையை சொல்கிறார். 6000 ரூபாய் இருந்தால் மீண்டும் பிசினசை துவங்கமுடியும். வீட்டில் உள்ள தன் ஷீல்டுகள் எல்லாவற்றையும் ஒரு சேட்டுக்கடையில் விற்று 10000 ரூபாய் அந்த ரசிகருக்கு கொடுத்தவர்.

அண்ணாநகர் வீட்டுக்கு இவருடைய பழைய டிரைவர் ஒருவரின் மகள் வருகிறார்.தன்னுடைய விலையுயர்ந்த சேலையை எடுத்து வீட்டு முன் இருக்கிற ரிக்‌ஷாக்காரனிடம் கொடுத்து விற்று வரச்சொல்லி,கிடைக்கும் பெருந்தொகையான பணத்தை அந்தப்பெண்ணின் திருமணச்செலவுக்கு கொடுத்தார்.

பெண்மைக்கான அத்தனை பலமும் பலவீனமும் கொண்டவராக பின்னாளில் சாவித்திரி பேசப்பட்டார். அதில் உண்மையில்லை. தன் கருணை உள்ளம், ஒரு பெண்ணுக்கே உரிய இயல்பான குணமான கணவன் மீதான அதீத பாசம் எவரையும் எளிதாக நம்பும் சுபாவம் கூடவே சில பலஹீனங்கள் இதுதான் சாவித்திரி என்ற கலைமேதையை வீழ்த்திய விஷயங்கள். அத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் சாவித்திரியின் அற்புதமான நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அவரது நினைவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திக்கொண்டிருக்கின்றன.

அப்பேர்பட்டவரின் திரை வரலாற்றைதான் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் எடுத்திருக்கிறார்கள்/ அதில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் சாவித்திரியை பிரதிபலிக்கிறாரா என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்