இயக்குனர் பாலா படங்கள் என்றாலே தனி ரகம். வழக்கமான பார்வையிலிருந்து ரொம்ப வித்தியாசம் என்று நினைத்து படம் எடுக்கும் அவர்தான் இப்படத்தை இயக்கினாரா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பாலாவின் நாச்சியார் படத்தை பார்த்தவர்கள் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக ஜோதிகாவின் போலீஸ் ஆக்ட், பிளே பாயாக சும்மானாச்சும் அலப்பறை செய்து கொண்டிருந்த ஜி.வி. பிரகாஷை நிஜமாகவே நடிக்கை வைத்திருப்பது, நாட்டு நடப்பு என படத்தின் சில விஷயங்கள் அநேக ரசிகர்களை கவர்ந்திருந்தது. படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறது. தற்போது இப்படம் முதல் நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 31 லட்சம் வசூலித்துள்ளது. இதனிடையே நாச்சியார் படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார் பாலாவை அழைத்து தட்டிக் கொடுத்து பாராட்டி உள்ளார்.
அது குறித்து அவர், “பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு balanced திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் come backஐ வாழ்த்தி வரவேற்போம்.
ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ… ? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்… அடடா…
நாச்சியார் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலீஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். (பெண்புலியை வீட்டிலேயே கட்டி வைக்காதீங்க சூர்யா… ) ஒளிப்பதிவு பிரமாதம்.
முதல் ஃப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலை நாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழ வைத்தார் என்பதை மறக்கவே முடியாது. எத்தனையெத்தனை வர்ணஜாலங்களை அந்த மேதை தூவி இருக்கிறார். உயிர்நாடியே இசைதான்.
கள்ளமறியாத பிஞ்சு உள்ளங்களின் வெள்ளைமன காதலையும், ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், காதல் செய்யும்போது குழந்தைதனமான குறும்புகளையும், நேரில் காணும்போது கோபத்தை செல்லமாய் காட்டி காணாதபோது தவியாய் தவித்து, என்னவன் எங்கோ தவிக்கிறான் என்று உணரும் நேரம் திசையறியாத பயணத்தை அழுகையுடன் தொடங்கிய அரசியின் அன்பும்… அவளை ஒரு குழந்தையாக பரிவுடன் பார்த்து அவளுக்காக தன் ஊன் உயிர் அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்யும் காத்தவராயனையும் தமிழ் சினிமா லேசில் மறக்காது. கனமாக தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்த பாலாவுக்கு கோடி நன்றிகள்…..” என்று தெரிவித்துள்ளார்